B28 புல்லட் ரயில்.. சென்னை டூ மதுரை 2 மணி நேரம்தான்... இந்தியாவின் புதிய 'அரசன்'.. முழு விவரம்
பெங்களூர்: சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ளது போன்று புல்லட் ரயில் இந்தியாவில் வர வேண்டும் என்பது பல இந்தியர்களின் கனவு. இந்த கனவு அடுத்த ஆண்டு நிறைவேற போகிறது. பெங்களூரில் பி 28 புல்லட் ரயில் தயாராகி வருகிறது. இந்த ரயில் மும்பை-அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சூரத்-வாபி இடையேயான 97 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில் ஓடப்போகிறது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாகும் புல்லட் ரயில் ஆகும். இந்த ரயில் மட்டும் சென்னை மதுரை இடையே ஓடினால் வெறும் 2 மணி நேரத்தில் போய்விட முடியும். இதன் விவரத்தை பார்ப்போம்.
இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்த வெற்றிகரமான ரயில் என்றால் வந்தே பாரத். அதேபோன்று புல்லட் ரயில் தயாராகிகிறது. இந்த புல்லட் ரயில் திட்டம் இந்தியாவில் ரயில்வே துறையில் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான பணிகளை மத்திய ரெயில்வேத் துறையின் கீழ் இயங்கக் கூடிய நேஷனல் அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பொதுத் துறை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டம் புல்லட் ரயிலுக்குப் பெயர் போன ஜப்பான் நாட்டுடன், இந்தியா கூட்டு முயற்சியில் செயல்படுத்தி வருகிறது

சாதாரணமான தண்டவாளப் பாதையில் புல்லட் ரயில் இயங்காது. இதற்கென பிரத்தியேக உயர் மட்டப் பாதை அமைக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். அதன்படி, மும்பை-அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு இந்த புல்லட் ரெயில் இயக்கத் திட்டமிடப்பட்டு, அதில் 434 கி.மீ. தூரத்துக்கு தூண்கள் அமைக்கும் பணியும், 343 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலங்கள் அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுவிட்டன. முழுவதுமாக பணிகள் நிறைவு பெற இன்னும் நாள் எடுக்கும் என்பதால், தற்போது முதற்கட்டமாக சூரத்-வாபி இடையேயான 97 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில் இயக்கப்பட ஏதுவாக அங்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற 'ஷின்கான்சென்' என்ற ரயில்களையே வாங்க மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் விலை அதிகம், அவர்களின் சொந்த சிக்னல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டிய நிபந்தனை இருந்தது. இதனால் புல்லட் ரயில் இந்தியாவுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்தது. அதன்படியே 'பி28' புல்லட் ரயில் உருவாகிறது. இந்த புல்லட் ரயில் முழுக்க முழுக்க "வடிவமைப்பு முதல் தயாரிப்பு வரை" இந்தியாவிலேயே உருவாக்கப்படுகிறது. பெங்களூருவின் பி.இ.எம்.எல். தொழிற்சாலையில் இந்த ரெயில் தயாரிக்கப்படுகிறது.
மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் வகையில் 'பி28' புல்லட் ரயில் வடிவமைக்கப்படுகிறது. அதிவேகத்தில் செல்வதற்கு ஏதுவாக ரயிலின் முன்பகுதி நீண்ட மூக்கு அமைப்பைக் கொண்டிருக்கும். அத்துடன் தானியங்கி கதவுகள், தீ தடுப்பு அமைப்புகள், விபத்து காலங்களில் உடனடியாக ரயில் நிறுத்தும் ஆட்டோமேட்டிக் டிரைன் புரொடக்சன் தொழில்நுட்பம், அதிர்வு இல்லாத சொகுசு பயணம், சுழலும் இருக்கைகள், ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் பலகைகள், உயர்தர கழிவறை வசதிகள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
ரயிலின் தயாரிப்பு பணிகள் 2027 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, அனைத்து சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு, 2027 ஆகஸ்டு மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாம். இந்த ரயிலில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றால் வெறும் 2மணி நேரம் தான் ஆகும். இந்த ரயில் மட்டும் நடைமுறைக்கு வந்தால் பெரிய அளவில் மாற்றங்கள் வரும்.












Click it and Unblock the Notifications