டன் கணக்கில் தக்காளி.. லாரியுடன் அலேக்காக அள்ளிய பலே திருடர்கள்! என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கோலாரிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான தக்காளியை ஏற்றிச்சென்ற லாரியை அதன் டிரைவர் மற்றும் கிளினரே சேர்ந்து திருடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் கோலார் பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் இந்த தக்காளிகள் பயிரிடப்பட்டுள்ளன. அறுவடை காலம் நெருங்கியதும் தக்காளியை பறித்து பேக் செய்து ஏற்றுமதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து லாரி ஒன்று வாடகைக்கு பிடிக்கப்பட்டு அதில் அனைத்து தக்காளியும் ஏற்றப்பட்டுள்ளது. கோலாரிலிருந்து ஜெய்ப்பூர் போக வேண்டும் எனில் 2,000 கிமீ-ஐ கடக்க வேண்டும்.

திட்மிட்டபடி எல்லாம் சரியாக செய்யப்பட்டது. ஆனால், கர்நாடகாவிலிருந்து கிளம்பிய லாரி ராஜஸ்தானுக்கு சென்று சேரவில்லை. உடனடியாக டிரைவருக்கு போன் செய்தபோது அது ஸ்விட்ச் ஆஃப் என வந்திருக்கிறது. இதனையடுத்துதான் லாரி திருடுபோயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தக்காளியை அறுவடை செய்த விவசாயி போலீஸில் புகார் அளித்திருக்கிறார். புகாரையடுத்து அவர்கள் லாரியை தேட தொடங்கியுள்ளனர்.
எங்கு தேடியும் லாரி கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு பின்னர் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே ஆளில்லாமல் லாரி ஒன்று அநாதையாக நின்றிருப்பது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்து விசாரித்ததில் அது கர்நாடகாவை சேர்ந்தது என்றும், கோலாரிலிருந்து தக்காளி ஏற்றி வந்த லாரிதான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் டிரைவரும், லாரியிலிருந்த தக்காளியும் காணவில்லை. எனவே அவர்களை தேடும் பணியில் இரு மாநில காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "எங்களுக்கு புகார் வந்தவுடன் ஜெய்பூர் செல்லும் வழியில் உள்ள அனைத்து செக்போஸ்ட்டையும் செக் செய்ய முடிவெடுத்தோம். ஒவ்வொரு செக்போஸ்டிலிருந்து இன்னொரு செக்போஸ்ட்டுக்கு போக குறிப்பிட நேரம்தான் ஆகும். அதை வைத்து தேடினோம். அப்போதான் இந்த லாரி பிடிபட்டது. இந்த லாரியில் தக்காளி எதுவும் இல்லை. அதேபோல டிரைவரும் அவருடன் இருந்த கிளினரும் காணவில்லை.
சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியிருக்கிறோம். விரைவில் அவர்களை கண்டுபிடித்துவிடுவோம்" என்று கூறியுள்ளனர். தக்காளியை பயிரிட்ட விவசாயி கூறுகையில், "நானும் எனது கணவரும்தான் முழுக்க முழுக்க இந்த தக்காளியை பயிரிடுவது தொடங்கி, அதை அறுவடை செய்வது வரை எல்லாவற்றையும் தனியாக செய்தோம். இரண்டு ஏக்கர் நிலத்தில் இதற்கு முன்னர் இவ்வளவு தக்காளி விளைச்சல் கண்டது கிடையாது.
இந்த முறை கண் குளிர விளைச்சலை கண்டோம். எங்கு பார்த்தாலும் தக்காளிகள் தென்பட்டது. வாங்கிய கடன் எல்லாம் இந்த முறை கழித்துவிடலாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் கடைசியில் இப்படி ஆகிவிட்டது. காவல்துறை எங்களுக்கு உதவ வேண்டும். திருடு போன லாரி மற்றும் அதன் டிரைவர் கிளினரை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு முன்னரும் இதே போல தக்காளி ஏற்றிச் சென்ற லாரி திருடு போயுள்ளது. குறிப்பாக கர்நாடகாவிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு தக்காளி ஏற்றிச் செல்லும் லாரிகளில் குறைந்தபட்சம் 4 லாரிகள் இதுபோல திருடுபோய் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications