பரபரப்பு.. சசிகலாவையடுத்து இளவரசிக்கும் கொரோனா.. சிறையிலிருந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு ஷிப்ட்
பெங்களூர்: சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக அடைக்கபட்டு உள்ளவர்கள் சசிகலா மற்றும் இளவரசி.
இருவருமே ஜனவரி 27ஆம் தேதி சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்பட இருந்தனர். சசிகலாவின் அண்ணன் மறைந்த ஜெயராமனின் மனைவிதான் இளவரசியாகும்.

சசிகலா உடல்நிலை
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மற்றொரு அரசு மருத்துவமனையான விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பரிசோதனை செய்து பார்த்த போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்கிறது.

2வது பரிசோதனை
இந்த நிலையில்தான், சிறையில் அவருடன் எப்போதுமே பக்கத்தில் இருக்கக்கூடியவரான இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதலில் செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் வந்த நிலையில் தற்போது கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இரண்டாவது முறையாக செய்யப்பட்ட பரிசோதனையில் இந்த தகவல் வந்துள்ளதாக சிறைத்துறை இன்று தெரிவித்துள்ளது.

விக்டோரியா மருத்துவமனை
அவருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் மூலம், இளவரசி விக்டோரியா மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். ஏனெனில் அங்கு கொரோனாவுக்கு தனி வார்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் பரவிய கொரோனா
சசிகலாவுக்கு கொரோனா பரவியது சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது. எனவே சிறையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருடன் யார் யார் தொடர்பில் இருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த சிறைத் துறை திட்டமிட்டுள்ளது.