பிரதமர் மோடிக்கு பின்னால் மறைந்துள்ள "சக்தி" என்ன தெரியுமா? பொறிபறக்க பேசிய ராகுல் காந்தி
சண்டிகர்: ‛‛பிரதமர் நரேந்திர மோடியின் பின்னால் சில சக்திகள் மறைந்துள்ளன. அவரை இயக்கும் நபர்களை பார்த்தால் அரசியல் புரியும்'' என பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசினார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சரண்ஜித் சன்னி முதலமைச்சராக உள்ளார். மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் மாநிலத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
காங்கிரஸ் சார்பில் நேற்று பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‛‛பஞ்சாப்பின் மருமகள் நான். எனது குழந்தைகளின் உடலில் பஞ்சாப் ரத்தம் ஓடுகிறது'' என சென்டிமெண்ட்டாக பேசி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் குஜராத் மாடல் என பாஜகவும், டெல்லி மாடல் என ஆம்ஆத்மியும் பஞ்சாப் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

வேதியியல் ஆய்வகமா
இதன் தொடர்ச்சியாக இன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். ராஜ்புராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒருவாய்ப்பு கோரும் ஆம்ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்தால் பஞ்சாப்பை சிதைத்து விடுவார்கள். மாநிலம் தீப்பற்றி எரியும் நிலைக்கு சென்றுவிடும். தேர்தலில் ஓட்டுகள் மூலம் பரிசோதனை செய்ய வேண்டாம். எல்லை மாநிலமான பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும். பஞ்சாப்பிற்கு அமைதி மிக முக்கியமானது. பஞ்சாப் என்பது வேதியியல் ஆய்வகமோ, இல்லை வேறு ஏதும் பரிசோதனை கூடமும் அல்ல. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின் யாரு இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு தேர்தலில் சோதனைக்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது.

மோடியை இயக்கும் சக்திகள்
நான் 2004ல் இருந்து அரசியலில் இருக்கிறேன். நான் உள்பட புதிதாக அரசியலுக்கு வருபவர்களின் முகத்தை பார்த்து ஓட்டளிப்பதை நிறுத்த வேண்டும். பிரதமர் மோடியின் முகத்தை பார்க்காமல் அவரை பின்னிருந்து இயக்கும் சக்திகளை பார்த்தால் அரசியல் நன்றாக புரியும். மோடிக்கு ஆதரவாக ஏழைகள் உள்ளனரா. இல்லவே இல்லை. ஏனென்றால் மோடியால் ஏழைகள் தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

4 பணக்காரர்கள்
வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளின் வாழ்வை சீர்குலைத்த மோடி தனிநபர் அல்ல. அவருக்கு பின்னால் வேறு விசைகள் உள்ளன. இல்லாவிட்டால் ஒரு ஆண்டுகாலம் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி 700 விவசாயிகள் இறந்திருக்க மாட்டார்கள். விவசாயிகளிடம் இருப்பதை நாட்டின் மிகப்பெரிய 3 முதல் 4 பணக்காரர்கள் பிடுங்க பார்க்கின்றனர். விவசாயிகள் அதிக பணம் வைத்திருப்பதாகவும், அதை வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஜிஎஸ்டி பயன் யாருக்கு
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதனால் பலனடைவோர் யார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நபர்கள் பயனடையவே விவசாய சட்டங்கள், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டிக்கள் அமலாகின. பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னியின் பின்னால் எந்த சக்தியும் இல்லை. உங்களின் சக்தி மட்டுமே இருக்கிறது. இதனால் தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையை அவர் பொதுமக்களுக்காக குறைத்தார்'' என்றார்.


Click it and Unblock the Notifications
