உலகிலேயே 2வது மோசமான டிராபிக்.. நம்ம பெங்களூர் தான்.. 5வது இடத்தில் மற்றொரு இந்திய நகரம்
பெங்களூர்: உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்கள் பட்டியலை டாம்டாம் தளம் வெளியிட்டுள்ளது. இதில் மிக மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரமான மெக்சிகோ இருக்கும் நிலையில், பெங்களூர் 2வது இடத்தில் இருக்கிறது. மேலும், புனே நகரமும் இந்த லிஸ்டில் 5வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வாகன ஓட்டிகள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனையாக உள்ளது. சாலை திட்டமிடல் பிரச்சனை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது குறித்து நெட்டிசன்கள் புலம்புவதை நாம் கேட்டிருப்போம்.

போக்குவரத்து நெரிசல்
இந்த சூழலில் 2026ஆம் ஆண்டுக்கான டாம் டாம் போக்குவரத்து நெரிசல் குறியீட்டுப் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட 10 நகரங்களில் இந்தியாவின் இரண்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. அனைவருமே எதிர்பார்த்த பெங்களூர் இரண்டாவது இடத்தையும், புனே ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. அதேநேரம் மும்பை இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
டாம் டாம் வெளியிட்டுள்ள பட்டியல், நகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல் அளவை அடிப்படையாக கொண்டது. ஒரு நகரில் உண்மையில் பயணிக்க எடுத்து கொள்ளும் நேரத்தையும், போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழலில் அதே பயணத்தை முடிக்க தேவையான நேரத்தையும் ஒப்பிட்டு நெரிசல் அளவு கணக்கிடப்படுகிறது. உதாரணமாக 75 சதவீத நெரிசல் என்றால்.. போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழலைவிட ஒரு டிரிப்பை முடிக்க சுமார் 75 சதவீதம் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்று பொருள்.
மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ
உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக மெக்சிகோ சிட்டி 75.9% நெரிசலுடன் முதலிடத்தில் உள்ளது. அதிக மக்கள் தொகையும், சாலை போக்குவரத்தை பிரதானமாக சார்ந்திருக்கும் நிலையும் இங்கு போக்குவரத்து நெரிசல் மோசமாக இருக்க காரணங்களாக உள்ளன. குறிப்பாக அலுவலக நேரங்களில் நெரிசல் உச்சத்தில் இருக்கிறது.
பெங்களூர்
இந்தியாவின் தொழில்நுட்ப மையமாக விளங்கும் பெங்களூர், மிக மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் நெரிசல் ஸ்கோர் 74.4%ஆகும். நகரத்தின் மக்கள் தொகை அதிகரிப்பும், தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளின் மக்கள்தொகை அதிகரிப்பதும் நெரிசலுக்கு முக்கிய காரணமாகும். இதனால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள நிலையில், ஆனால் அதற்கேற்ப சாலை மற்றும் பொது போக்குவரத்து வசதிகள் ஏற்படவில்லை. இதனால் நெரிசல் பிரச்சனை மோசமாகிறது.
இதில் அயர்லாந்தின் டப்ளின் 72.9% உடன் 3வது இடத்தில் இருக்கிறது. டப்ளின் நகரம் மற்றும் முக்கிய வழித்தடங்களில் அதிக நெரிசல் உள்ளது. புறநகர் பகுதிகளின் வளர்ச்சியால் கார்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே டிராபிக் நெரிசலுக்கு காரணமாகும். அடுத்து போலந்தில் உள்ள லோட்ஸ் 72.8% நெரிசலுடன் 4வது இடத்தில் இருக்கிறது. முக்கிய சாலைகளில் அதிக வாகன போக்குவரத்து, கட்டுமான பணிகள் மற்றும் தினசரி நகருக்குள் பயணிப்போரின் எண்ணிக்கை ஆகியவை லோட்ஸ் நகரில் நெரிசலுக்கு காரணங்களாக உள்ளன.
இதர நகரங்கள்
அடுத்து மற்றொரு இந்திய நகரமான புனே 71.1% நெரிசலுடன் 5வது இடத்தில் இருக்கிறது. ஐடி, கல்வி மற்றும் உற்பத்தி துறைகளின் மையமாக புனே வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே நெரிசல் நிறைந்த சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்து போலந்தின் மற்றொரு முக்கிய நகரமான லுப்ளின் 70.4% நெரிசலுடன் 6 வது இடத்தில் இருக்கிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் மிக நீண்ட தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதாம்.
கொலம்பியாவின் பொகோட்டா (69.6%), பெருவின் அரெக்விபா (69.5%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. அதிக மக்கள் தொகை, அதிக வாகன எண்ணிக்கை குறுகிய சாலைகள் நிலைமை மோசமாக மாற்றுகிறது. மேலும், பெருவின் லிமா 69.3% மற்றும் தாய்லாந்தின் பாங்காங் 67.9% நெரிசலுடன் 9 மற்றும் 10வது இடங்களில் உள்ளன.
இந்திய நகரங்களின் நிலை என்ன?
டாம் டாம் பட்டியலில் பெங்களூர் 74.4 சதவீத நெரிசலுடன் இரண்டாவது இடத்திலும், புனே 71.1 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகத்துக்கு ஏற்ப நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்படாதது இந்திய நகரங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications
