தின்னர் வைத்து அறிவியல் ஆராய்ச்சி! 11 வயது சிறுவன் தீயில் கருகி பலி! ஜோலார்பேட்டையில் சோகம்

Subscribe to Oneindia Tamil

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே, யூடியூப் வீடியோக்களை பார்த்து அறிவியல் ஆராய்ச்சி செய்ய, எளிதில் தீப்பற்றக் கூடிய தின்னரை கொண்டு பரிசோதனை செய்த 11 வயது சிறுவன் உடல் முழுவதும் தீக்காயமடைந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பேட்டை, சோலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையரசு. இவரது 11 வயது மகன் கவின். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Jolarpet

படிப்பில் கெட்டிக்காரரான கவினுக்கு புதிய அறிவியல் ஆராய்ச்சிகளை செய்வதில் ஆர்வம் அதிகமாம். இவர் தனது பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொண்டிருக்கிறாராம். இதனால் தனது தந்தையின் செல்போனில் யூடியூப் சேனல் பார்த்து அதில் இருந்து அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து பார்ப்பாராம்.

வர்ணம் பூசும் தின்னர்

இந்த நிலையில் வீட்டின் மாடியில் வர்ணம் பூசுவதற்காக வைக்கப்பட்டிருந்த தின்னரை பயன்படுத்தி ஏதாவது ஆராய்ச்சி செய்யலாம் என கவின், யூடியூப்பில வீடியோ ஒன்றை தேடி பார்த்துள்ளார்.

கவின் ஆடையில் தீ

அதில் வந்ததை போல் கவின் செய்ய முயன்ற போது தின்னர் சிறுவனின் ஆடையில் பட்டு உடனே தீப்பிடித்ததாம். இதையடுத்து உடல் முழுவதும் தீ பரவியதால் சிறுவன் வலியால் துடித்துள்ளார். அவரது அலறல் சப்தம் உடனே கேட்காவிட்டால், மேலும் மேலும் கவின் அலறியதை கேட்டு கீழே இருந்த பெற்றோர் மாடிக்கு ஓடி வந்தனர்.

தீயில் கருகிய மகன்

அப்போது மகன் தீயில் எரிவதை பார்த்த தந்தை இளையரசு, தீயில் எரிந்த மகனை கட்டிப்பிடித்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளார். இதில் இளையரசுக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.

மருத்துவமனையில் சிகிச்சை

படுகாயமடைந்த சிறுவன் கவின், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின் உடலில் 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

அலறிய சிறுவன்

அங்கு சிகிச்சை அளிக்கும் போதெல்லாம் அலறி துடித்த நிலையில், சிகிச்சை பலனின்றி கவின் உயிரிழந்தார். கவினை எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் என எண்ணியிருந்த தாய் கண்ணீர் விட்டு கதறினார். சிறுவன் இறப்பதற்கு முன் பள்ளித் தாளாளருக்கு போன் செய்து பேசிய தாய், "என் புள்ளைய காப்பாற்றி கொடுங்கள், தவம் இருந்து பெற்ற புள்ளை சார்" என கதறினார். தந்தை இளையரசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் அறிவுரை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஸ்மார்ட்போன்களில் குழந்தைகள் என்ன மாதிரியான வீடியோவை பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தின்னர், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை குழந்தைகள் பயன்படுத்தாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். ஆராய்ச்சி உள்ளிட்டவைகளை பெரியவர்களின் துணை இல்லாமல் சிறுவர்கள் செய்வதை அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான தின்னர்

தின்னர் தீப்பிடித்து எரிந்தால் அதில் இருந்து வரும் நச்சு புகை தலைவலி, மயக்கம், வாந்தி , சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும். தின்னர் உடம்பில் பட்டால் தோல் அரிப்பு, சிவந்து போதல் ஏற்படும். தின்னரை தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் தின்னரை வைத்தால் உடனே தீப்பற்றிவிடும். தின்னரை பெயிண்ட் அடிப்போர் பயன்படுத்தும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிளவுஸ், முகமூடி, கண்களுக்கு பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+