லேப்டாப் கொண்டு போனதுக்கு இப்படியா.. கூடுதல் கட்டணம் வசூலித்த கர்நாடக அரசு பஸ்.. புலம்பிய பயணி
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு பேருந்தில் பயணித்த ஒருவர் லேப்டாப் எடுத்து சென்றதற்காக கூடுதலாக ரூ.10 கட்டணத்தை பேருந்து நடத்துநர் வசூலித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கர்நாடகாவிலும் தமிழகத்தை போலவே அதிக அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் வசதிக்காக கர்நாடகா முழுவதும் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

லேப்டாப் வைத்திருந்த பயணி
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். அதுவும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த மாநிலமான கர்நாடகாவில் பயணிகள் பலரும் லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பயணிப்பதை சர்வ சாதாரணமாக காண முடியும். இந்த நிலையில், இதேபோலத்தான் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் இருந்து ஹூப்ளிக்கு அரசு பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர், லேப்டாப் வைத்திருந்ததால் கூடுதல் கட்டணத்தை பேருந்து நடத்துனர் வாங்கியிருப்பதாக குறை கூறியிருக்கிறார்.

கூடுதல் கட்டணம் வசூல்
லேப்டாப் என்பது செல்போனுக்கு அடுத்த படியாக பரவலாக அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருளாக மாறிவிட்ட சூழலில், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக தனது பெயரை வெளியிட மறுத்த அந்த இளைஞர் கூறுகையில், ''ஹூப்ளிக்கு வடமேற்கு கர்நாடக அரசு பேருந்தில் (NWKRTC) சென்று கொண்டிருந்த போது எனது லேப்டாப் வெளியில் எடுத்து பயன்படுத்திக் கொண்டு இருந்தேன்.

ரூ.10 வழங்க வேண்டும்
இதைக் கவனித்த பேருந்தின் டிரைவர் (நடத்துனரும் அவரே) என்னிடம் மின் உபகரணங்கள் எடுத்து வருவதற்காக லக்கேஜ் கட்டணமாக கூடுதலாக ரூ.10 வழங்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து நான் கேட்ட போது கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட சமீபத்திய உத்தரவை மேற்கோள் காட்டி, இந்த உத்தரவின் அடிப்படையில் தான் கூடுதல் டிக்கெட் வசூலிப்பதாக விளக்கம் அளித்தார்.

உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல் பேரில்
பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜ்களின் எடை 30 கிலோவை தாண்டா விட்டாலும் கட்டணம் இன்றி எடுத்து செல்லும் பொருள்களின் பட்டியலில் லேப்டாப் இல்லை என்று கூறி இந்த கூடுதல் வசூல் செய்யப்பட்டதை அறிந்தேன். உண்மையில் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல் பேரிலேயே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும் தெரியவந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications