10 நாட்களில் 3 படுகொலை.. இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கிடையாது.. விஜய்க்கு சிபிஎம் வார்னிங்
சென்னை: கோயம்புத்தூரில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த விஷயத்தை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் கருத கூடாது என்றும், போதைப்பொருள் பரவலை தடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கோவை மாவட்டம் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர் அமுதன் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலைக்கு சிபிஐ(எம்) வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மாணவரை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கொடிய சம்பவம் தற்செயலாக நடந்ததில்லை. இதற்கு முன்பாக தொடர்ச்சியாக சிறிதும் பெரிதுமாக இரண்டு தாக்குதல்கள் மாணவர்களுக்குள் நடந்திருக்கிறது.

மாணவர்களின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு மிக அடிப்படையாக கல்லூரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மாநில அரசும் காவல்துறையும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் என்று இதைச் சிறுமைப்படுத்துவது சரியானது அல்ல. இவர்கள் கும்பலாக செயல்படுவதற்கும் தயக்கமின்றி தாக்குதல்களில் ஈடுபடுவதற்கும் கஞ்சாவும் போதைப் பொருட்களுமே உந்துதலாக இருந்து வருகிறது.
கல்லூரி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, கொலை செய்யப்படட மாணவர் தங்களிடத்தில் கல்வி கற்க வந்தவர் என்கிற மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை. மாணவர் மறைவுக்கு பின்புகூட பெற்றோரை ஆறுதல் படுத்தக்கூட கல்லூரி நிர்வாகம் தயாராக இல்லை. மாணவரின் பெற்றோர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் உள்பட அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
கோவை மாவட்டத்தில் போதை கலாச்சாரத்தோடு இணைந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த 10 நாட்களில் 3 படுகொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த உண்மையை மறைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, கோவையை சூழ்ந்து வருகிற இந்த போதை சார்ந்த வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும், போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிப்பதற்கும் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரி நிர்வாகங்கள் பணம் குவிக்கும் நோக்கத்தோடு மாணவர்களை சேர்க்காமல், சமூக பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்கிற சமூக அக்கறையுடன் கல்வி நிர்வாகங்கள் நடந்து கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிக்கை வெளியாகியிருக்கும் இந்த நேரத்தில், சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படியான தொடர் கொலைகள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
