லிங்காயத் 1, தாழ்த்தப்பட்டோர் 3.. கர்நாடகா புதிய கேபினட்டில் சமூக ரீதியாக யாருக்கு எவ்வளவு இடம்?
பெங்களூர் : கர்நாடகாவில் இன்று முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டிகே சிவக்குமார் பதவியேற்ற நிலையில், அவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். கர்நாடகா அமைச்சரவையில் சமூக ரீதியான பிரதிநிதித்துவத்தை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசைத் தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. இதையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

இன்று மதியம் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இவர்களுடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். எம்.பி.பாட்டீல், பரமேஸ்வரா, பிரியங்க் கார்கே, முனியப்பா, ஜமீர் அகமதுகான், கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிகோலி ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
கர்நாடகாவில் இன்று பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எட்டு அமைச்சர்களின் சமூக ரீதியான பிரதிநிதித்துவம் இங்கே:
சித்தராமையா (குருபா)
டிகே சிவக்குமார் (ஒக்கலிகா)
ஜி பரமேஸ்வரா (எஸ்சி),
கே எச் முனியப்பா (எஸ்சி),
கேஜே ஜார்ஜ் (சிறுபான்மை-கிறிஸ்தவர்),
எம்பி பாட்டீல் (லிங்காயத்),
சதீஷ் ஜார்கிஹோலி (எஸ்டி-வால்மீகி),
பிரியங்க் கார்கே (எஸ்சி),
ராமலிங்க ரெட்டி (ரெட்டி),
ஜமீர் அகமது கான் (சிறுபான்மை-முஸ்லிம்)

தாழ்த்தப்பட்டோர் - 3
பழங்குடியினர் - 1
முஸ்லிம் - 1
கிறிஸ்தவர் - 1
லிங்காயத் - 1
ஒக்கலிகா - 1
குருபா - 1
இதர பிற்படுத்தப்பட்டோர் - 1
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் டெல்லியில் உயர்மட்ட தலைவர்களுடன் அமைச்சரவை பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தினர். கர்நாடக அமைச்சரவையில், 30 அமைச்சர்கள் வரை இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் தலைமையால் 8 அமைச்சர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் ஆகிய இருவரும் தலா 10 பேரை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய காங்கிரஸ் தலைமை அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
