சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளில் 13% பேர் பாலியல் சீண்டல்களை சந்தித்துள்ளனர்: சர்வேயில் ஷாக்
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவிகளில் 13 சதவிகிதம் பேர் வன்கொடுமைகளால் (abuse) பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை மருத்துவ கல்லூரி சார்பில் சுமார் 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள 300 மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்கொடுமை
300 மாணவிகளிடம் இந்த வினாதாள்கள் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் 39 மாணவிகள் தாங்கள் வன்கொடுமையை (abuse) எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். அதில் 17 பேர் பாலியல் (sexual abuse) வன்கொடுமையை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதில் மோசமான விஷயம் என்னவெனில் 3 மாணவிகள் தாங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டமுறை இவ்வாறான பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். 14 மாணவிகள் ஒருமுறை வன்கொடுமையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
இந்த வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட 37.93 சதவிகித குழந்தைகளுக்கு அவர்களின் தந்தைகளே முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து 20.68 சதவிகித மாணவிகள் சொந்த சகோதரர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வன்கொடுமையை அனுபவித்த மாணவிகள் தங்கள் தந்தையிடமிருந்துதான் இதனை எதிர்கொண்டுள்ளனர் என்பதுதான் இதில் கவலைக்குரிய விசயமாகும்.

தந்தை/உறவினர்கள்
இந்த 39 மாணவிகளில் 5 மாணவிகள் அவர்களது உடன்பிறந்தவர்களின் நண்பர்களாலும், அல்லது மாணவிகளின் நண்பர்களாலும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 மாணவிகளில் 3 பேர் அக்கம் பக்கம் வீட்டினராலும், அல்லது பாதுகாப்பர்களாலும் வன்கொடுமையை எதிர்கொண்டுள்ளனர். மற்ற 3 மாணவிகள் உறவினர்களால் இந்த பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். சமீபத்திய ஆய்வின்படி 86.33 சதவீத குழந்தைகள் உடல் ரீதியான வன்கொடுமை குறித்தும், 93.66 சதவீத குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்தும் அறிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்சரிக்கை
இந்த ஆய்வுகள் ஒரு குறிப்பிட்ட சமூக-பொருளாதார பின்புலம் கொண்ட மாணவ குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளாகும். இதை ஒட்டுமொத்த பள்ளிகளுக்கும் பொருத்தி பார்க்க கூடுதல் ஆய்வுகள் தேவை என தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வளரிளம் பருவத்தில் சிறுவர், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை மற்றும் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது அது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications