ட்விஸ்ட்.. கர்நாடகாவில் மெஜாரிட்டியை தொடும் காங்கிரஸ்.. டிவி 9 கருத்து கணிப்பில் பாஜகவுக்கு செம அடி!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியை பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கதர் கட்சி தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மாறாக பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஏராளமான தொகுதிகளை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருகட்சி தலைவர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கர்நாடகா சட்டசபையின் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் மே மாதம் 10ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியாவது மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கர்நாடகாவில் முன்னணி சேனல்களில் ஒன்றாக உள்ள டிவி 9 கன்னடா, சி வோட்டருடன் சேர்ந்து கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த கருத்து கணிப்பின்படி பார்த்தால் கர்நாடகாவில் இந்த முறை காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியை தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டாலும் கூட காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருமாறும் என கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
அதாவது கர்நாடகாவில் 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தனி மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தான் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக 3 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. மாறாக இது நடக்காவிட்டாலும் கூட காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறும் என கருத்து கணிப்பின் முடிவுகள் தெரிவித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஆளும் பாஜக 2வது இடத்தை பிடிக்குமாம். இதன்மூலம் பாஜக ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி பாஜக 79 முதல் 89 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. ஜேடிஎஸ் கட்சி 24 முதல் 34 இடங்களை கைப்பற்றும் எனவும், மற்றவர்கள் 5 தொகுதிகளில் வாகை சூடலாம் எனவும் டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் எனவும், பாஜவுக்கு 33.3 சதவீத ஓட்டுகளும், ஜேடிஎஸ் கட்சிக்கு 18.8 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டு சதவீதத்தை முந்தைய 2018 தேர்தலில் ஒப்பிட்டு பார்த்தால் பாஜகவுக்கு பெரிய அளவில் அடி விழுவது தெரிகிறது.
அதாவது கடந்த தேர்தலில் பாஜக மொத்தம் 36 சதவீத ஓட்டுகள் பெற்ற நிலையில் இந்த முறை 33.9 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெறும் என கூறப்பட்டுள்ளதால் 2.1 சதவீத ஓட்டு என்பது குறைகிறது. மாறாக கடந்த முறை காங்கிரஸ் கட்சி 38 சதவீத ஓட்டுகள் பெற்ற நிலையில் தற்போது 2 சதவீதம் வரை கூடுதலாக ஓட்டு பெறும் எனவும், ஜேடிஎஸ் கட்சி கடந்த முறை 18 சதவீத ஓட்டுகள் பெற்ற நிலையில் இந்த முறை 18.8 சதவீத ஓட்டுகள் பெறும் எனவும் இந்த டிவி 9 கன்னடா - சிவோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications