ஜெ. போல சபதம் போட்டு சட்டசபையை விட்டு வெளியேறிய சந்திரபாபு நாயுடு-பிரஸ் மீட்டில் கதறி அழுதார்!

Subscribe to Oneindia Tamil

அமராவதி: தற்போதைய ஆந்திரா சட்டசபைக்குள் நுழைய மாட்டேன்; அடுத்த தேர்தலில் வென்று இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என அதிரடி சபதம் போட்டு சபையை விட்டு வெளியேறினார் தெலுங்குதேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு. மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தம்மையும் தமது குடும்பத்தினரையும் மிக இழிவாக பேசுவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு கதறி அழுதார் சந்திரபாபு நாயுடு.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. அண்மைய உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி ஆந்திராவில் பலவீனமடைந்து வருகிறது. இன்று ஆந்திரா மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்றது.

சட்டசபையில் அமளி

சட்டசபையில் அமளி

இன்றைய கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அம்பாதி ராம்பாபு, எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சியை கடுமையாக தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். இதற்கு தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ராம்பாபு தொடர்ந்து பேசியதால் சபை நடுவே குவிந்த தெலுங்குதேசம் எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். மேலும் ராம்பாபு எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதற்கு பதிலடியாக அமைச்சர்கள் பாலினேனி ஸ்ரீனிவாச ரெட்டி, கொடாலி நானி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் சபை நடுவே வந்து முழக்கமிட்டனர். அப்போது இரு கட்சி எம்.எல்.ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இது கைகலப்பாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு சபையை விட்டு வெளியேறினார். பின்னர் செய்தியாளர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

சந்திரபாபு நாயுடு கதறல்

சந்திரபாபு நாயுடு கதறல்

இச்சந்திப்பின் போது, இனிமேல் இந்த சட்டசபை கூட்டத்தில் நான் பங்கேற்கப் போவது இல்லை. நான் முதல்வராக பதவி ஏற்றுதான் இனி சட்டசபைக்குள் நுழைவேன். என்னுடைய மனைவி ஒருபோதும் அரசியலில் தலையிட்டதே இல்லை. நான் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் தலையிடுவது கிடையாது. அவரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இழிவாக பேசுகின்றனர் என கண்ணீர்விட்டு கதறி அழுதார். மேலும் வாழ்க்கையில் நான் எத்தனையோ போராட்டங்களை, ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டிருக்கிறேன். இதே சட்டசபையில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சி வரிசையிலும் அனல் பறக்கும் விவாதங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் இப்படி எல்லாம் ஒருபோதும் அநாகரிகம் நிகழ்ந்தது கிடையாது. சட்டசபையில் என்னுடைய மனைவி பெயரை குறிப்பிட்டு இழிவாக பேசும்போது சபாநாயகர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். எனக்கு மறுப்பு தெரிவித்து பேசுவதற்கு கூட வாய்ப்பு தரவில்லை. அதனால்தான் இனி இந்த சட்டசபைக்குள் நுழைவது இல்லை. இனிமேல் முதல்வராகத்தான் சட்டசபைக்குள் செல்வேன்.

மக்கள் ஆதரவை பெற்று முதல்வராக வருவேன்

மக்கள் ஆதரவை பெற்று முதல்வராக வருவேன்

கடந்த 2 ஆண்டுகளாக எவ்வளவு கீழ்த்தரமாக நடத்த முடியுமோ அப்படி நடத்தி வருகின்றனர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர். என்னுடைய கண்ணியத்தை சமரசம் செய்து கொண்டு இந்த சட்டசபையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடம் எடுத்துச் செல்கிறேன். அந்த மக்களின் ஆதரவுடன் மீண்டும் சட்டசபைக்குள் முதல்வராகவே நுழைவேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

1989-ல் தமிழகத்தில் ஜெ. போட்ட சபதம்

1989-ல் தமிழகத்தில் ஜெ. போட்ட சபதம்

1989-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் இதேபோல் அப்போதைய ஆளும் கட்சியான திமுகவுக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான எதிர்க்கட்சியான அதிமுகவினருக்கும் மிகப் பெரிய மோதல் வெடித்தது. இந்த மோதலில் முதல்வராக இருந்த மறைந்த முதல்வர் கருணாநிதியின் மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த அமளியில் தாம் தாக்கப்பட்டதாகவும் தமது சேலை கிழிக்கப்பட்டதாகவும் தலைவிரி கோலத்துடன் சட்டசபையில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது, இனி இந்த சட்டசபைக்குள் நுழைய மாட்டேன். இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என சபதம் எடுப்பதாக அறிவித்தார் ஜெயலலிதா. அண்மையில் வெளியான தலைவி திரைப்படத்திலும் இந்த காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டு இடம்பெற்றிருந்தது. தற்போது ஜெயலலிதா பாணியில் சந்திரபாபு நாயுடுவும், இனி சட்டசபைக்குள் நுழையமாட்டேன்... முதல்வராகத்தான் நுழைவேன் என சபதம் எடுத்து கண்ணீர் மல்க அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+