குட்பை.. காங்கிரஸை விட்டுவிட்டு பாஜகவில் இணையும் நடிகை ரம்யா? பரபரக்கும் கர்நாடகா தேர்தல்.. பின்னணி!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான நடிகை ரம்யா விரைவில் பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்வி தான் தற்போது அம்மாநில அரசியலில் ஹாட் டாபிக்காக உள்ளார். இந்த தகவல் எப்படி பரவுகிறது? இதன் பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சித்து வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
மேலும் தற்போதைய சூழலில் பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), ஆம்ஆத்மி கட்சியினர் அமைப்பு ரீதியாக தங்கள் கட்சிகளை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு, தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸில் நடிகை ரம்யா
இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நடிகை ரம்யா பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் பரவி வருகிறது. தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்துள்ள ரம்யா, கர்நடாக மாநிலம் மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருந்தார். அதன்பிறகு 2019 ல் நடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவராக செயல்பட்டார். அதன்பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

பாஜகவில் இணையும் ரம்யா?
அதன்பிறகு கர்நாடகாவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் நடிகை ரம்யா ராகுல் காந்தியுடன் பங்கேற்றார். இந்நிலையில் தான் கர்நாடகா தேர்தல் நெருங்கும் நிலையில் ரம்யா தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அதாவது நடிகர் சுதீப்பை காங்கிரஸ் கட்சியில் இணைக்க நடிகை ரம்யா மூலம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதில் சுதீப் இன்னும் எந்த முடிவும் எடுக்காத நிலையில் தான் நடிகை ரம்யா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

காரணம் என்ன?
இதற்கு முக்கிய காரணம் தற்போதைய பாஜக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் சுதாகரை அவர் அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பேசியது தான் காரணம். அமைச்சர் சுதாகர் சிக்பள்ளாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2013ல் முதல் முறையாக காங்கிரஸில் இருந்து களமிறங்கிய சுதாகர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2018 ல் மீண்டும் காங்கிரஸ் சார்பில் வென்ற இவர் பாஜகவுக்கு தாவினார். 2019 இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். இந்நிலையில் தான் வரும் தேர்தலையொட்டி அவர் சிக்பள்ளாப்பூர் உற்சவம் என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சி கடந்த 7 ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்தது.

ரம்யா பேசியது என்ன?
பாஜக அமைச்சர் சுதாகர் நடத்திய நிகழ்ச்சியில் ரம்யா பங்கேற்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி நிகழ்ச்சியில் ரம்யா பேசியது அவர் பாஜகவில் இணைய உள்ளாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியி்ல நடிகை ரம்யா பங்கேற்று பேசுகையில், ‛‛ஹீரோவை விட சுதாகருக்கு இங்கு ஆதரவு நிறைய உள்ளது. சுதாகர் முதலில் எனது தந்தைக்கு பழக்கமானார். அதன்பிறகு என்னுடன் நண்பரானார். நாங்கள் இருவரும் க்ளோஸ் ப்ரண்ட் ஆக இருந்தாலும் கூட இதுவரை நான் ஒன்றை சொல்லவில்லை. அதனை இப்போது சொல்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். ஏனென்றால் சுதாகர் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் இல்லை. இருப்பினும் அரசியலில் கடுமையாக உழைத்து சிக்பள்ளாப்பூரில் வளர்ச்சியடைய வைத்து பெயர் பெற்றுள்ளார். மக்கள் முகத்தில் இருக்கும் சந்தோஷம் மூலம் இதனை நான் அறிகிறேன்'' என்றார்.

காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி
இந்நிலையில் தான் ரம்யாவின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக அமைச்சரான சுதாகர் கடந்த 2019 ல் காங்கிரஸ் - ஜனதாதளம்( எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு ‛தாமரை' கட்சிக்கு தாவினார். இந்நிலையில் தான் ரம்யா அவரது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு நடிகை ரம்யா பாஜகவுக்கு செல்லலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதுபற்றி ரம்யா எதுவும் இன்னும் கூறவில்லை.












Click it and Unblock the Notifications