தமிழக வருங்கால ‛முதல்வர்’ அண்ணாமலை தான்! கர்நாடகாவில் அடித்துசொன்ன தேஜஸ்வி! திரும்பிய கேமராக்கள்

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் அதனை தக்கவைக்க அக்கட்சி போராடி வருகிறது. இதற்கிடையே தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேட்பாளர் தேர்வு முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மாநில தலைவர்களை ஒருங்கிணைத்து செல்வது, தலைவர்களின் பிரசார வியூகங்களில் பாஜக தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். தொகுதி வாரியாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை கர்நாடகாவிலேயே முகாமிட்டு பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
தேஜஸ்வி சூர்யா: இந்நிலையில் தான் பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்பியும், பாஜகவின் இளைஞர் அணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். இந்த வேளையில் தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடகா தேர்தலுக்கான பாஜக இணை பொறுப்பாளருமான அண்ணாமலை உடனிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரான சித்தராமையாவை தோற்கடிப்படுவார் என தேஜஸ்வி சூர்யா நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் என அறிமுகம் செய்து வைத்தது கவனத்தை ஈர்த்தது.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: இதுபற்றி பெங்களூரில் தேஜஸ்வி சூர்யா கூறியதாவது: ‛‛கர்நாடகாவில் மைசூர் மாவட்டம் வருணா(காங்கிரஸில் சித்தராமையா போட்டியிடும் தொகுதி) மற்றும் சாம்ராஜ் நகர் தொகுதியில் சோமண்ணா (வருணா, சாம்ராஜ்நகர் தொகுதிகளின் பாஜக வேட்பாளர் )என்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை பிரதமர் மோடி அஸ்திரமாக கையில் எடுத்துள்ளார். 2 தொகுதிகளிலும் சோமண்ணா வெற்றி பெறுவார். மைசூர், சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் 8 க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெல்லும். மேலும் பெங்களூர் விஜயநகர் மற்றும் கோவிந்தராஜ்நகர் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். சோமண்ணா எனும் ஒருநபர் மூலம் 10 முதல் 12 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்'' என்றார்.
முதல்வராக அண்ணாமலை: இந்த வேளையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேச தேஜஸ்வி சூர்யா வாய்ப்பு கொடுத்தார். இந்த வேளையில் அவர் ‛‛தமிழ்நாடு வருங்கால முதல்வர் உங்களிடம் இனி விளக்குவார்'' என அண்ணாமலையிடம் மைக்கை வழங்கினார். இதனால் கேமரா அனைத்தும் அண்ணாமலையின் பக்கம் திரும்பியது. இந்த வேளையில் அண்ணாமலை பேசியதாவது: ‛‛கர்நாடகா அரசியலின் பிம்பத்தை சோமண்ணா மாற்ற உள்ளார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மாற்ற அவர் தயாராக உள்ளார், சாம்ராஜ்நகர், வருணா தொகுதியில் மாற்றம் நிகழ போகிறது'' என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கையாக பேசினார்.
யார் இந்த சோமண்ணா: இந்த நிகழ்ச்சியில் தேஜஸ்வி சூர்யா மற்றும் அண்ணாமலை ஆகியோர் குறிப்பிட்டு பேசிய சோமண்ணாம என்பவர் கர்நாடகா மாநிலத்தில் பாஜக அமைச்சராக உள்ளார். வீட்டு வசதித்துறையை நிர்வகித்து வரும் சோமண்ணா பெங்களூர் கோவிந்தராஜ் நகர் எம்எல்ஏவாக இருக்கிறார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரான சித்தராமையாவை எதிர்த்து மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில், இன்னொன்று சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் சித்தராமையாவை வீழ்த்தும் முனைப்பில் அவரை பாஜக களமிறக்கி உள்ளது. இதனால் சோமண்ணா கர்நாடகா அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் இருவரும் சோமண்ணா பற்றி பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications