யானை பலத்துடன் திமுக - காங்கிரஸ்.. முட்டிமோதும் அதிமுக - பாஜக! 2023ல் தொடங்கும் பிரதமர் தேர்தல் ரேஸ்
சென்னை: 2022 ஆம் ஆண்டு நம்மைவிட்டு விடைபெற இன்னும் 2 நாட்களே மீதம் உள்ளது. இந்த ஆண்டில் பல்வேறு பரப்புகளையும், திருப்பங்களையும் தமிழ்நாடு அரசியல் சந்தித்தது. 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் 2023 ஆண்டும் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அடுத்த ஆண்டில் நடக்க இருக்கு அரசியல் நிகழ்வுகளை பார்ப்போம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு முடிவடைந்து 2023 ஆம் ஆண்டு வரவுள்ளது.
மறுபக்கம் அதிமுகவோ 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்தே உட்கட்சி பூசல்களை சந்தித்து வழக்குகளிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறது. ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலால் சரியான எதிர்க்கட்சியாகக் கூட அதிமுகவால் செயல்பட முடியாத நிலை உள்ளது.

2 தேசிய கட்சிகள்
மறுபக்கம் காங்கிரஸ், பாஜக ஆகிய 2 தேசிய கட்சிகளும் கடந்த சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி வகித்த மாநில பின்னாலேயே செல்ல விரும்புகின்றன. அதிமுகவில் நிலவும் உட்கட்சிப்பூசலால் பாஜகவுடனான அதன் கூட்டணி குழப்பமாகவே உள்ளது. மறுபக்கம் பாஜகவும் கூட்டணிக்கு நாங்கள் தலைமை தாங்குவோம் என்று கூறியது குழப்பத்தை மேலும் வலுவடைய செய்து இருக்கிறது.

காங்கிரஸ் யார் பக்கம்?
அத்துடன் திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை வளைத்துப் போட எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், 2024 பிரதமர் தேர்தலை மனதில் வைத்து 2023 ஆம் ஆண்டிலும் வலுவான திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடரும் என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாத யாத்திரை
2023ல் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு மக்கள் செல்வாக்கை பெற பல்வேறு கட்சிகள் முயற்சிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தங்களை அதிமுகவுக்கு மாற்றான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திக்கொள்ள முயன்று வரும் பாஜக, ராகுல் காந்தியின் வழியை பின்பற்றி மாநிலம் முழுவதும் பாத யாத்திரைகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

பாமக நிலைபாடு
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 234 தொகுதிகளுக்கும் பாத யாத்திரை செல்ல உள்ளதாக முன்பே அறிவித்து விட்டார். மறுபக்கம் வட மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளில் வலுவான வாக்கு வங்கியை தங்கள் வசம் வைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடுநிலை அன்புமணி
கடந்த தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமகவின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், அவரும் ராமதாஸும் அன்றாடம் வெளியிடும் அறிக்கைகளில் மத்திய பாஜக அரசையும் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் தமிழ்நாடு அரசை பாராட்டியும், விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

புரியாத புதிர்
மீண்டும் முதலமைச்சராகும் கனவுடன் தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ள அன்புமணி தற்போது நடுநிலையை கடைபிடித்து வருகிறார். அவரும் வரும் ஜனவரி மாதம் சோழர் கால நீர்பாசன முறையை கொண்டு வரக்கோரி 2 நாட்கள் பாத யாத்திரை செல்ல இருக்கிறார். ஆனால், 2024 தேர்தலை மனதில் வைத்து அவர் எந்த கூட்டணிக்கு செல்வார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

வலுவாக இருக்கும் திமுக கூட்டணி
விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகள் திமுக கூட்டணியிலேயே தொடரும் என்றே அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்படுகிறது. தேமுதிகவின் நிலையை பொறுத்தவரை கணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

கமல், டிடிவி, சீமான்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் காங்கிரஸ் - திமுகவுடன் கூட்டணியை நோக்கி நகரும் என்றும், சீமானின் நாம் தமிழர் வழக்கம்போல் தனித்தே நிற்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் எதிர்காலம் என்பது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசலை அடிப்படையாக கொண்டே அமையும் என்பதால் 2023ல் அதன் நகர்வும் கணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications