துபாயில் மலர்ந்த “தாமரை”.. 16 சிலைகள்! பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட 2வது இந்து கோயில் - என்ன ஸ்பெஷல்?
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயின் ஜெபல் அலி பகுதியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட இந்து கோயிலை அந்நாட்டு அமைச்சர் நஹ்யான் பின் முபாரக் திறந்து வைத்து இருக்கிறார்.
துபாயில் 1958 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த பழமை வாய்ந்த சிந்தி குரு தர்பாரின் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. தற்போது சிறப்பான கட்டமைப்புடன் கோயில் உருவாகி இருக்கிறது.
துபாயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக ஒரு இந்து கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கோயில் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி மறுத்த அந்நாட்டு அரசு இதனை தொடர அனுமதித்தது.
உற்று பாருங்க.. இதுதான் முகேஷ் அம்பானி துபாய் வீடு.. பனை மர செயற்கை தீவில் மகன் ஆனந்த்துக்கு மாளிகை

கோயில் திறப்பு
நேற்று இந்த கோயிலின் திறப்பு விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் துபாயின் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் கலந்துகொண்டு கோயிலை திறந்துவைத்தார். இந்த கோயில் திறப்பு விழாவில் இந்திய தூதர் சுஜாய சுதீர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அழகிய கட்டிடம்
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கோவில் கட்டுவதற்கான நிலம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. மிகவும் வித்தியாசமான அழகான கட்டிடக் கலையுடன் பிரம்மாண்டமாக இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. 80 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த இந்து கோயிலில் அனைத்து மதத்தினரும் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.

16 சாமி சிலைகள்
இந்து மதத்தில் பல்வேறு சாமிகளை வழிபடும் மக்களும் இங்கு வந்து செல்லும் வகையில் சிவன், கிருஷ்ணர், மகாலட்சுமி, விநாயகர், பெருமாள், முருகன் சிலைகள் என மொத்த 16 சாமி சிலைகள் இங்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. 16 சிலைகளுக்கு தனித்தனியே இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தாமரை
இந்த கோயில் கட்டிடத்தில் மிகப்பெரிய தாமரை வடிவமைக்கப்பட்டு காண்போரை கவர்கிறது. இந்த கோயிலில் பக்தர்களுக்கான மிகப்பெரிய கூடம், திருமண அரங்கம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இங்குள்ள திருமண அரங்கங்களை பயன்படுத்த QR கோட் ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.