அன்பில் மகேஷ் இன்னும் ஒரு வருஷம் சிறையில் இருக்கட்டுமே! ஜெயில் சாப்பாடா சாப்பிடுறாரு? ஜெயக்குமார்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சிறையில் ஒரு வருஷம் இருக்கட்டுமே, அவர் என்ன ஜெயில் சாப்பாடா சாப்பிடுறாரு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அன்பில் மகேஷ் இன்னும் ஒரு வருஷம் ஜெயிலில் இருக்கட்டுமே! வீட்டு சாப்பாடு, எல்லா வசதியும் கொடுத்து இருக்குறாங்க! அங்க என்ன அவரு ஜெயில் சாப்பாடா சாப்பிட்டுட்டு இருக்காரு..? ஊழல் பண்ணவங்களை சிறையில் தள்ளணும்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் கூட்டத்தில் கூட தவெகவினர் பங்கேற்கவில்லை. அந்தளவுக்கு அவர்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை என தெரிவித்தார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தற்போதைய ஆட்சியில் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. நான் கலெக்டராக இருந்திருந்தால் என்கவுன்ட்டர் செய்திருப்பேன். வீடு தேடி வந்து பிரச்சினை செய்தால் அவர்களை என்ன செய்வது? சிகப்பு கம்பளம் விரித்தா வரவேற்க முடியும்? அடித்து உதைத்து சுட்டுத் தள்ள வேண்டும்.
அந்த ஆட்சியருக்கு இந்த ஆபாச மெசேஜால் எத்தனை மன வேதனை இருந்திருக்கும். இந்த ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பில்லை, சாதாரண குடிமக்களுக்கும் பாதுகாப்பில்லை. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ 400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். அவர் முன்னாள் அமைச்சர் என்பதால் புரோட்டோகால்படி அவருக்கு முதல் வகுப்பு கைதிகளுக்கான செல் ஒதுக்கப்பட்டது.
இங்கு அவருக்கு வழங்கப்படும் உணவு உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் அவருக்கு வீட்டு உணவு வழங்க கோர்ட் அனுமதி அளித்தது. அதன்படி அவருக்கு வீட்டு உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவின் தரத்திற்கு அவரே பொறுப்பு என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
ஜாமீன் கேட்டு அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான தீர்ப்பு வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
