உயிரோடு வருவான்.. மகன் சடலத்தின் மீது உப்பை கொட்டி 8 மணி நேரம் காத்திருந்த தந்தை
பெங்களூர்: குட்டையில் மூழ்கி மகன் உயிரிழந்த நிலையில், அவனை பிழைக்க வைப்பதாக நினைத்து அவன் மீது தந்தை உப்புகளை மூட்டை மூட்டையாக கொட்டி 4 மணி நேரம் உப்பு குவியலில் ஊற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
உலகம் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டது. பூமியில் இருந்து வேறு கிரகங்களையும், பிரபஞ்சத்தின் தோற்றங்களையும் ஆய்வு செய்யும் அளவுக்கு மனித குலம் முன்னேறிவிட்டது.
ஏன், நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலத்தில் இருந்து மாறி தற்போது நிலவுக்கே மனிதன் செல்லும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறிவிட்டது.

மூட நம்பிக்கை
நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மனித சமுதாயத்தின் கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் முற்றாக ஒழிந்தபாடில்லை. அந்த வகையில் தான் கர்நாடக மாநிலத்தில் அரங்கேரிய மூட நம்பிக்கை சம்பவம் ஒன்று அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழிக்குள் விழுந்தான்
கர்நாடகாவில் உள்ள பல்லாரி மாவட்டம் அருகே உள்ள சிரவாரா என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி சேகர்- கங்கம்மா. இந்த தம்பதிக்கு 12-வயது நிரம்பிய பாஸ்கர் என்ற சிறுவன் இருந்தான். தனது வயதுக்கேற்ற குறும்பு தனத்துடன் வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்தான். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தனது வீட்டருகே இருந்த தண்ணீர் நிரம்பிய குழி ஒன்றில் தவறுதலாக பாஸ்கர் விழுந்து விட்டான்.

தண்ணீரில் மூழ்கி பலி
சிறுவன் சுதாரிப்பதற்குள் தண்ணீரில் மூழ்கினான். சிறுவன் விழுந்தது யாருக்கும் தெரியாதாதால், அவனை மீட்க இயலாமல் போனது. இதனால், சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். பாஸ்கரை நீண்ட நேரமாக காணவில்லையே என்று வெளியில் தேடி வந்த பெற்றோர், தங்கள் மகன் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவன் உயிரிழந்து விட்டதை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

சடலம் மீது மூட்டை மூட்டையாக உப்பு
அப்போது, தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள் மீது உப்பு குவியலை கொட்டினால் உயிர் பிழைத்து விடுவார்கள் என்று சமூக வலைத்தளத்தில் யாரோ கிளப்பி விட்ட புரூடா கதை சிறுவனின் தந்தை சேகருக்கு நினைவுக்கு வந்தது. அந்த பொய்யான கதையை உண்மை என நம்பிய சேகர், தனது மகனின் சடலத்தை வீட்டுக்குள் வைத்து, சடலம் மீது மூட்டை மூட்டையாக உப்பைக் கொட்டினார். மகன் உயிர் பிழைத்து விடுவான் என்று நம்பி சுமார் 4 மணி நேரம் சேகரும் அவரது மனைவியும் காத்திருந்தனர்.

இணையத்தில் பரவும் வீடியோ
மூட நம்பிக்கையின் உச்சமாக நடந்த செயலை அறிந்த சிலர் சேகருக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, பாஸ்கரின் உடலை உப்புக்குவியலில் இருந்து மீட்டு அடக்கம் செய்யப்பட்டது. சிறுவன் உடல் மீது உப்புக்குவியல் கொட்டி வைக்கப்பட்டு இருந்த காட்சிகள் இணையத்தில் டிரெண்ட் ஆனது.












Click it and Unblock the Notifications