16ஆம் தேதி தான் இறுதி கெடு.. சமையல் எரிவாயு சிலிண்டர் e-KYC-ஐ எவ்வாறு அப்டேட் செய்யலாம்? விவரம்
சென்னை: வீட்டிற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்றாலும், அரசின் மானியத்தைப் பெற வேண்டும் என்றாலும், சிலிண்டர் பதிவு (Booking) செய்பவர்களின் பயோமெட்ரிக் (Biometric) விவரங்களைச் சிலிண்டர் ஏஜென்சி நிறுவனங்கள் கேட்கின்றன. இதற்காகப் பலமுறை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு e-KYC-ஐ அப்டேட் செய்வதற்கான அவகாசம், வரும் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் e-KYC-ஐ எவ்வாறு அப்டேட் செய்யலாம் என்று பார்ப்போம்.
இந்தியா முழுவதுமே சிலிண்டர் விற்பனையில் முறைகேடுகளைத் தடுக்கவும், மானியம் சரியான நபர்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்தவும் மத்திய அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் மின்னணு முறையில் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் எண்ணுடன் இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளன. அதேபோல இறந்தவர்களின் பெயரில் உள்ள கேஸ் இணைப்புகள், ஒரே முகவரியில் இருக்கும் போலி மற்றும் கூடுதல் இணைப்புகளைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்காக, KYC அப்டேட் செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

ஏனெனில், வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது. கடைகளுக்கு வழங்கப்படும் சிலிண்டரின் விலையோடு ஒப்பிடும்போது, இது மிக மிகக் குறைவான விலையில்தான் வழங்கப்படுகிறது. எனவே சிலிண்டர்களை உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குச் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க அரசு புதிய தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதற்காகவே சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்துள்ளவர்கள் தங்களது ஆதார் அடிப்படையிலான மின்னணு e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று அரசு அவ்வப்போது காலக்கெடு விதித்து வந்தது. தற்போது இறுதிக்கெடுவைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.
இதன்படி, வரும் 16-ஆம் தேதிக்குள் சரிபார்ப்பை நிறைவு செய்யாத வாடிக்கையாளர்களுக்குச் சமையல் எரிவாயுக்கான அரசு மானியம் நிறுத்தப்படும் எனச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் (SMS) அனுப்பி வைத்துள்ளன.
e-KYC இணைக்காதவர்கள், அதாவது பயோமெட்ரிக் பதிவு செய்யாதவர்கள், மானிய விலையில் சிலிண்டர் வாங்க இயலாது. வணிக ரீதியிலான கூடுதல் கட்டணம் செலுத்திச் சிலிண்டர் வாங்க வேண்டியது வரலாம். அதேபோல், சரிபார்ப்பு இல்லாத வாடிக்கையாளர்களின் புதிய சிலிண்டர் புக்கிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த ஓராண்டாக கேஸ் ஏஜென்சி நிறுவனங்களே e-KYC செய்து வந்தன. சாமானிய மக்கள் அங்கு சென்று எளிதாக e-KYC செய்ய முடியும். அதேநேரம் கேஸ் ஏஜென்சிக்குச் செல்ல முடியாதவர்கள், மின்னணு e-KYC-ஐத் தங்களது மொபைலில் சில நிமிடங்களில் செய்துவிட முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
நீங்கள் இண்டேன் (Indane) சிலிண்டர் பயன்படுத்துபவர் என்றால், IndianOil One ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்யுங்கள். அதேநேரம் நீங்கள் பாரத் கேஸ் (Bharat Gas) வைத்துள்ளீர்கள் என்றால், Hello BPCL என்ற ஆப்பை பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்யுங்கள். ஹெச்பி (HP) சிலிண்டர் என்றால், HP Pay என்ற ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள்.
அந்த ஆப்களில் நீங்கள் சிலிண்டர் ஏஜென்சியில் பதிவு செய்த மொபைல் எண்ணைக் கொடுத்தால் OTP கேட்கும். அதனை வைத்து உள்ளே செல்ல வேண்டும். உள்ளே சென்றால், 'e-KYC Update' என்ற ஆப்ஷனைக் காட்டும். அதைக் கிளிக் செய்தால், Aadhaar FaceRD என்ற ஆப்பை டவுன்லோடு செய்யுமாறு கேட்கும். அதை டவுன்லோடு செய்து உள்ளே சென்றால், உங்கள் கேஸ் சிலிண்டர் செயலி நேரடியாக Aadhaar FaceRD செயலியுடன் இணையும்.
அப்படி இணைந்த பின்னர் உங்கள் மொபைலின் கேமரா ஓபன் ஆகும். அதன்பின்னர் அந்தக் கேமரா முகத்தைச் ஸ்கேன் செய்து உறுதிப்படுத்தும். அதன்பிறகு 'e-KYC நடவடிக்கை நிறைவுற்றது' என்று தகவல் வரும். அப்படி வந்தால்தான் e-KYC முடிந்துவிட்டதாக அர்த்தம்.
ஒருவேளை உங்களால் மொபைலில் செய்ய முடியவில்லை என்றால், நேரடியாகச் சிலிண்டர் ஏஜென்சிக்குச் செல்லுங்கள். அங்கு செல்லும்போது ஆதார் அட்டை மற்றும் நுகர்வோர் எண் (Consumer Number) கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் கணினி வழியாக உங்களுக்கு e-KYC செய்து தருவார்கள்; எளிதாக வேலை முடிந்துவிடும். மக்களே, வரும் 16-ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடித்துவிடுங்கள்!


Click it and Unblock the Notifications
