மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜகவின் கோட்டையாக இருக்கும் கடலோர கர்நாடகாவின் உடுப்பி-சிக்கமகளூர், தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய 3 தொகுதிகளை வேட்டையாடியே தீருவது என்பதில் காங்கிரஸ் மிக உறுதியாக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கர்நாடகா மாநிலத்தின் பாஜகவின் கோட்டையாக இருப்பது கடலோர கர்நாடகா. மங்களூர் மாவட்டத்தை உள்ளடக்கிய கடலோர கர்நாடகாவில் உடுப்பி-சிக்கமகளூர், தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய 3 லோக்சபா தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

2014 மற்றும் 2019 தேர்தல்களில் உடுப்பி-சிக்கமகளூர், தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய கடலோர கர்நாடகா தொகுதிகளில் பாஜகவின் வெற்றி கொடி உயரப் பறந்தது. கர்நாடகாவில் பாஜகவின் கோட்டைகளாக இந்த 3 தொகுதிகளும் விஸ்வரூபம் எடுத்து நின்றன. பாஜகவுக்கு இந்த 3 தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 70% வாக்குகள் உள்ளன என்பதை 2014, 2019 தேர்தல்கள் நிரூபித்தன.
தட்சிண கன்னடா: மங்களூர் தொகுதியாக இருந்ததுதான் தற்போதைய தட்சிண கன்னடா. 1991-ம் ஆண்டு முதல் 8 முறை பாஜக வென்றுள்ள தொகுதி. தற்போது 9-வது முறையாக வெல்லும் முனைப்பில் பாஜக கேப்டன் பிரிஜேஷ் சவுதாவை களமிறக்கி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ஆர். பத்மராஜ் போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 15,65,281 பேர் வாக்காளர்கள். இவர்களில் 77.1% பேர் அதாவது 12,07,474 பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர். பாஜகவின் நளின் குமார் கட்டீல் 1,43,709 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
2019-ம் ஆண்டு தேர்தலில் தட்சிண கன்னடாவில் மொத்த வாக்காளர்கள் 16,98,859 பேர். இவர்களில் 79.6% பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர். அதாவது 13,45,039 பேர் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டனர். 2014-ல் வென்ற நளின் குமார் கட்டீல் 2019-ல் 2,74,621 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார்.
ஆனால் 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவின் கோட்டையில் விரிசல் விழுந்தது. ஆம் தட்சிண கன்னடா லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 6ஐ பாஜக பெற்றது; 2-ல் காங்கிரஸ் கொடியை பறக்க விட்டது. இங்கிருந்துதான் பாஜகவின் சறுக்கல் தொடங்கியது என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். இதன் அடுத்த கட்டமாக பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நளின் குமார் கட்டீலை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கவில்லை பாஜக. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி காரணமாகவே அவ்வளவு பெரிய வெற்றியை தந்த நளின் குமார் கட்டீலை பாஜக இம்முறை களம் இறக்கவில்லை என்கிறது காங்கிரஸ்.
கர்நாடகாவில் இந்துத்துவா சித்தாந்தத்தின் பரிசோதனை கூடங்களில் ஒன்றாக தட்சிண கன்னடாவை பாஜக பயன்படுத்தி வந்தது என்பதும் ஒரு குற்றச்சாட்டு. ஆனால் இம்முறை பாஜகவுக்கு பல முனைகளில் பெரும் சவால்கள் முளைத்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இத்தொகுதியில் பில்லயா (Billava) என்பது இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதி. சுமார் 4 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தங்களது ஜாதியை சேர்ந்த ஒருவரை பாஜக வேட்பாளராக அறிவிக்கவில்லையே என்கிற அதிருப்தி பில்லயா ஜாதியினரிடத்தில் ஆழமாக இருக்கிறதாம். கடந்த 3 தேர்தல்களிலும் முற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த நளின்குமார் கட்டீலைத்தான் பாஜக வேட்பாளராக நிறுத்தியதால்தான் இந்த அதிருப்தி வேரூன்றி விட்டதாம். இதனை புரிந்து கொண்டுதான் பில்லயா ஜாதியைச் சேர்ந்த 53 வயதாகும் பத்மராஜ் பூஜாரியை வேட்பாளராக களமிறக்கி இருக்கிறது காங்கிரஸ். அத்துடன் தட்சிண கன்னடாவில் 21.8 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த முறை முஸ்லிம் வாக்குகளை பிரிக்க கூடிய முஸ்லிம் கட்சிகள் எதுவும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆகப் பெரும் உந்துசக்தியாக இருக்கிறதாம். இத்தொகுதியின் புகழ்பெற்ற குத்ரோலி கோகர்ணநாதேஸ்வரர் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து காங்கிரஸ் வேட்பாளர் பத்மராஜ் செயல்பட்டு வருகிறார். இதனால் இயல்பாகவே இந்துக்களின் ஆதரவாளர் என்கிற அடையாளமும் பத்மராஜுக்கு வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் என்கிறது காங்கிரஸ். இத்தகைய ஜாதி, மத கணக்குகளுக்கு அப்பால் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அறிவித்திருக்கும் பெண்களுக்கான உதவித் தொகை, இலவச பேருந்து சலுகை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கும் தட்சிண கன்னடாவில் பெரும் வரவேற்பு இருக்கிறதாம். இதுவும் பாஜகவின் கோட்டையான தட்சிண கன்னடா தொகுதியை காங்கிரஸ் அசைத்துப் பார்க்கும் என்ற நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறதாம்.
உத்தர கன்னடா: 1996-ல் உத்தர கன்னடா தொகுதியில் பாஜக முதல் முறையாக காவி கொடியைப் பறக்கவிட்டது. அனந்தகுமார் ஹெக்டே, உத்தர கன்னடாவின் முதல் பாஜக எம்பி. ஆனால் 1999-ல் காங்கிரஸ் கட்சியின் மார்க்ரெட் ஆல்வா வென்றார். 1998, 2004, 2009, 2014, 2019 என 5 முறை பாஜகவின் அனந்தகுமார் ஹெக்டே பெரும் வெற்றியைப் பெற்றார். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 14,50,599 பேர் வாக்காளர்கள். இவர்களில் 69% பேர் அதாவது 10,01,038 பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர். பாஜகவின் அனந்த குமார் ஹெக்டே 1,40,700 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
2019-ம் ஆண்டு தேர்தலில் உத்தர கன்னடாவில் மொத்த வாக்காளர்கள் 15,35,047 பேர். இவர்களில் 76.2% பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர். அதாவது 11,53,480 பேர் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டனர். 2014-ல் வென்ற அனந்தகுமார் ஹெக்டே 2019-ல் 4,79,649 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார்.
2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு கடந்த தேர்தல்களில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த அனந்தகுமார் ஹெக்டேவுக்கு மீண்டும் வாய்ப்பு தரவில்லை. சர்ச்சைக்குரிய பேச்சுகளின் நாயகன் அனந்த குமார் ஹெக்டே. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் அபாரதமான திட்டங்களின் தாக்கம் ஆகியவை உத்தர கன்னடா தொகுதி எனும் பாஜக கோட்டையில் ஓட்டை போடும் என உறுதியாக நம்பியே பாஜக வேட்பாளரை மாற்றிவிட்டது என்கிறது காங்கிரஸ். பாஜகவின் வேட்பாளராக விஸ்வேஸ்வர் ஹெக்டே ககேரி, காங்கிரஸ் வேட்பாளராக அஞ்சலி நிம்பல்கர், மராத்திய கட்சியின் நிரஞ்சன் சர்தேசாய் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
உடுப்பி-சிக்கமகளூர்: 2014-ல் இத்தொகுதியில் மொத்தம் 13,87,295 பேர் வாக்காளர்கள். பாஜகவுக்கு கிடைத்த ஓட்டு 74.51%. மொத்த வாக்காளர்களில் 10,34,108 பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர். பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ஷோபா கரந்தலாஜே 1,81,643 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2019-ல் மீண்டும் ஷோபாதான் போட்டியிட்டார். அப்போது மொத்த வாக்காளர்கள் 14,95,439 பேர். இவர்களில் 77.5% பாஜகவுக்கு வாக்களித்தனர். மொத்த வாக்காளர்களில் 11,51,012 பேர் பாஜகவின் ஷோபாவுக்கு வாக்களித்தனர். அத்தேர்தலில் 3,49, 599 வாக்குகள் வித்தியாசத்தில் ஷோபா கரந்தலாஜே வென்று மத்திய அமைச்சரானார். கடலோர கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பெண்கள் பிரிவின் முகமாக இருந்தவர் ஷோபா. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சால் சர்ச்சைகளின் மையமானார். பாஜகவில் எடியூரப்பா கோஷ்டியின் வலுவான ஆதரவாளராக அடையாளப்படுத்தப்பட்டார். ஒரு கட்டத்தில் எடியூரப்பா குடும்பத்துடன் மோதலில் ஈடுபட்டார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு எடியூரப்பா குடும்பத்தில் இருந்து ஷோபாவை விலக்கி வைத்தது. 2014, 2019-ல் உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுக் கொடுத்தார் ஷோபா. இதனாலேயே மத்திய அமைச்சராகவும் பதவியைப் பெற்றார். ஆனால் உடுப்பி சிக்கமகளூர் தொகுதி பாஜகவினரிடையே கடும் அதிருப்தியையும் தமக்கு தாமே உருவாக்கிக் கொண்டார் ஷோபா. இதனால் Go Back Shoba முழக்கத்தை பாஜகவினரே எழுப்பும் நிலைமை உருவானது. இத்தகைய எதிர்ப்புகளாலேயே ஷோபா, உடுப்பி சிக்மகளூர் வேட்பாளராக மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. தற்போது பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
தற்போது பாஜகவின் சீனியர்களில் ஒருவரான கோட்டா சீனிவாச பூஜாரி, காங்கிரஸ் கட்சியின் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே, உடுப்பி- சிக்கமகளூரில் களம் காண்கின்றனர். இருவருமே சீனியர் தலைவர்கள்தான். ஷோபா உள்ளிட்டோர் கட்டமைத்துவிட்ட மதரீதியான பாஜகவின் வாக்கு வங்கியை மக்கள் நலத் திட்டங்கள் எனும் அஸ்திரத்தின் மூலம் அசைக்கப் போராடுகிறது காங்கிரஸ். இதனால்தான் கடலோர கர்நாடகாவின் 3 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளும் மிகப் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கின்றன.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications