பொய்யான தகவல்! அரியலூர் விவசாயி இறப்பு பற்றி காவல்துறை 'பரபர' விளக்கம்! அவதூறு பரப்பினால் ஆக்ஷன்..!
அரியலூர் : காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவர் இறந்தது குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்றும் காவல்துறை மீது அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
செம்புலிங்கம் என்பவரை காவல்துறை கைது செய்யவோ, காவல் நிலையத்திற்கு அழைத்து வரவோ இல்லை என்று அரியலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
பிரதமர் மோடி வருகையின் போது சதித்திட்டம்? எஸ்பிசிஐடி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்! அலர்ட் ஆகும் காவல்துறை

விவசாயி பலி - அதிர்ச்சி
அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் அருண்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது மாற்று சமூகத்தினர் அளித்த புகாரில் அவர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அருண் குமார் வீட்டுக்கு போலீசார் சென்றபோது, அவர் வீட்டில் இல்லாத நிலையில், அவரது குடும்பத்தினரை போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருண்குமாரின் தந்தை செம்புலிங்கம் பலியானார். செம்புலிங்கம், காவல்துறையினர் தாக்கியதால் படுகாயமடைந்து பலியானதாக கூறப்பட்டது.

அரசியல் தலைவர்கள் கண்டனம்
இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, விவசாயியின் உயிரிழப்புக்கு காவலர்கள் நடத்திய தாக்குதல் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகும் கூட, அதற்கு காரணமானவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யாதது கண்டித்தக்கது எனத் தெரிவித்திருந்தார். அதேபோல, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏவும் செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்வதோடு, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

காவல்துறை பரபர விளக்கம்
இந்நிலையில் இதுதொடர்பாக அரியலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த செம்புலிங்கம் என்பவர் இறந்தது குறித்து தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. செம்புலிங்கம் என்பவரை காவல்துறை கைது செய்யவோ, காவல் நிலையத்திற்கு அழைத்து வரவோ இல்லை.

போலீசார் கைது செய்யவில்லை
செம்புலிங்கம் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவதூறு - எச்சரிக்கை
காவல்துறை மீது அவதூறு பரப்பும் விதத்திலோ, வன்முறையைத் தூண்டும் விதத்திலோ, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது விசாரணையைத் திசை திருப்பும் நோக்கிலோ, யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.