ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக, அதிமுகவை விஞ்சிய ‛கேப்டன்’ கட்சி!168 பேருடன் தேமுதிக பலே பிளான்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் நிலையில் 168 பேரை பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளாக ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திமுகவுக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் தேர்தல் பொறுப்பாளர்களாக 168 பேரை தேமுதிக தலைமை நியமனம் செய்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி திடீரென காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது.
பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தொகுதி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளது.

காங்கிரஸில் ஈவிகேஎஸ் இளங்கோவன்
காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர், மாஜி காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை நிறுத்தி தொகுதியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ், திமுகவினர் காய்நகர்த்தி உள்ளனர்.

தேமுதிக தனித்து போட்டி
இந்த தொகுதியில் தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ஓ பன்னீர் செல்வம் அணி, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் சார்பிலும் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது.

தேமுதிக வேட்பாளர் திமுகவில்?
இந்நிலையில் தான் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் திமுகவில் இணைய போவதாக தகவல்கள் பரவின. இதனை இதனை ஆனந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‛‛2005 முதல் தேமுதிகவில் இருந்து வருகிறேன். தேமுதிகவின் கிளை செயலாளர் முதல் பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறேன். என்னை நம்பி கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. தேமுதிகவினர் தீவிர பிரசாரம் செய்து வருகிறோம். என் மீது அவதூறு பரப்பவே திமுகவுக்கு போகப் போவதாக வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர்'' என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

168 பொறுப்பாளர்கள் நியமனம்
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பணியை தேமுதிக தீவிரமாக தொடங்கி உள்ளது. அதன்படி தற்போது தேமுதிக வேட்பாளர் ஆனந்தை வெற்றி பெற செய்யும் வகையில் தொகுதியில் பணியாற்றுவதற்காக 168 பொறுப்பாளர்களை தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றும் வகையில் திமுக சார்பில் 11 அமைச்சர்கள் உள்பட 30 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழுவில் 111 பேர் இடம்பெற்ற நிலையில் தற்போது புதிதாக 6 பொறுப்பாளர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டனர். இந்த 2கட்சிகளையும் விடவும் தேமுதிக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியலில் 168 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 குழுவாக செயல்பாடு
அதன்படி தேமுதிகவில் 5 குழுவாக இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேமுதிகவின் துணை செயலாளர்கள் அக்பர் தலைமையில் ஒரு குழு, கட்சியின் துணை செயலாளரான எல்கே சுதீஷ் மற்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலாளரான முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ், தேமுதிக அவை தலைவர் இளங்கோவன் ஆகியோர் தலைமையிலும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 5 பேர் தலைமையில் மொத்தம் 168 பேர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications