அம்மாவை அடித்துக் கொன்று தோட்டத்தில் புதைத்த மகள்.. கணவருடன் 13 மாதத்திற்கு பிறகு சிக்கியது எப்படி?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் பெற்ற தாயை அடித்துக் கொன்று உடலை புதைத்த பெண், கணவருடன் போலீசாரிடம் சிக்கி உள்ளார். தாயை காணவில்லை என போலீசில் புகார் அளித்த பெண், 13 மாதங்களுக்கு பின்பு எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள ஹெப்பாகவாடி கிராமத்தில் 52 வயதாகும் சாரதம்மா, தனது மகள் அனுஷா உடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாரதம்மாவின் கணவர் இறந்துவிட்டதால் மகள் அனுஷா தான், சாரதம்மாவை கவனித்து வந்தார். இந்த நிலையில் அனுஷாவுக்கும், மைசூரு மாவட்டம் ஹாரோஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இதனிடையே சாரதம்மாவிற்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அனுஷா தனது அம்மாவை மைசூருவுக்கு அழைத்துச் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தார். சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் ஹெப்பாகவாடி கிராமத்திற்கு அழைத்து வந்து வீட்டில் விட்டார்.
அப்போது சாரதம்மாவுக்கும், அவரது மகளுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனுஷா மைசூருவுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி அனுஷா, தனது கணவர் தேவராஜுடன் தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்தாராம்.
அன்று இரவு தாய் சாரதம்மாவுக்கும், மகள் அனுஷாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்களாம். இதில் ஆத்திரம் அடைந்த அனுஷா, பெற்ற தாய் என்றும் பாராமல் சாரதம்மாவை கீழே தள்ளி வீட்டில் இருந்த அரிவாளால் வெட்டியுள்ளாராம்.
இதில் படுகாயம் அடைந்த சாரதம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஆத்திரத்தில் அம்மாவை கொன்ற அனுஷாவும், அவருக்கு உதவிய அவரது கணவர் தேவராஜும் போலீசில் சிக்காமல் இருக்க இரவோடு இரவாக சாரதம்மாவின் உடலை கிராமத்தையொட்டி உள்ள காட்டுப்பகுதியில் குழிதோண்டி புதைத்திருக்கிறாரகள்.
பின்னர் சாரதம்மா தங்களிடம் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடமும், உறவினர்களிடமும் கூறி நம்ப வைத்திருக்கிறார்கள். அத்துடன் சாரதம்மாவை காணவில்லை எனக்கூறி அனுஷா மைசூரு மாவட்டம் வருணா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கள் பாணியில் விசாரித்தனர். 13 மாதங்களாக ஒன்றும் தெரியாமல் இருந்த நிலையில், அனுஷா மற்றும் தேவராஜின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதையடுத்து இருவரையும் பிடித்து தனித்தனியாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இருவரும் ஒன்று போல் சொல்லாமல் மாற்றி மாற்றி பேசியதால், சந்தேகம் வலுத்தது. இதையடுத்து பெற்ற தாயை கொன்று உடலை தனது கணவருடன் சேர்ந்து புதைத்துவிட்டதை அனுஷா ஒருகட்டத்தில் ஒப்புக்கொண்டார். அதையடுத்து போலீசார் அனுஷா மற்றும் தேவராஜை கைது செய்தனர். பின்னர் சம்பவம் நடந்த இடம் மண்டியா புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் மண்டியா புறநகர் போலீசாரிடம், வருணா போலீசார் ஒப்படைத்தார்கள்.
அதன்பின்னர் சாரதம்மாவின் உடலை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்க முடிவு செய்தனர். அண்மையில் போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் தேவராஜ் அடையாளம் காட்டிய இடங்களில் குழிதோண்டி தேடிப்பார்த்தனர். ஆனால் சாரதம்மாவின் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரது உடலை போலீசார் தேடிவருகிறார்கள். பெற்ற தாயை மகளே கொன்று உடலை புதைத்து 13 மாதங்களுக்கு பிறகு கைதான சம்பவம் மாண்டியா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications