100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி!
பெங்களூர்: "நானே முதலமைச்சராக நீடிப்பேன்" எனத் தொடர்ச்சியாக முழங்கி வந்த 78 வயதான சித்தராமையா, இறுதியாக டெல்லி உத்தரவுக்குக் கட்டுப்பட்டு இன்று தனது முதலமைச்சர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம், தற்போதைய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக அரியணை ஏறுகிறார். இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இன்று காலை தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சரவை சகாக்களுக்குப் பிரேக்பாஸ்ட் விருந்து அளித்த சித்தராமையா, அவர்களிடம் தனது முடிவை உடைத்தார். தொடர்ந்து, பெங்களூரில் உள்ள ஆளுநர் அலுவலகத்திற்குத் தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை அவர் முறைப்படி சமர்ப்பித்தார்.

சித்தராமையா
ராஜினாமாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, "இரண்டு நாட்களுக்கு முன்பே நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் எனக்கு உத்தரவிட்டது. அதன்படியே இன்று எனது ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளேன். கர்நாடக மக்களுக்கு இரண்டு முறை முதலமைச்சராகச் சேவை செய்ய வாய்ப்பளித்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என உருகினார்.
மேலும், "எனக்குத் தேசிய அரசியலில் எள்ளளவும் விருப்பமில்லை" எனக் குறிப்பிட்ட அவர், தனக்கு டெல்லி தலைமை ராஜ்யசபா சீட் வழங்க முன்வந்ததாகவும் இருப்பினும் அதை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், கர்நாடகாவிலேயே சாதாரண எம்.எல்.ஏவாக தொடர போவதாகவும் தெரிவித்தார். சட்டமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் சித்தராமையா எளிதாக டெல்லிக்கு கட்டுப்பட்டதற்குப் பின்னால் முக்கிய காரணம் இருக்கவே செய்கிறது. அதாவது இந்த 100 எம்எல்ஏக்களும் இப்போது தனக்கு ஆதரவாக இருந்தாலும், பதவி விலக மாட்டேன் என சொன்னால் அவர்கள் தனக்காக இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தார்.
எம்எல்ஏக்கள்
அதாவது கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களையும் க்ளீன் ஸ்வீப் செய்திருந்தாலும், கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் மத்தியில் ஒருவித நிர்வாகச் சோர்வும், அதிருப்தியும் நிலவுவதை எம்எல்ஏக்கள் உணர்ந்திருந்தனர். மேலிட உத்தரவை மீறினால், தங்களின் எதிர்காலத்தைக் கருதி எம்எல்ஏக்கள் அனைவரும் டி.கே.சிவக்குமார் முகாமிற்குத் தாவிவிடுவார்கள் என்பதைச் சித்தராமையா முன்கூட்டியே கணித்துவிட்டார்.
மேலும், முக்கியமாக மாற்றுக்கட்சியான ஜேடிஎஸ் அமைப்பிலிருந்து வந்த தனக்கு, மூத்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு சோனியா காந்திதான் இரண்டு முறை முதல்வர் நாற்காலியைத் தந்தார் என்ற நன்றிக்கடனுக்காகவே, ராகுல் காந்தி சொன்ன ஒரு வார்த்தையை ஏற்று அவர் முதல்வர் நாற்காலியை விட்டு இறங்கியுள்ளார்.
சிவக்குமார்
கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களைப் பிடித்து மெகா வெற்றி பெற்றபோது, மாநிலத் தலைவராக இருந்த டி.கே.சிவக்குமாருக்கு 'இரண்டரை ஆண்டுகள் கழித்து முதல்வர் நாற்காலி' என்ற சுழற்சி முறை டெல்லியால் பேசப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் முடிந்தவுடன் டி.கே.சிவக்குமார் முகாம் டெல்லிக்கு பிரஷர் கொடுக்கத் தொடங்கியது. அப்போது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் முடியும் வரை பொறுமை காக்குமாறு கே.சி.வேணுகோபால் சொல்லியிருந்தார்.
தற்போது மே மாதத் தேர்தல்கள் முடிந்து, ராஜ்யசபா தேர்தல் குறித்த அறிவிப்பு வந்தவுடன் மீண்டும் சிவக்குமார் ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றார். அதைத் தொடர்ந்தே முதல்வர் மாற்றம் நடந்துள்ளது. 6 மாதங்கள் தாமதமானாலும், முதல்வர் பதவி இப்போது மாற்றப்பட்டுள்ளது.
காரணம் என்ன
கடந்த ஜனவரியில் கர்நாடகாவின் மிக நீண்ட காலம் தடையின்றிப் பதவி வகித்த முதலமைச்சர் என்ற தேவராஜ் அர்ஸின் வரலாற்றுச் சாதனையை முறியடித்த சித்தராமையா, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய அஹிந்தா சமூகக் கூட்டணியின் முகமாகத் திகழ்ந்தார். இருப்பினும், அவரது இரண்டாவது ஆட்சிக்காலம் குறித்த நெகட்டிவ் ரிப்போர்ட்டுகளும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் தேர்தல்களில் ஆட்சிக்கு எதிரான மனநிலை காங்கிரஸ் வெற்றி பறித்துவிடக்கூடும் என்பதலேயே இந்த அதிகார மாற்றம் நடந்துள்ளது.
டெல்லி மேலிடம் சொன்னதைக் கேட்டு எந்தவொரு பிரச்சினையும் செய்யாமல் சித்தராமையா பதவி விலகினார். இதன் காரணமாகப் புதிய அமைச்சரவையில் சித்தராமையா விசுவாசிகளுக்குப் பவர்ஃபுல்லான போர்ட்ஃபோலியோக்கள் தருவதாக ராகுல் காந்தி சமரசம் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications