மாட்டிகினாரு ஒருத்தரு! வயிற்று வலினு பொய் சொல்லிட்டு கூர்க் சுற்றுலா! மேனேஜரிடம் சிக்கிய ஊழியர்!
பெங்களூர்: வயிற்று வலி என கூறி கூர்க் பகுதிக்கு சுற்றுலா சென்ற ஊழியர் அவரது மேனேஜரிடம் சிக்கியதால் அவருக்கு வொர்க் பிரம் ஹோம் ஆப்ஷனை கூட அந்த மேனேஜர் தருவதில்லை என்ற தகவல் வைரலாகி வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் லீவு போட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. பாடத்தை நண்பனிடம் கேட்டு வாங்கிக் கொண்டு விடுப்பு விண்ணப்பத்தை அளித்தால் போதுமானது.

ஆனால் வேலைக்கென சென்றுவிட்டால் அடிக்கடி லீவு எடுப்பது என்பது இயலாத காரியம். பல நிறுவனங்களில் வாரத்தில் சனி, ஞாயிறு விடுமுறையும், அரசு விடுமுறைகளும் கொடுக்கப்படுகின்றன. அப்படி இருக்கும் போது மற்ற 5 நாட்களிலும் விடுப்பு என்பது சரியான அணுகுமுறை அல்ல.
அதாவது முக்கியமான மருத்துவ அவசரம், ரத்த சொந்தங்களுக்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு விடுப்பு, ஊழியருக்கே உடல்நலக் குறைவு உள்ளிட்டவைகளுக்கு விடுப்பு எடுத்தல் நியாயமானது. ஆனால் ஒன்றுமே இல்லாமல் வயிற்று வலி, தலைவலி, காய்ச்சல் என கூறி சிலர் விடுப்பு எடுப்பது என்பது தவறானது.
அப்படியும் சிலர் பாட்டி இறந்துவிட்டார்கள், தாத்தாவை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள் என்று இல்லாத உறவுக்கு துடிப்பது போல் நடிப்பார்கள். இதை எல்லாம் அறிந்துதான் மேனேஜர் என்பவர் யார் எப்படி, எதற்காக விடுப்பு எடுப்பார்கள் என்பதை அறிந்திருப்பார்கள்.
அந்த ஊழியர் நேர்மையானவரா என பார்த்து விடுப்பும் கொடுப்பார்கள். இந்த நிலையில் ஒரு ஊழியர், தனது மேனேஜரிடம் தனக்கு வயிற்று வலி இருப்பதால் தன்னால் அலுவலகத்திற்கு வர இயலாது என கேட்டுள்ளார். அவரும் Take care என கூறி விடுப்பும் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த ஊழியரின் திட்டமே வேறு, வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துவிட்டால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதை வைத்து கூர்க்கிற்கு சுற்றுலா சென்றாராம்.
கூர்க் சென்ற அந்த ஊழியர், அங்கிருந்த வானிலையால் குஷியாகி நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒரு ரீல்ஸ் பிரியர், ரீல்ஸ் எடுத்து எதேச்சையாக போட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது.
இந்த வீடியோ மேனேஜருக்கு போனது. அவருக்கு அதிர்ச்சி! வயிற்று வலி என கூறியவர், கூர்க்கில் இப்படி ஆட்டம் போடுகிறாரே என கடுப்படைந்து, திங்கள்கிழமை அலுவலகத்திற்கு வந்த அந்த நபருக்கு ரீல்ஸை போட்டு, "உங்களுடைய வயிற்று வலி தீர்ந்துவிட்டது என நம்புகிறேன்" என தெரிவித்தார்.
இதை பார்த்ததும் அந்த ஊழியரின் முகத்தில் ஈயாடவில்லை. அதிலிருந்து அந்த ஊழியருக்கு வொர்க் ஃபிரம் ஹோம் ஆப்ஷனை கூட அந்த மேனேஜர் தருவதில்லை. இந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.
மன்னன் படத்தில் தியேட்டரில் முதல் இரு டிக்கெட்டுகளை வாங்கினால் அவர்களுக்கு தங்க செயினும் தங்க மோதிரமும் பரிசு என்பார்கள். இதை பெற ரஜினியும், கவுண்டமணியும் தங்களது முதலாளி விஜயசாந்தியிடம் மாமா செத்துவிட்டார், அடக்கம் செய்ய வேண்டும் என கூறி லீவு கேட்பார்கள்.
பிறகு எப்படியோ தியேட்டரில் அடித்துபிடித்து டிக்கெட் வாங்குவார்கள். ஆனால் அந்த தங்க செயின், மோதிரம் பரிசளிக்கும் சிறப்பு விருந்தினரே விஜயசாந்திதான். பிறகு முதல் இரு டிக்கெட்களை வாங்கியவர்களை மேடைக்கு அழைத்ததும், இவர்களை பார்த்து விஜயசாந்தி ஷாக் ஆகிவிடுவார். அப்போது கவுண்டமணி, "நாங்களாவது உங்ககிட்ட சொல்லிட்டு வந்தோம். நீங்கள் இங்கதான் வர போறீங்கன்னு எங்ககிட்ட சொல்லிட்டா வந்தீங்க, அந்த செயினையும் மோதிரத்தையும் நீங்களே வச்சுக்கோங்க, எங்களை வேலையை விட்டு மட்டும் தூக்கிராதீங்க" என்பார். விஜயசாந்தி சரி வாங்கிக்கோங்க என சொல்லி பரிசை கொடுப்பார்.












Click it and Unblock the Notifications