தங்கம் கடத்தலுக்காகவே துபாயில் நடிகை ரன்யா ராவ் நகை கடை நடத்தியது அம்பலம்- விசாரணையில் பகீர்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்ப் பட நடிகை ரன்யா ராவ் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்குள் தங்கத்தை கடத்தி வருவதற்காகவே துபாயில் நகைக் கடையையே நடத்தி வந்தார் நடிகை ரன்யா ராவ் என்கின்றன மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு வட்டாரங்கள்.
வாகா தமிழ் படத்தில் அறிமுகமானவர் நடிகை ரன்யா ராவ். கர்நாடகாவைச் சேர்ந்த ரன்யா ராவ், அண்மையில் துபாயில் இருந்து 12 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த போது பெங்களூர் விமான நிலையத்தில் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கொட்டின.

தற்போது ரன்யா ராவ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தையான கர்நாடகா மாநில டிஜிபி மீதும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ரன்யா ராவின் கூட்டாளியான நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், விசாரணையின் போது தம்மை அடித்து துன்புறுத்தினர்; சாப்பாடு தராமல் பட்டினி போட்டனர் என்றெல்லாம் அதிர்ச்சி புகார்களையும் ரன்யா ராவ் தெரிவித்திருந்தார். அவரது ஜாமீன் மனு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், நடிகை ரன்யா ராவ், இந்தியாவுக்குள் தங்கத்தை கடத்தி வருவதற்காகவே, துபாயில் நகைக் கடையை நடத்தி வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. தங்கக் கட்டிகளை நகைக் கடைக்காக வாங்குவதாக ஏமாற்றி, இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளார்; அப்படி கடத்திய தங்க கட்டிகளை அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார் ரன்யா ராவ் எனவும் கூறப்படுகிறது. முதலில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்காக தங்கத்தை கடத்தி வந்தவர் என கூறப்பட்டாலும் தங்கக் கடத்தலின் மகாராணியாகவே கோலோச்சி வந்தவர்தான் ரன்யா ராவ் என்கின்றன கர்நாடகா தகவல்கள்.
தங்கக் கடத்தல் தொழிலை கச்சிதமாக செய்வதற்காகவே, துபாயில் நகைக் கடை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடைகள் என பக்கா ஸ்கெட்ச் போட்டவர்தான் ரன்யா ராவ் என்கின்றன மத்திய விசாரணை அமைப்புகள்.












Click it and Unblock the Notifications