1959 டூ 2023.. நிலவில் முதலில் தரையிறங்கிய நாடு எது தெரியுமா? இந்தியாவின் தாமதத்துக்கு என்ன காரணம்?
பெங்களூர்: சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறங்கி சாதித்து ஆய்வை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் நிலவில் முதல் முதலாக தரையிறங்கிய நாடு பற்றியும், ‛சாப்ட் லேண்டிங்' முறையில் எந்தெந்த நாடுகள் எத்தனை முறை தரையிறங்கி உள்ளன என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
இந்தியா சார்பில் நிலவு குறித்த ஆராய்ச்சியை இஸ்ரோ விண்வெளி மையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2008 ல் சந்திரயான் 1 திட்டம் மூலம் நிலவின் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு 2019ல் சந்திரயான் 2 திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த சந்திரயான் 2 திட்டத்தின் மூலம் ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டது. மாறாக நிலவில் கால்பதிக்கும் இந்தியாவின் மயிரிழையில் மிஸ்ஸானது. அதாவது நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.
இதையடுத்து சந்திரயான் 2 திட்டத்தை அடிப்படையாக வைத்தும், அதில் எழுந்த பிரச்சனைகளை உயர் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியும் சந்திரயான் 3 திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சந்திரயான் 3 திட்டம் மூலம் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. ‛சாப்ட் லேண்டிங்' முறையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி சாதித்ததோடு ரோவர் கருவி வெளியே வந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து வருகிறது. இதன்மூலம் நிலவின் தரையிறங்கிய 4வது நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அதோடு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பட்டத்தை இந்தியா தன்வசமாக்கி உள்ளது.
ரஷ்யா: இத்தகைய சூழலில் தான் நிலவில் முதல் முதலாக தரையிறங்கிய நாடு, ‛சாப்ட் லேண்டிங்' முதல் தரையிறங்கிய நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்த்தால் நிலவில் முதல் முதலாக தரையிறங்கிய நாடு என்பது ரஷ்யாவாகும். அதாவது ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்த சமயத்தில் 1959 செப்டம்பர் 12ம் தேதி நிலவில் விண்கலத்தை தரையிறக்கியது. இது ஹார்ட் லேண்டிங் முறையில் நடந்தது.
அதன்பிறகு 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1966ல் சாப்ட் லேண்டிங் முறையில் ரஷ்யா விண்கலத்தை நிலவில் தரையிறக்கியது. இதன்மூலம் ஹார்ட் லேண்டிங், சாஃப்ட் லேண்டிங் முறையில் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நாடுகள் பட்டியலில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா: அதன்பிறகு 2வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. நிலவில் ரஷ்யா 2வது முறையாக தரையிறங்கிய சில மாதங்களுக்கு பிறகு 1966ல் அமெரிக்கா நிலவில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் விண்கலத்தை தரையிறக்கியது. மொத்தம் 11 முறை அமெரிக்கா சாஃப்ட் லேண்டிங் முறையில் நிலவில் தரையிறங்கி உள்ளது.
இதன்மூலம் அதிக முறை சாப்ட் லேண்ட் முறையில் வெற்றிகண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதுமட்டுமின்றி நிலவில் மனிதர்களை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையும் அமெரிக்காவுக்கு தான் உள்ளது. மொத்தம் 5 விண்வெளி திட்டத்தின் மூலம் 12 பேரை நிலவில் அமெரிக்கா நிலவுக்கு அனுப்பி வெற்றி கண்டுள்ளது.
சீனா: ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்த படியாக 2013ல் நிலவில் தரையிறங்கிய 3வது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. அதன்பிறகு 2019 ஜனவரி 3ல் நிலவின் ரோவரை தரையிறக்கி ஆய்வும் செய்தது. இதன்மூலம் ரோவரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெயரை சீனா பெற்றுள்ளது.
இந்தியா: இந்த வரிசையில் தான் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா நிலவில் கால்பதித்துள்ளது. நேற்று விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதன் மூலம் இந்த சாதனையை இந்தியா படைத்துள்ளது. மேலும் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்டவறை நிலவின் தென்துருவத்தில் ஆய்வுக்காக விண்வெளி கலன்களை அனுப்பவில்லை.
ஆனால் இந்தியா நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்கி உள்ளது. இதன்மூலம் தென்துருவத்தில் முதல் முதலாக கால்பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் முன்காலத்தில் விண்வெளி திட்டத்துக்கு போதிய நிதி, தொழில்நுட்பம் என்பது இல்லாத நிலை இருந்தது. இதனால் தான் நிலவு பயணம் என்பது தாமதானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications