130 km வேகம்.. 1800 பேருக்கு இடம்.. சென்னையில் தயாராகும் 5 ரயில்கள் யாருக்காக தெரியுமா?
சென்னை: புதிதாக 5 "அம்ரித் பாரத்" ரயில்களை தயாரிக்க, சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கிஉள்ளது. 'வந்தே பாரத்' ரயிலைத் தொடர்து, 'அம்ரித் பாரத்' ரயில்கள், சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. மேலும் ஐசிஎப் அதிகாரிகள் இதை பற்றி பல்வேறு விஷயங்களை தெரிவித்திருக்கிறார்கள்.. அது என்ன தெரியுமா?
இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் திட்டத்தில் வந்தே பாரத் ரயில்களுக்குப் பிறகு அம்ரித் பாரத் ரயில்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதிவேகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட இந்த ரயில்கள், சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை ஐ.சி.எப். ஆலை
இந்நிலையில், சென்னை ஐ.சி.எப். ஆலைக்கு மேலும் ஐந்து புதிய அம்ரித் பாரத் ரயில்களைத் தயாரிக்க ரயில்வே வாரியம் தற்போது அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. இது ரயில்வே துறையிலும் பயணிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அம்ரித் பாரத் ரயில்கள் தனித்துவமான புஸ் புல் (Push-Pull) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகின்றன. ரயிலின் இருபுறமும் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருப்பதால், இவை வந்தே பாரத் ரயில்களுக்கு இணையான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டவை.
130 கிலோமீட்டர் வேகம் ரயில்
குறிப்பாக, மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில்களில் ஒரே நேரத்தில் 1,834 பயணிகள் வரை பயணிக்க முடியும். ஒரு ரயிலில் மொத்தம் 22 எல்.எச்.பி. (LHB) பெட்டிகள் இணைக்கப்படும், இதில் 12 முன்பதிவு பெட்டிகள் அடங்கும். நாடு முழுவதும் ஐ.சி.எப். ஆலையில் மட்டும் மொத்தம் 200 அம்ரித் பாரத் ரயில்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய அளவில் 30 வழித்தடங்களில் சுமார் 60 அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை தாம்பரம் முதல் கொல்கத்தா வரையிலும், தாம்பரம் முதல் திருவனந்தபுரம் வரையிலும், மேலும் நாகர்கோவில் முதல் நியூ ஜல்பய்குரி வரையிலும் இந்த ரயில்கள் வெற்றிகரமாகச் சேவையாற்றி வருகின்றன.
தெற்கு ரயில்வே வசதிகள்
பயணிகளின் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், புதிய வகை நவீன பெட்டிகளைத் தயாரித்து இணைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய முதல் ரயில் தற்போது தயாராகிவிட்டது.
புதிதாகத் தயாரிக்கப்படும் இந்த பெட்டிகளில் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரயிலின் தரைப்பகுதி, இருக்கைகள் மற்றும் படுக்கை வசதிகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சிற்றுண்டி மேஜைகள், உயர்தர திரைச்சீலைகள் மற்றும் நேர்த்தியான உள் அலங்காரங்கள் என விமானங்களுக்கு இணையான வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. தெற்கு ரயில்வேயில் நிலவும் அதிகப்படியான பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்த ஐந்து புதிய ரயில்களை விரைந்து தயாரித்து வழங்க ஐ.சி.எப். நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
5 புதிய அம்ரித் பாரத் ரயில்கள்
இந்த 5 புதிய அம்ரித் பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சேவைகள் வழங்கப்பட உள்ளன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த அதிவேக ரயில்கள் பயண நேரத்தைக் குறைப்பதோடு வசதியான பயணத்தையும் உறுதி செய்யும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே வாரியத்தின் இந்த அனுமதி, தமிழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications