ம்மா.. நொறுங்கிய இதயம்.. 2 நாட்களாக தாயின் சடலத்துடன் தூங்கிய 11 வயது மகன்.. விக்கித்து போன உறவுகள்
தனது தாய் உயிரிழந்தது தெரியாமல் 11 வயது மகன் அவருடன் இரண்டு நாட்களாக உறங்கியுள்ளார்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் 11 வயது சிறுவன் ஒருவன் இரண்டு நாட்களாக தாயுடன் தூங்கியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் ஆர்.டி.நகர் அருகே உள்ள கங்கா நகரில் அன்னம்மா (45) எனும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது கணவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அதற்கு முன்னர் வரை சொந்த வீட்டில் வசித்து வந்த அன்னாமாவுக்கு கடன் அதிகமானதால் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். குடும்பத்திற்கு வருமானம் ஏதும் இல்லாததால் தனது 11 வயது மகனை படிக்க வைக்க வீட்டு வேலைக்கு சென்றிருக்கிறார்.
இவருக்கு பேச்சு திறன் குறைபாடு இருந்திருக்கிறது. எனவே இவர் என்ன பேசுகிறார் என்பதை அவரது மகனை தவிர வெளியாட்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் அன்னம்மா. மருத்துவமனைக்கு சென்று பார்த்த பின்னரும் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே படுத்த படுக்கையாகவே இருந்திருக்கிறார்.

பள்ளி
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அன்னம்மா படுக்கையிலிருந்து எழுந்திரிக்கவில்லை. மகனும் தாய் உறங்குகிறார் என்று நினைத்து பள்ளிக்கு சென்றிருக்கிறான். காலையில் பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளான். முதல் நாள் இரவில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சிறுவனுக்கு உணவு கொடுத்து உதவியிருக்கிறார்கள். அடுத்த நாளும் சிறுவன் பள்ளிக்கு சென்று திரும்பியிருக்கிறான். முந்தைய நாளை போலவே அன்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் உணவு கொடுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் சிறுவன் பள்ளிக்கு கிளம்பும் போது அன்னம்மாவை பார்த்திருக்கிறார்.

சந்தேகம்
அப்போது அன்னம்மாவின் மூக்கு மற்றும் காதில் இருந்து வித்தியாசமான திரவம் கசிந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த சிறுவன் தனக்கு உணவு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரரிடம் இது குறித்து கூறியிருக்கிறார். அவர்கள் வந்து பார்க்கையில் அன்னம்மா உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அன்னம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்குப்பதிவு
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "அன்னம்மாவுக்கு பெரிய அளவில் சொந்தம் ஏதும் கிடையாது. அவருடைய சகோதரர் ஒருவர் வெளியூரில் வசித்து வருகிறார். அன்னம்மா அன்றாட தேவைகளுக்காக வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சிறுவனும் அம்மா உறங்குகிறார் என்று நினைத்து அருகில் தூங்கியுள்ளான். ஆனால் அக்கம் பக்கத்தினருக்கு வாடை அடித்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் சிறுவனை விசாரித்ததில் அன்னம்மாவின் காது மற்றும் மூக்கில் இருந்து திரவம் கசிவதை கூறியுள்ளான். எனவே அவர்கள் எங்களை அழைத்தனர்.

சலசலப்பு
இயற்கைக்கு மாறான வகையில் மரணம் என்று நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம். அன்னம்மாவின் சகோதரனின் வீட்டில் சிறுவன் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளான்" என்று கூறியுள்ளனர். தாய் இறந்தது தெரியாமல் இரண்டு நாட்களாக அவருடன் மகன் உறங்கியுள்ள சம்பவம் பெங்களூரில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications