நிறைவேற்றியே தீருவோம்.. தமிழக சட்டமன்ற தீர்மானம் சட்டவிரோதம்.. கர்நாடக பாஜக முதல்வர் பொம்மை கண்டனம்
பெங்களூரு : மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது எனவும், ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் உரிமையை ஆக்கிரமிக்கலாம் என்பது மக்கள் விரோத முடிவு கர்நாடக முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.
இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழ்நாட்டிலுள்ள பல லட்ச விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு கூறி வருகிறது.

மேகதாது விவகாரம்
கடந்த சில மாதங்களுக்கு முன் இது தொடர்பாகத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று, அங்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருந்தார். இருப்பினும் கர்நாடக அரசு அணை கட்டுவது உறுதி என்றே தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மிக விரைவில் மேகதாதுவில் அணைக் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.

சட்டசபையில் தனித்தீர்மானம்
இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பேசினார்கள். இறுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக, அதிமுக, காங்கிர்ஸ், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கர்நாடகா கண்டனம்
இதற்கிடையில் மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது எனவும், ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் உரிமையை ஆக்கிரமிக்கலாம் என்பது மக்கள் விரோத முடிவு கர்நாடக முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பொம்மை, "தமிழக சட்டசபையில் இன்று சட்டத்திற்கு புறம்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் உரிமையை ஆக்கிரமிக்கலாம் என்பது மக்கள் விரோத முடிவு.

முடிவில் உறுதி
இந்த முடிவை கர்நாடக அரசும், மக்களும் வன்மையாகக் கண்டிக்கின்றனர். மேததாது திட்டத்தை செயல்படுத்த எங்களின் முடிவு உறுதியாக உள்ளது. இந்த திட்டம் மாநிலத்தில் உற்பத்தியாகும் காவேரி நதியுடன் தொடர்புடையது. காவேரி அதிகார வரம்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்கிய பிறகு எஞ்சிய நீரை உரிமை கோர கர்நாடகாவுக்கு உரிமை உள்ளது. தமிழகத்தில் இந்த அரசியல் முடிவு எதுவாக இருந்தாலும், மேகதாது திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications