அட்சய திருதியை நாளில் காத்து வாங்கும் பெங்களூர் நகை கடைகள்.. மக்களுக்கு தங்கம் மீதான மோகம் குறைந்ததா?
பெங்களூர்: பெங்களூரில் அட்சய திருதியை பண்டிகை நாளில், நகை கடைகள் திருப்பதி கோவில் போல் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு மிகவும் குறைவான மக்களே கடைகளுக்கு வந்துள்ளனர். இந்த வருட அட்சய திருதியை பண்டிகையில் தங்கம் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என இப்போதே நகை கடை உரிமையாளர்களும், இத்துறை அமைப்புகளும் புலம்ப துவங்கியுள்ளனர்.
சொல்லப்போனால் அட்சய திருதியை பண்டிகைக்கு முன்பு தங்கம் விலை சற்று குறைந்திருக்கும் வேளையிலும், மக்கள் மத்தியில் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது நகை கடைக்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அட்சய திருதியை பிஸ்னஸில் முக்கிய பங்கு வகிக்கும் முன்பதிவு ஆர்டர்கள் இந்த ஆண்டு 25 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இந்த பண்டிகை காலத்தில் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு நிலைமை வேறுபட்டுள்ளது. அட்சய திருதியை ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏப்ரல் 20, திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்த திதி ஏப்ரல் 19, 2026 அன்று காலை 10:49 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 20, 2026 அன்று காலை 07:27 மணிக்கு முடிவடைகிறது.
தங்கம் விலை இரு மடங்கு உயர்வு
கடந்த ஒரு ஆண்டில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. முன்பு ஒரு கிராம் ரூ.7,500 முதல் ரூ.8,000 வரை இருந்தது. இப்போது அது ரூ.15,000 அளவுக்கு நெருங்கியது. கடந்த 50 நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும், விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றமும், சர்வதேச முதலீடு சந்தை நிலவரமும் தங்கம் விலையை பாதிக்கிறது. எனவே போர் இன்னும் முடியாத காரணத்தால் பலர் தங்கம் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்த்து வாங்குவதை தள்ளிப்போடுகின்றனர்.
சென்னை விலை நிலவரம்
சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,666, 22 காரட் ரூ.14,360, 18 காரட் ரூ.11,980 என உள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.280 மற்றும் ஒரு கிலோ ரூ.2,80,000 ஆக விற்பனையாகிறது. பிளாட்டினம் ஒரு கிராம் ரூ.6,201 மற்றும் 10 கிராம் ரூ.62,010 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றைய தங்கம், வெள்ளி விலை தான் இன்றும் தொடர்கிறது.
பெங்களூர் விலை நிலவரம்
பெங்களூருவில் 24 காரட் தங்கம் ரூ.15,578, 22 காரட் ரூ.14,280, 18 காரட் ரூ.11,684 என சென்னையை விட சற்று குறைவாக உள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.275 மற்றும் ஒரு கிலோ ரூ.2,75,000 ஆக உள்ளது. பிளாட்டினம் விலை இரு நகரங்களிலும் ஒரே நிலையாக உள்ளது. பெங்களூரில் நேற்றைய தங்கம், வெள்ளி விலை தான் இன்றும் தொடர்கிறது.
கர்நாடக நகைக்கடை சங்கம்
கர்நாடக ஜுவல்லரி அசோசியேஷன் தலைவர் டிஏ ஷரவணா கூறுகையில், கடந்த ஆண்டை விட தங்கம் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.100லிருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. விலை அடிக்கடி மாறுவதால் வாடிக்கையாளர்கள் உலக நிகழ்வுகளை உற்று நோக்குகின்றனர்.
இதனால் அட்சய திருதியை நாளில் வழக்கமாக வரும் முன்பதிவுகள் விட இந்த ஆண்டு பெருமளவு குறைந்துள்ளன. தங்கம் விலை உயர்வு காரணமாக இப்போது மக்கள் கனமான நகைகளுக்கு பதிலாக எடை குறைவான நகைகளையும், 18 காரட் நகைகளை விரும்புகின்றனர்.
இதேவேளையில் தற்போது அதிகம் விரும்பும் மாடலாக கோயில் நகை வடிவமைப்புகள், பழங்கால பாணி நகைகள் தான் டிரெண்டாக உள்ளது. மேலும் சேமிப்பில் கவனம் செலுத்தும் மக்கள் 1 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 5 கிராம் வெள்ளி நாணயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
விற்பனை மந்தம்
இந்திய புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், நகை கடைக்காரர்கள் தற்போது வர்த்தகத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். விலை ஏறினாலும் இறங்கினாலும் விற்பனை அதிகரிக்கவில்லை என கூறினார். உலக அளவிலான நிச்சயமற்ற தன்மை மக்களை எச்சரிக்கையாக வைத்துள்ளது என்றும் கூறினார்.
பெரிய நகைக்கடைகளின் நம்பிக்கை
இதேபோல் சந்தையில் மாற்றுக்கருத்து கொண்டவர்களும் உள்ளனர், JJJ ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் தினேஷ் பகரியா இந்த ஆண்டு விற்பனை 20 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்புகிறார். சமீபத்தில் தங்கம் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது. இதை வாங்கும் வாய்ப்பாக பலர் பார்க்கிறார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்க கட்டிகள் அல்லது நாணயங்களுக்கு பதிலாக நகைகளையே விரும்புகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
இளைஞர்களின் டிஜிட்டல் ரூட்
தங்கம் வாங்குவதில் சமீப காலமாக புதிய மாற்றம் தெரிகிறது. இளைஞர்கள் டிஜிட்டல் தங்கத்தையும், ஈகாமர்ஸ் தளங்கள் வாயிலாக வாங்கப்படும் முறையை அதிகம் விரும்புகின்றனர். சிறிய தொகையில் முதலீடு செய்யலாம், கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, பாதுகாப்பு மற்றும் சேமிப்பு பிரச்சனை இல்லை என்பதால் இந்த முறை பிரபலமாகி வருகிறது.
அட்சய திருதியை போன்ற முக்கிய பண்டிகையின்போது தங்கம் மீதான தேவை எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு விலை ஏற்ற இறக்கம், உலக அளவிலான பதற்றம் ஆகியவை மக்களை எச்சரிக்கையாக விலகி வைத்துள்ளது. இதேபோல் தங்கம் விலை அதிகரித்துள்ள காரணத்தால் லோவர் மிடில் கிளாஸ் மக்கள் தங்கம் வாங்குவது பெரிய அளவில் குறைந்துள்ளது.















Click it and Unblock the Notifications