பவர் கட், சொத்து வரி, இபி உயர்வு, சட்ட ஒழுங்கு கேடு! 100 நாட்கள் விஜய் ஆட்சியில் டாப் சொதப்பல்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பதவியேற்ற விஜய் தலைமையிலான தவெகஅரசு, இன்று தனது 100-வது நாளை நிறைவு செய்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் அமைந்த இந்த அரசு, பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தாலும், கடந்த 100 நாட்களில் மாநிலத்தின் நிதிநிலை, நிர்வாக கட்டமைப்பு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஆகியவற்றில் கடுமையான சவால்களையும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது.

தேர்தல் நேரத்தில், அதை செய்வேன், இதை செய்வேன்.. உங்க விஜய் வருகிறேன் என்றெல்லாம் வாக்குறுதிகளை கொடுத்த விஜய்.. கடந்த 100 நாட்களில் பல முக்கிய விஷயங்களில் மோசமாக சொதப்பி இருக்கிறார். அவர் சொதப்பிய டாப் விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.

TVK vijay

1. இபி கட்டணம்

வீட்டு உபயோக நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற திட்டத்தை உடனடியாக அமல்படுத்தியதன் மூலம், சுமார் 1.42 கோடி குடும்பங்கள் பயன்பெறத் தொடங்கியுள்ளன. எனினும், ஏற்கனவே ₹1.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் இருக்கும் டான்ஜெட்கோ நிறுவனத்திற்கு, இத்திட்டத்தால் ஆண்டுதோறும் ₹4,850 கோடி கூடுதல் மானியச் சுமை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதனால் மின்சார கட்டணம் பெரிதாக குறையவில்லை. மாறாக கடுமையாக மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் ஜூலை மாத மின்கட்டணத்தைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர். மே மாதத்தில் செலுத்திய கட்டணத்தைக் காட்டிலும், ஜூலையில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்ததாக நுகர்வோர் குற்றஞ்சாட்டினர்.

சமீபத்தில் அமைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு பின்பே இந்த கட்டண உயர்வு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து விஜய் ஆட்சியை நோக்கி எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மின்வாரியத்தின் முதற்கட்ட சோதனையில் 3,70,000 மின் இணைப்புகளில் வழக்கத்திற்கு மாறான கட்டண உயர்வு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 15,000 வீடுகள் ஜூலை மாதத்தில் 1,000 யூனிட்டுகளுக்கும் அதிகமான பயன்பாட்டுப் பட்டியலிலும், சுமார் 1 லட்சம் வீடுகள் 500 முதல் 1,000 யூனிட்டுகள் வரையிலான பயன்பாட்டுப் பிரிவிலும் திடீரென சேர்ந்துள்ளன.

கோடைகால வெப்பம் காரணமாக ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் பயன்பாடு அதிகரித்திருக்கலாம் என்ற போதிலும், இந்த அளவிற்குக் கட்டணம் உயர்ந்ததற்குத் தொழில் நுட்பக் கோளாறுகளும், பணியாளர்களின் அலட்சியமுமே காரணம் எனக் கூறப்படுகிறது. மின் மீட்டர்களை ஆய்வு செய்வதிலும், கணக்கீடு எடுப்பதிலும் ஏற்பட்ட தாமதமே நுகர்வோரை அதிகக் கட்டணப் பிரிவுக்கு தள்ளியுள்ளது. மேலும், பழுதுபட்ட மீட்டர்களைச் சரியாகப் பராமரிக்காததால் மின் வாரியத்திற்கும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: ₹1,680 கோடி வருவாய் இழப்பு

பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 150 மீட்டர் சுற்றளவிலான 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூடியது சமூக நல ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனால், இம்முடிவால் மாநில ஆயத்தீர்வை மற்றும் வாட் (VAT) வரி மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய காலாண்டு வருவாயில் சுமார் ₹1,680 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாற்று வரிக் கொள்கை இல்லாததால் பிற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் நிலவுகிறது.

சரி டாஸ்மாக் மூடியதால் எல்லாம் சரியாகிவிட்டது என்றால் இன்னமும் இல்லை.. இப்போதும் அதே மோசமான பிராண்டுகள், அதே பாட்டிலுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் கலாச்சாரம் தொடருகிறது. கரூரில் பாட்டீலுக்கு 10 ரூபாய் என்று கூறிய விஜய் ஆட்சியில் அது 20 ரூபாயாக உயர்ந்ததே மிச்சம்.

7 தொகுதி இடைத்தேர்தல் வெற்றிடம்

நேர்மையான ஆட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்த அதே விஜய் இப்போது குதிரைப்பேர புகாரில் சிக்கி உள்ளார். சட்டமன்றத்தில் தவெக 108 உறுப்பினர்களுடன் சிறுபான்மை ஆட்சியாக நடத்தி வருகிறது. 6 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் பதவி விலகல் மற்றும் முதல்வர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததன் காரணமாக தற்போது 7 சட்டமன்றத் தொகுதிகள் எம்எல்ஏ இன்றி காலியாக உள்ளன.

இதில் 6 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவிற்கு சென்றது குதிரை பேரம் என்ற புகார் உள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்காக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் பல்வேறு வழக்குகளால் இந்த இடைத்தேர்தல்கள் தள்ளிப்போவதால் தொகுதி மேம்பாட்டுப் பணிகள் முடங்கியுள்ளதோடு, ஆட்சி தொடருமா என்ற கேள்வியும் உள்ளது.

4. சொத்து வரி

சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சொத்து வரி உயர்வு மற்றும் திருத்த நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு உடனடியாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர்த்தப்பட்ட வரிகளைத் திரும்பப்பெற்று, பழைய நிலையிலான சொத்து வரி விகிதமே தொடரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் காலியிடங்களுக்கு வசூலிக்கப்படும் சொத்து வரியே, நகரத்தின் சாலைப் பராமரிப்பு, தெருவிளக்குகள், கழிவுநீர் அகற்றம் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கிய நிதி ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில், மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் உள்ள சில குறிப்பிட்ட சொத்துகளுக்கான வரித் தொகை, திடீரென 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டதாகக் கூறி வரைகாலைக் கட்டணப் ரசீதுகள் சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டன. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த சென்னைவாசிகள் மற்றும் வர்த்தகர்கள், மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். முகப்பேரில் வசிக்கும் ஒருவருக்கு அரை ஆண்டிற்கான சொத்து வரி ₹13,000-லிருந்து திடீரென ₹63,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காரப்பாக்கத்தில் 1,600 சதுர அடி வீட்டின் வரி ₹895-லிருந்து ₹1,835 ஆக அதிகரித்துள்ளது.

கட்டிட அளவில், நிலத்தின் பரப்பளவில் முறையான மாற்றங்கள் எதுவுமில்லாத நிலையிலும் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ல் 90% வரி உயர்த்தப்பட்டது. இப்போது 1,400 சதுர அடி வீட்டிற்கு ₹3,500 வரை செலுத்தச் சொல்கிறார்கள். எந்த மாற்றமும் இல்லாதபோது எப்படி மறுமதிப்பீடு செய்தார்கள்? எனக் கேள்வி எழுப்புகிறார். கிண்டியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், 2021-ல் கூடுதல் கட்டிடம் கட்டியபோது வரி ₹1,000-லிருந்து ₹2,125 ஆக உயர்ந்தது. ஆனால் இப்போது எந்த மாற்றமும் செய்யாத நிலையிலும் ₹4,100 ஆக மாற்றப்பட்டுள்ளது, என்கிறார். இதனால் பல இடங்களில் வரி வசூலிப்பாளர்களே அதிகாரப்பூர்வ விளக்கம் வரும் வரை வரியைச் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

5. பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பு: டெல்டா விவசாயிகள் அதிருப்தி

தமிழ்நாட்டில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில், பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாககுறுதி அளித்திருந்தது தவெக. தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, 2025 மே முதல், இந்த ஆண்டு பிப்ரவரி வரை, கூட்டுறவு நிறுவனங்களில், பயிர்க்கடன் பெற்ற, 14.43 லட்சம் விவசாயிகளின், 5,932 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது.

ரூபாய் 50,000 வரை பயிர்க்கடன் பெற்றிருந்த குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருந்தார். அனைவருக்கும் பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை, அதாவது ரூ. 75,000க்குள் கடன் பெற்றவர்களுக்கு முழு தொகையும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000-ம் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, 8,33,773 குறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.3,599.67 கோடி. 5,16,183 சிறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.1,995.42 கோடி. 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.337.15 கோடி. மொத்தம் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடித் தொகை ரூ.5,932.23 கோடி. சராசரியாக ₹1.35 லட்சம் வரை கடன் வைத்துள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளில் 62%-க்கும் அதிகமானோர் முழு நிவாரணம் பெற முடியாமல் தவித்தனர். இதனால் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் விவசாயிகள் அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன.

6. தேங்கும் கோப்புகள்

புதிய அமைச்சர்களின் நிர்வாகப் சுமை காரணமாக, அனைத்து முக்கிய முடிவுகளும் முதலமைச்சரின் தனிச் செயலகம் வழியாகவே எடுக்கப்படுகின்றன. இந்த அதீத அதிகாரக் குவிப்பால் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட அரசு உத்தரவுகள் (G.O.) மற்றும் டெண்டர் ஒப்புதல்கள் தேக்கமடைந்துள்ளன. குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளில் களப்பணிகள் வேகம் இழந்துள்ளன.

7. வாக்குறுதிகள் என்னாச்சு?

இது போக மகளிர் உரிமை தொகை 2000, இலவச சிலிண்டர், மாநிலம் முழுக்க அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று தவெகவின் டாப் வாக்குறுதிகள் பல இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. பல திமுக திட்டங்களுக்கு வெற்றி என்று ஸ்டிக்கர் ஒட்டியதோடு இந்த அரசு தனது வாக்குறுதிகளை கைகழுவிட்டதோ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன .

8. தெலுங்கு மாநிலங்களுக்கு செல்லும் முதலீடுகள்

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 104 நிறுவனங்களுடன் ₹1.02 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகின. எனினும், முதல் 100 நாட்களில் வெறும் 8% திட்டங்களுக்கு மட்டுமே சிப்காட் (SIPCOT) மூலம் நில ஒதுக்கீடும், சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குறுதி அளிக்கப்பட்ட 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாவதில் காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்து, கீர்த்தனா தொழிற்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் தொழில் முதலீடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, தமிழகத்துக்கு வரவிருந்த அல்லது தமிழகத்தில் தொடங்க இருந்த பெரும் முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திராவை நோக்கி நகர்வது பெரும் ஆச்சரியத்தையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. "ஆந்திராவுக்கு எப்படி இது சாத்தியமாகிறது?" என்ற கேள்வி தற்போது தென்னிந்திய தொழில்துறை வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.

சமீப காலத்தில் தமிழகத்தை விட்டு நழுவிய அல்லது ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்த முக்கிய திட்டங்களைப் பார்க்கும்போது இந்தக் கவலை அதிகரிக்கிறது. முதலில், ஹவாசுங் (Hwaseung) நிறுவனத்தின் திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். தூத்துக்குடியில் ₹1,720 கோடி மதிப்பில் புதிய ஆலை அமைக்க முன்னாள் திமுக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் குப்பம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழக மண்ணில் தொடங்க இருந்த ஒரு மிகப்பெரிய திட்டம் எல்லை தாண்டிச் சென்றது எப்படி? இது தமிழகத்தின் தொழில்துறைக்கு பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக, ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏற்கெனவே பிரம்மாண்ட உற்பத்தித் தளங்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், தமிழகத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. ஆனால், தனது வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்துக்கு வெளியே ஆந்திராவின் தடா (திருப்பதி) பகுதியில் புதிய கிரீன்ஃபீல்டு உற்பத்தி ஆலையையும், அதற்கான வெண்டார் பூங்காவையும் அமைக்க முடிவு செய்துள்ளது. இத்தனை காலம் தமிழகத்தில் வேரூன்றிய ஒரு நிறுவனம் விரிவாக்கத்துக்கு ஆந்திராவைத் தேர்வு செய்தது ஏன் என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.


9.பரந்தூர் மற்றும் துறைமுகம்-மதுரவாயல் திட்டங்களில் ஆய்வுத் தேக்கம்

₹20,000 கோடி மதிப்பிலான பரந்தூர் புதிய பசுமை விமான நிலைய நில எடுப்பு மற்றும் 20.6 கி.மீ தூர சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தின் பல்வேறு தொகுப்புகளை மறுஆய்வு செய்வதற்காக அரசு இடைக்காலத் தடை விதித்தது. இந்த ஆய்வுக் காலநீட்டிப்பால் கட்டுமான நிறுவனங்களுக்கு தினசரி இழப்பீடு அதிகரித்து, திட்ட மதிப்பீடும் உயர்ந்து வருகிறது. சென்னையின் பல முக்கிய பாலங்கள், திட்டங்கள் இதேபோல் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.


10. சட்ட ஒழுங்கு

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் வைக்க தொடங்கி உள்ளன. புதிய அரசு பொறுப்பேற்ற 140 மணி நேரத்திற்குள் மாநிலம் முழுவதும் 24 கொலைகள் அரங்கேறியது. தற்போது வரை 200க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறி உள்ளன. சென்னை திருவொற்றியூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த 18 வயது பிளஸ் 2 மாணவர் தனுஷ், அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் சக மாணவர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னதாக எச்சரித்து அனுப்பிய போதிலும், வகுப்பறைக்கு வெளியே திரண்ட 12 சிறார்கள் தனுஷை வழிமறித்துத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 12 சிறார்களைப் பிடித்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவர் வன்முறையைக் கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தின் பின்புறம், மூன்றாம் ஆண்டு பயின்று வந்த 19 வயது மாணவர் கே. அமுதன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். கல்லூரி விடுதி மற்றும் முன்விரோதம் காரணமாக இரு மாணவர் குழுக்களுக்கு இடையே தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலின் உச்சக்கட்டமாக இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது. இக்கொலை வழக்கில் மூத்த மாணவர்கள் உள்பட 14 பேரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை பீளமேடு உடையாம்பாளையம் பகுதியில் 25 வயதான நவீன் என்ற இளைஞர் பட்டப்பகலில் ஒரு கும்பலால் விரட்டிச் சென்று சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அப்பகுதியில் உள்ள சமூக விரோதக் கும்பலுடன் ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் பொதுவெளியில் பெரும் வன்முறையாக மாறியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் அரங்கேறிய இக்கொலை, குடியிருப்புப் பகுதிகளில் ஆயுதக் கலாச்சாரம் அதிகரித்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தென் மாவட்டமான திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே வள்ளத்து நத்தம் பகுதியில் நடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 40 வயதான காளிமுத்து என்பவர் தனது இரு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காரில் வந்த மர்ம கும்பல் வாகனத்தின் மீது மோதியது. இதில் அவரது 5 வயது மகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், காளிமுத்துவை அக்கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. முன்விரோதம் காரணமாக அரங்கேறிய இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 3 முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.

சென்னை புது வண்ணாரப்பேட்டை இந்திரா காந்தி நகர் அருகே, விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட வாய் தகராறு பின்னர் கோஷ்டி மோதலாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக 25 வயதான விஷ்ணு என்ற கடை உரிமையாளரை ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.

திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அடுத்தடுத்த சொதப்பல்கள், தவறுகள், வன்முறைச் சம்பவங்களைக் கையில் எடுத்து விஜய் அரசை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றன. புதிய அரசின் நிர்வாக அனுபவமின்மை, உளவுத்துறையின் தோல்வி மற்றும் போலீசாரின் கண்காணிப்புக் குறைபாடே அரசின் தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+