தேர்தல் காலம்னா இப்படித்தான்.. இந்திய தொழில்நுட்ப மேம்பாட்டின் மையம் கர்நாடகா: பிரதமர் மோடி புகழாரம்!
கர்நாடகாவின் பெங்களூரில் ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பெங்களூர்: இந்திய தொழில்நுட்ப மேம்பாட்டின் மையமாக கர்நாடகா திகழ்கிறது. ஏரோ இந்தியா கண்காட்சி கர்நாடகா இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பெங்களூரில் 14-வது ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பெங்களூர் யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. மேலும் 800 பாதுகாப்பு நிறுவனங்கள், சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

14-வது ஏரோ இந்தியா 2023 கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: புதிய இந்தியாவின் திறன்களுக்கு பெங்களூரு சாட்சியாக உள்ளது . இந்த புதிய உயரம்தான் புதிய இந்தியாவின் உண்மை நிலையாக உள்ளது. இன்று இந்தியா புதிய உயரங்களைத் தொட்டு, அவற்றையும் தாண்டி வருகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஏரோ இந்தியா 2023 ஒரு சிறந்த உதாரணம். இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்வது முழு உலகமும் இந்தியாவின் மீது காட்டும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இந்திய எம்எஸ்எம்இக்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளன. ஏரோ இந்தியா 2023 இன் கருப்பொருள் என்பது 'ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை', தற்சார்பு இந்தியாவின் வலிமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே செல்கிறது.
இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டின் மையமாகத் திகழுகிறது கர்நாடகா. இங்கு ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இது விமானத்துறையில் கர்நாடக இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கும். நாட்டை வலுப்படுத்தும் நோக்கில், தங்களது தொழில் நுட்பத் திறன்களைப் பாதுகாப்புத் துறையில் கர்நாடகா இளைஞர்கள் ஈடுபடுத்த வேண்டும். புதிய சிந்தனையோடும், புதிய அணுகுமுறையோடும் நாடு முன்னேறும் போது, அதன் நடைமுறைகளும் அதற்கேற்ப புதிய சிந்தனைக்கான மாற்றத்தைத் தொடங்கவேண்டும். ஏரோ இந்தியா முன்பு வெறும் காட்சியாகவும், இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான வழியாகவும் மட்டும் இருந்தன. இப்போது அந்தக் கண்ணோட்டம் மாறியிருக்கிறது.

21ம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் தவறவிட்டதும் இல்லை, முயற்சியில் பின்தங்கியதும் இல்லை. பல தசாப்தங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்வதாக இருந்த நாடு இன்று உலகின் 75 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. 2024-25க்குள் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிகளை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதை 5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதில் நமது தனியார் துறை மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள். இந்தியாவிலும், வெளிநாடுகள் பலவற்றிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வேண்டும். இன்றைய இந்தியா வேகமாக சிந்திக்கிறது, தொலைநோக்குப் பார்வையுடன் விரைவான முடிவுகளை எடுக்கிறது. தயக்கம் ஏதும் இல்லாமல், புதிய உச்சத்தைத் தொடுவதற்கு மிகவும் ஆவலோடு இருக்கும் நாடு, இந்தியா. சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகிய இந்தியாவின் செய்தியை ஏரோ இந்தியா எதிரொலிக்கிறது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களை ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்குகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications