கருணாநிதியின் இரட்டை வேடத்துக்கு உதாரணம்
இந்தத் தருணத்தில் கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கு அவரது அறிக்கையிலிருந்தே ஓர் உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கருணாநிதி தனது அறிக்கையில், "இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அந்நியப் பெரும் நிறுவனங்களை அனுமதிக்க முடிவு செய்த இந்திய அரசைக் கண்டித்துக் கூறியிருக்கிறேனே, அது தான் மத்திய அரசை ஆதரிப்பதன் அடையாளமா?" என்று கூறி இருக்கிறார். இந்த விஷயத்தில் கருணாநிதி கண்டித்து அறிக்கை வெளியிட்டார் என்பது உண்மை தான். ஆனால், இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தி.மு.க. உறுப்பினர்கள் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு ஆதரவாகத் தான் வாக்களித்தனர் என்பதை கருணாநிதி மறுக்க முடியுமா? ஆனால், அதிமுக உறுப்பினர்கள் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிராக வாக்களித்தது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வாக்கெடுப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, "நிலையான மத்திய அரசு கவிழ்ந்து விடக் கூடாது என்ற என்னுடைய கருத்து இந்த வாக்கெடுப்பின் மூலமாக வெற்றி பெற்றிருக்கிறது" என்று கூறியிருந்தார். இது 6.12.2012 நாளிட்ட ‘முரசொலியில்' வெளிவந்துள்ளது. இது இரட்டை வேடமில்லையா? துரோகமில்லையா? என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும்.
தற்போது, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கவில்லை என்றாலும், தி.மு.க.வின் நிலையினை "மாநிலங்களவை தேர்தலுக்கு முன்பு", "மாநிலங்களவை தேர்தலுக்கு பின்பு" என்று தான் பார்க்க வேண்டும். மாநிலங்களவைத் தேர்தலில் தனது மகளை வெற்றி பெறச் செய்வதற்காக காங்கிரஸ் கட்சிக்கு கருணாநிதி தூது அனுப்பிய போது, "பார்லிமென்ட்டில் உணவு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற காங்கிரஸ் முயற்சி எடுக்கும் போது குறுக்கே நிற்கக் கூடாது" என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி விதித்ததாகவும், அதை கருணாநிதி ஏற்றுக்கொண்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. இதில் உள்ள உண்மை நிலையை கருணாநிதி தான் விளக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications