2015ல் 8 லட்சத்துக்கு வாங்கிய காரின் மதிப்பு 1.5 லட்சம்.. மனைவி வாங்கிய தங்கம் மதிப்பு 32 லட்சம்
சென்னை: கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தை வாங்கி குவித்த பலர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேநேரம் தங்கத்திற்கு பதிலாக கார் வாங்கியவர்கள், சுற்றுலா சென்றவர்கள், ஆடம்பரமான போன் வாங்கியவர்கள் இன்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. நெட்டிசன் ஒருவர் 10 வருடம் முன்பு 8 லட்சத்திற்கு கார் வாங்கியிருக்கிறார். அவரது மனைவி அதே 8 லட்சத்திற்கு தங்கம் வாங்கி இருக்கிறார். அந்த காரின் மதிப்பு ஒன்றரை லட்சம்.. ஆனால் தங்கத்தின் மதிப்பு 32 லட்சம் என்று கூறுகிறார்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்துள்ளது.கடந்த ஓராண்டில் தங்கம் விலை சவரனுக்கு 22 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளை ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 35000 வரை உயர்ந்துள்ளது. தங்கத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தையும் தொட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலையில் தங்கத்தின் மீதான சுங்கவரியை குறைத்த போது 51000 ஆக இருந்த தங்கம் இப்போது 72 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று முன்தினம் மட்டும் கிராமுக்கு ரூ.275-ம், பவுனுக்கு ரூ.2,200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனையானது. எனினும் நேற்று முன்தினம் எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதே அளவுக்கு நேற்று குறைந்து இருந்தது. அதன்படி, நேற்று கிராமுக்கு ரூ.275-ம், பவுனுக்கு ரூ.2,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 15-க்கும், ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்து 120-க்கும் சென்னையில் விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் விலை உயர்ந்ததன் மூலம் ரூ.74 ஆயிரத்தை தாண்டிய ஒரு பவுன் தங்கம், நேற்று விலை குறைந்து மீண்டும் ரூ.73 ஆயிரத்துக்கு கீழ் சென்று இருந்தது. இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து சவரன் 72 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை 72 ஆயிரத்திற்கு மேல் விற்கப்படுவதால் பெண்கள் கவலையில் உள்ளார்கள். தங்கம் வாங்க சொன்ன போது, வேறு சில விஷயங்களுக்கு அந்த பணத்தை செலவு செய்த ஆண்கள் இன்று புலம்பி வருகிறார்கள்.
அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், 10 வருடம் முன்பு நான் ஒரு காரை 8 லட்சத்திற்கு வாங்கினேன். இன்றைக்கு அந்த காரின் மதிப்பு 1.50 லட்சம் தான். ஆனால் என் மனைவி அதே எட்டு லட்சத்திற்கு தங்கம் வாங்கினார்.. இன்றைகு அதன் மதிப்பு 32 லட்சம் ஆகும்.
அதேபோல் தங்கம் வாங்குவதை விட்டு விடுமுறைக்கு சுற்றுலா செல்லாம் என்று சொன்னேன். அதற்கு என் மனைவி சுற்றுலா செல்வது ஐந்து நாட்கள் தான் சந்தோஷத்தை தரும்.. தங்கம் வாங்குவது அடுத்த ஐந்து தலைமுறைக்கு சந்தோஷத்தை தரும் என்றார்.
நான் இடையில் ஒரு போனை ஒரு லட்சத்திற்கு வாங்கினேன். ஆனால் அதே ஒரு லட்சத்திற்கு மனைவி தங்கம் வாங்கினார். என் போனின் இன்றைய மதிப்பு வெறும் 8 ஆயிரம் தான்.. ஆனால் என் மனைவி வாங்கிய தங்கத்தின் மதிப்பு இரண்டு லட்சம் ஆகும். இதில் இருந்து நான் கற்றுக்கொண்டது ஸ்மார்ட்டான வழிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது தான்.. நீங்களும் தேர்வு செய்யுங்கள்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications