லண்டனில் இருந்து பெங்களூர் வாங்க! கோலிக்கு பறக்கும் சம்மன்? ஆர்சிபி வழக்கில் போலீஸ் வைக்கும் செக்?
பெங்களூர்: பெங்களூரில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக கோலியிடம் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
பெங்களூரில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக ஆர்சிபி அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மீது காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

நடந்தவை என்ன?
ஜூன் 4ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
எஃப்ஐஆர் பதிவு, கைதுகள் மற்றும் தொடர் விசாரணை
பெங்களூர் காவல்துறையினர் ஆர்சிபி அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் குற்றவியல் கொலை மற்றும் பொது பாதுகாப்பு விதிமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலே மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விராட் கோலி மீது புகார்
சமூக ஆர்வலர் எச்.எம்.வெங்கடேஷ் என்பவர் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலம், வெற்றிக்கு பின் அவர் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் ரசிகர்களை விழாவிற்கு வரும்படி தூண்டிவிட்டார் என்று குற்றம் சாட்டி அவர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இந்தக் கூட்ட நெரிசல் வழக்கின் ஒரு பகுதியாக இது குறித்து விசாரிக்கப்படும் என்றும், இதுவரை கோலி மீது எந்த எஃப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
லண்டன் சென்ற கோலி
சமூக வலைத்தளங்களில் #ArrestKohli என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானதை அடுத்து விராட் கோலி தனது குடும்பத்துடன் லண்டன் சென்றார். முன்னதாக மும்பையில் அவர் சிறிது நேரம் இருந்தார். இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு கோலி உடனடியாக லண்டனுக்குச் சென்றது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா லண்டனுக்குப் புறப்பட்டதை அறிந்த ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கு ஒருவகையில் கோலியும்தான் காரணம். அதனால் அவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
கோலிக்கு சம்மன்?
பெங்களூர் காவல்துறையினர் விராட் கோலியை கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சாட்சி அளிக்க லண்டனில் இருந்து வரவழைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் நேரில் ஆஜராவதை தவிர்க்க வழக்கறிஞர் மூலம் எழுத்துப்பூர்வமான அறிக்கையை அளிக்கலாம் அல்லது வழக்கறிஞரை அனுப்பலாம் என்றும் கூறப்படுகிறது.
பெங்களூரில் நடந்த ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications