இது ரயில்வே நிலையமா! வாவ்.. வாவ்.. ஏர்போர்ட் மாதிரி பிரம்மாண்டமா இருக்கே.. கலக்கும் பெங்களூர்!
பெங்களூரு: விமான நிலையத்திற்கு நிகரான வசதிகளுடன் பெங்களூரில் 'சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையம்' அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளதால் இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் ஏழை மக்கள், நடுத்தர மற்றும் செல்வந்தர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பிடித்த போக்குவரத்து பயணம் என்றால் அது ரயில் பயணம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ரயில் பயணத்தில் பல சுவாரசியங்கள் இருக்கும்.
அதிலும், இந்தியா போன்ற மக்கள் தொகை மற்றும் பெரும் பரப்பளவு கொண்ட நாட்டில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பெருமளவு உதவுவது ரயில் பயணமேயாகும். அதற்கேற்ப ரயில்வே நிர்வாகமும் ரயில் பயண போக்குவரத்தை மேம்படுத்துவது, ரயில் நிலையங்களை பராமரிப்பது மற்றும் உலக நாடுகளுக்கு இணையாக மேம்படுத்துவது போன்ற பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.

விமான நிலையத்திற்கு நிகரான வசதி
அந்த வகையில், தற்போது ரயில்வே நிர்வாகத்தினர் ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக புதிதாக பல்வேறு திட்டங்களை காலத்திற்கு ஏற்ப செயல்படுத்தி வருகின்றதனர். குறிப்பாக மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் பயணிகள் வசதிக்காக கூடுதல் சிறப்பம்சங்களை மேம்படுத்த சமீப காலமாக ரயில்வே நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விமான நிலையத்திற்கு நிகரான வசதிகளுடன் கூடிய ரயில் நிலையம் திறக்கப்பட்டுள்ளது பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

மூன்றாவது ரயில் முனையம்
பெங்களூருவில் மூன்றாவது ரயில் முனையமாக உருவாகியிருக்கும் 'சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையம்' வழக்கமான ரயில் சந்திப்பு நிலையம் போல இல்லாமல் விமான நிலையம் போல அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 6-ம் தேதி இந்த ரயில் நிலையம் பயணிகள் செயல்பாட்டுக்கு வந்தது. பெங்களூருவில் பனஸ்வாடிக்கும் பையப்பனஹள்ளிக்கும் இடையில் 4 ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த ரயில் நிலையம். தற்போது ரயில் பயணிகளும் இந்த ரயில் நிலையத்தில் இறங்கி செல்பி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

என்னென்ன வசதிகள்
இந்த ரயில்வே நிலைய திட்டத்திற்காக மொத்தம் 314 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தைப் போலவே காட்சியளிக்கும் பிரம்மாண்ட நுழைவாயில், பயணிகள் காத்திருக்கும் பொதுத்தளம், விஐபி காத்திருப்பு அறை, உணவுக்கான பிரத்யேக இடம், ரியல்-டைம் பேசஞ்சர் தகவல் அமைப்பு என இதன் வசதிகளை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு பிரமாண்டமாக, நவீன அம்சங்களுடன் இந்த ரயில் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் ஏசி வசதி
இதேபோல், முற்றிலும் ஏசி வசதி கொண்ட இந்த ரயில் நிலையம், சோலார் ரூப்டாப் பேனல்ஸ், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஆகியவையும் கொண்டது. 250 நான்கு சக்கர வாகனங்கள், 900 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு பெரிய பார்க்கிங் வசதியும் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டே அனைத்து பணிகளும் நிறைவுபெற்று ரயில் நிலையத்தை திறக்க திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன் பிறகு பல்வேறு தாமதங்களால் மூன்று ஆண்டுகள் கழித்து திறக்கப்பட்டது. வாரத்திற்கு மூன்று நாட்கள் இயங்கும் பன்ஸ்வாடி - எர்ணாகுளம் (no. 12684) ரயில்தான் முதல் ரயிலாக இங்கிருந்து இயக்கப்பட்டது. சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையம் பசுமை முனையமாக (கிரீன் ஸ்டேஷன்) இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications