இதுதான் திராவிட மாடல் ஆட்சி! ஆன்லைன் சூதாட்டத்தை எதிர்க்கும் சட்ட போராட்டம்.. விடாமல் வென்ற ஸ்டாலின்
சென்னை: வரும் 7ஆம் தேதியுடன் திமுக தனது 2 ஆண்டுக்கால ஆட்சியை நிறைவு செய்யப் போகிறது. முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற அன்று, 'இது திராவிட மாடல்' ஆட்சி என்றார்.

60 ஆண்டுகளுக்குப் பின் ஒலித்த சொல்:
தனது பெயரை 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்று மேடையில் புதுமையாக உச்சரித்தார். இந்த வார்த்தைகள் பெரிய அளவில் பேசு பொருளாக மாறின. பலரும் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் சொன்ன 'Dravidaian Stock' என்ற வாசகம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதாவது 1962இல் நாடாளுமன்ற உறுப்பினராக வென்று டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் அண்ணா, தனது கன்னிப்பேச்சில் ""I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian" என்று குறிப்பிட்டார். அந்தப் பேச்சில் பொதிந்திருந்த 'Dravidaian Stock' என்ற சொல்லைத்தான் ஏறக்குறைய 60 ஆண்டுகள் கழித்து தனது பதவியேற்பில் மீண்டும் உச்சரித்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
அண்ணாவின் இந்த வார்த்தையை மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்தவில்லை. அவர் சொன்ன 'ஆட்டுக்கு ஏன் தாடி; நாட்டுக்கு ஏன் ஆளுநர்' என்ற கொள்கைக்கும் இந்த இரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் வாய்ப்பு கிடைத்தபோது எல்லாம் மீண்டும் உயிர்கொடுத்துள்ளார்.
ஆளுநருக்குமான முதலமைச்சருக்கும் இந்த மோதல் என்பது ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தில் உச்சகட்டத்தை எட்டியது.

மாநிலவாரியாகப் பறிபோன உயிர்கள் பட்டியல்
இந்த ஆன்லை ரம்மி மற்றும் மொபைல் கேம் விளையாட்டு இந்தியா முழுவதும் பலரது உயிரைப் பறித்துள்ளது. இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. இதுவரை இந்த ஆன்லைன் ரம்மி, நாடு முழுவதும் உள்ள பலரது உயிர்களைப் பறித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த 23 வயதே நிரம்பிய கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால், கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொள்கிறார்.
அதேபோல் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் லட்சக்கணக்கான தொகையை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் மரணத்தைத் தழுவிக்கொள்கிறார்.
அடுத்துக் கடந்த 2021 ஜனவரியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவர் 21 லட்சத்தை இறந்துள்ளார். இதே ஆண்டு நவம்பரில் 14 வயது நிரம்பிய ஆகாஷ் என்ற சிறுவன் திரிசூரில் அதிகமாக கேம் ஆடி, அதனால் இறந்துபோகிறார்.
இதே கேரளாவைச் சேர்ந்த 26 வயது பெண் ஏறக்குறைய இந்த ஆன்லைன் ரம்மியில் 1.75 கோடி ரூபாயை ஆலைன் லாட்டரி சூதாட்டத்தில் இழந்ததால், நிலைகுலைந்து போய் 2022 பிப்ரவரி மாதம் உயிரை மாய்த்துக் கொள்கிறார். இதன்பின் இப்போது 2023 கடந்த பிப்ரவரி மாதம் 32 வயது இளைஞர் 2 கோடியை இழந்த சோகத்தில் சாவைத் தழுவிக் கொள்கிறார்.
2021 ஜனவரியில் தெலங்கானாவில் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஒருவரும், மார்ச் 2023இல் ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரும் அடுத்தது மரணத்தைத் தழுவியுள்ளனர்.
ஜூலை 2022 ஹைதராபாத்தில் சூதாட்டத்திற்கு அடிமையானதால் ஒருவர் மரணமடைகிறார். இதே ஆண்டு ஆகஸ்டில் தெலங்கானா சூர்யாபேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு ஆசிரியர் ஒருவர் கோடிக்கணக்கில் வங்கியில் கடன்பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் இறந்துபோகிறார்.

ஆசிரியர் முதல் காவல்துறை வரை பலி:
அடுத்து இதே ஆண்டு அக்டோபர் மாதம் ஹனுமன்கொண்டா மாவட்டம் மல்லாக் பள்ளி கிராமத்தைச் சார்ந்த 26 வயது இளைஞர் இறந்து போகிறார்.
இப்போது 2023 ஜனவரியில் இதே மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தை 21 வயது பொறியியல் மாணவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
அடுத்ததாகக் குஜராத் மாநில பட்டியலுக்கு வருவோம். இங்கும் 21 வயது பொறியியல் மாணவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால், மரணத்தைத் தழுவுகிறார்.
மத்தியப் பிரதேசத்தில் 2021 ஆகஸ்ட் மாதம் 21 வயது இளைஞர் ஒருவரும், ஜனவரி 2022இல் போபாலில் 11 வயது சிறுவனும் ஆகஸ்டில் 22 வயது நிரம்பிய விளையாட்டு ஆசிரியர் ஒருவரும் தங்களின் விலை மதிக்க முடியாத உயிரை இந்த சூதாட்டத்திற்காக விட்டுள்ளனர்.
மேலும் 20 வயது அமன் அஹிர்வால் உயிரையும் இதே ஆன்லைன் சூதாட்டம்தான் பறித்தது. இது கடந்த 2022ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம்.
ஹரியானாவில் நடந்தது இன்னும் கொடுமை. சூதாட்டத்திலிருந்த மக்களைக் காப்பாற்ற வேண்டிய காவல் ஒருவர் கடந்த மார்ச் 2023இல் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் இறந்துபோகிறார்.
முதல் மரணம் ஜூலை 2019இல் மகாராஷ்டிராவில் நடந்தது. பினேவை சேர்ந்த 20 வயது இளைஞர் மரணம். அடுத்து 2022 பிப்ரவரியில் 14 வயது சிறுவன் மும்பையில் இறந்துபோகிறார்.
சத்தீஸ்கரில் கடந்த 2022 பிப்ரவரி மாதம் 15 வயது பொடியன் இறந்துவிடுகிறான். இதேபோல் பஞ்சாபில் 2022 ஜூலையில் 20 வயது கல்லூரி மாணவர் ஜலந்தரில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2020 ஜூலையில் 13 வயது சிறுவன் ஆன்லை சூதாட்டத்திற்கு அடிமையாகி இறந்து போனார். இவர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதாவது பெற்றோர் ஆன்லைன் கேம் ஆட அனுமதிக்கவில்லை என்பதால் இந்தத் தற்கொலை நடந்துள்ளது.
பீகாரில் உள்ள பாட்னாவில் கடந்த 2022 அக்டோபரில் 16வயது சிறுவன் பலியாகிறார்.

ரீசார்ச் செய்ய முடியாததால் பலி:
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் மொபைல் சூதாட்டத்தில் லட்சக் கணக்கான தொகையை இழந்ததால் கடந்த 2021 மார்ச் மாதம் இறந்துள்ளார். அதே போல் மே மாதம் ஒரு உணவக சமையல்காரர்அதிகப் பணத்தை மொமைப் போன் உள்ள ஃபேண்டசி ஸ்போர்ஸ்ட் கேமில் இழந்ததால் இறந்துள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் 23 வயது இளைஞர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானதால் இறந்துள்ளார். அதுவும் இண்டர்நெட் ரீசார்ச் செய்யப் பெற்றோரிடமிருந்து பணம் கிடைக்கவில்லை என்பதால் இந்த மரணம் நடந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2022 பிப்ரவரி மாதம் வீடியோ கேம் ஆட்டத்திற்கு அடிமையானதால் இறந்துள்ளார். இதே மாநிலத்தில் ரயில்வே ஊழியர் ஒருவர், லட்சக் கணக்கான பணத்தை ஆன்லைன் சூதில் இழந்ததால் தனது மகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இதே ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 2022 ஏப்ரல் மாதம் இறந்துபோனார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கடந்த 2022 ஜூலையில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்த விட்டானாலா மோகன் கிருஷ்ணா என்ற 21 வயது பொறியியல் கல்லூரி மாணவர் இறந்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் 14 வயது சிறுவன் கடந்த 2022 நவம்பரில் இறந்துள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனின் உயிரை அநியாயமாக இந்த ஆன்லைன் கேம் பறித்துள்ளது. அதுவும் ஊரடங்கு காலத்தில் இந்தப் பொடியன் வீட்டில் விளையாட ஆரம்பித்து அடிமையானதால் இறந்துள்ளார்.
உத்தரகண்ட்டில் 23 வயது கல்லூரி இளைஞர் ஒருவர் இந்த ஆண்டு ஜனவரியில் தற்கொலை செய்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரை ஆன்லைன் சூதாட்டத்திற்காக அர்ப்பணித்துள்ளார்.
ஆக மொத்தமாக இதுவரை 32 பேர் பிறமாநிலங்களில் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை ஏறக்குறைய 41 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 9 பேர். இதனால் அதிக உயிர்களைப் பறிகொடுத்துள்ளது தமிழ்நாடுதான். ஆகவேதான் அதிக அக்கறையை முதலமைச்சர் ஸ்டாலின் இந்தவிவகாரத்தில் எடுத்துக் கொண்டார்.
இவ்வளவு உயிர்களுக்கும் நியாயம் கேட்டுத்தான் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தைப் பல கட்ட தடைகளுக்குப் பிறகு ஆளுநரைப் பணியவைத்து வெற்று காட்டியுள்ளார் ஸ்டாலின்.

அமைதி ஆகாத முதலமைச்சர் ஸ்டாலின்:
இந்த வெற்றி திமுக ஆட்சியின் மாபெரும் சாதனைதான் என்கிறார்கள் மக்கள். குறிப்பாக இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அதிக அக்கறைகளை எடுத்துக் கொண்டு முதல்வருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இனி, இச்சட்டப் போராட்டத்தில் அடுத்த கட்டம் என்ன? தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்?
இப்படி சில கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன்,"இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்ததால், இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சம் வரும். அது ஒரு சாதகமான விஷயம்.
ஆனால் இந்தச் சூதாட்டத்தை நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இல்லை. வேறு மாநிலத்திலிருந்து இயக்குவதால் அதைக் கண்காணிப்பது கஷ்டம். அதேபோல மனிதனும் மனிதனும் ஆடும் போதுதான் தற்போதுள்ள சூதாட்டச் சட்டம் பொருந்தும்.
ஆன்லைன் லைன் ரம்மியில் ஒரு மனிதனும் ஒரு ரோபோவும் சேர்ந்து ஆடுகின்றார்கள். அதனால் சட்டத்தில் மேலும் சில விஷயங்களை நீதிமன்றம்தான் முடிவெடுத்து விளக்க வேண்டும்.
எது எப்படி இருந்தாலும். இந்தத் தடை சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்றியதை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும். வரவேற்க வேண்டும். தமிழ்நாடு அரசு தங்களின் வரம்புக்குள் என்ன செய்யவேண்டுமோ அதை முழுமையாகச் செய்துவிட்டார்கள். அதற்கு மேல் ஒன்றிய அரசு கையில் உள்ளது.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சட்டம்
இப்போது ஒன்றிய அரசும் ஏப்ரல் 6ஆம் தேதி intermediary guidelines and digital media ethics code rules 2023 என ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதில் தன்னிச்சையாக இயங்கக் கூடிய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு இந்த ஆன்லைன் கேம்களை அலசி ஆராய்ந்த அனுமதி அளித்த பிறகுதான் பொதுமக்கள் பயன்படுத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆகவே இதன் மூலம் ஒன்றிய அரசும் இந்த சூதாட்ட நிறுவனங்களை ஒழுங்குபடுத்த, அழுத்தம் தரலாம். இதில் நான் அழுத்திச் சொல்ல விரும்புவது என்னவென்றால், மக்களைப் பொறுப்பாக நடந்து கொள்ள நிர்ப்பந்தம் செய்வதைவிட இந்த நிறுவனங்களைப் பொறுப்பாக நடந்து கொள்ளும்படி விதிமுறைகளை வகுக்கவேண்டும்.
நிறுவனம் சார்ந்து அதிகப்படியான விதிகள் இருந்தால்தான் தவறுகள் ஏற்படாது. அவர்கள் அஞ்சி சரியாக முறையில் ஆட்டத்தை நடத்துவார்கள். அப்படி மீறும் போது அந்த நிறுவனத்தையே தடை செய்யும்படியான விதிகளை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும்.

அரசியலமைப்பு தந்துள்ள மாநில உரிமை
நமது அரசியலமைப்பு சட்டத்தில் வரும் ஏழாவது அட்டவணையில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை, மாநில பட்டியல் அடுத்து ஒன்றிய பட்டியல், மூன்றாவது பொதுப் பட்டியல். அப்படிப் பார்த்தால் சூதாட்டம், 'பெட்' கட்டி ஆடுவது போன்றவை எல்லாம் மாநிலப் பட்டியலில்தான் வருகின்றன. ஆகவே மாநில அரசுதான் இதைத் தடை செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற போது, அதை மாநில அரசால் மட்டுமே செய்துவிட முடியாது. உதாரணமாகச் சொன்னால், கூகுள், ப்ளே ஸ்டோர் போன்ற நிறுவனங்களை மாநில அரசு நிர்ப்பந்திக்க முடியாது. ஒன்றிய அரசுதான் அதற்கான வழிமுறைகளை வழங்க முடியும்.
அதனடிப்படையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள தடைச் சட்டத்தை எடுத்துக் கொண்டு, மேலான வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்கும். எடுக்கவேண்டும்" என்கிறார்












Click it and Unblock the Notifications