பள்ளி பேருந்தை வழிமறித்து தாக்கிய கும்பல்.. கதறிய மாணவர்கள்.. அதிர்ச்சியில் உறைந்த பெங்களூர் மக்கள்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் அதிர்ச்சி தரும் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அங்கே பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற பேருந்தைத் தடுத்து நிறுத்திய அடையாளம் தெரியாத கும்பல், அந்த பஸ் டிரைவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் பேருந்து கண்ணாடியையும் உடைத்ததாகக் கூறப்படுகிறது.
சமீப காலமாகவே சாலைகளில் எதாவது வாகனம் ஓவர்டேக் செய்தாலே.. அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துள்ளன. இதை ஆங்கிலத்தில் Road Rage என்கிறார்கள். பெங்களூரில் இப்போது அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது.

தாக்குதல்: அதாவது பள்ளி வேனை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்துத் தாக்கியுள்ளது. அதாவது காரை ஓவர்டேக் செய்ததால் பள்ளி வாகனத்தை மறித்து ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த வாரம் எலக்ட்ரானிக் சிட்டியில் நடந்துள்ளது. இதற்கிடையே இது குறித்த வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. இது பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கும்பல் ஒன்று பள்ளி வேனின் டிரைவரை பேருந்தில் இருந்து வெளியே இழுத்து சாலையில் போட்டு சரமாரியாக அடிப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த பேருந்து முழுக்க குழந்தைகள் இருந்த போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுவே இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாக் வீடியோ: கர்நாடகா போர்ட்ஃபோலியோ என்று ட்விட்டர் பக்கம் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. மேலும், "பிற்பகல் 4 மணியளவில், எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ட்ரீமிஸ் பள்ளியால் இயக்கப்படும் ரூட் 35 பள்ளி பேருந்தை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. ஸ்கார்பியோ காரில் வந்த அந்த கும்பலில் 6 முதல் 8 பேர் வரை இருந்தனர்.
பள்ளி பேருந்தை ஆக்ரோஷமாகப் பின்தொடர்ந்து இந்த கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் கைகளில் உலோகப் பொருட்களும் இருந்துள்ளன. பேருந்தின் உள்ளே குழந்தைகள் இருக்கும் போதே அவர்கள் பேருந்தின் ஜன்னலை உடைத்துத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்து பேருந்தின் உள்ளே இருந்த குழந்தைகள் பயந்து துடித்துப் போனார்கள்" என்று பதிவிட்டுள்ளது.
சித்தராமையாவை தாக்க முயற்சி? திடீரென ஆக்ரோஷமாக மேடையேறிய இளைஞரால் பரபரப்பு! என்ன நடந்தது?
டிரெண்டான வீடியோ: இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. பலரும் இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களது செயல் அந்த பேருந்து உள்ளே இருந்த அனைத்து மாணவர்களையும் ஆபத்தில் தள்ளி உள்ளதாகப் பெங்களூர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பெங்களூர் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
குற்றவாளிகள் மீது ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பெங்களூர் போலீசார் தெரிவித்தனர். பெங்களூரு ஊரக மாவட்டத்தின் ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குழந்தையின் பெற்றோர்: இந்தச் சம்பவம் குறித்து அந்த பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “இது என் மகனின் பள்ளியில் நடந்த சம்பவம் தான். இதைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. காரில் வந்தவர்கள் வாகனத்தைப் பாருங்கள் கருப்பு நிற டிண்ட் போட்டுள்ளனர். இதுவே ஒரு விதிமீறல். போலீசாரிடம் இருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்றே தெரியவில்லை" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications