5 விரல்கள்.. எதை தொடுவார் அப்பாவு? ‘சொன்னதை கவனிச்சீங்களா?’ இது மட்டும் நடந்தா.. பாவம் ஓபிஎஸ்..!
சென்னை : ஓபிஎஸ் - ஈபிஎஸ் அதிகாரப் போரில் சட்டமன்றத்தில் யாருடைய கோரிக்கை ஏற்கப்பட இருக்கிறது? யாருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட இருக்கிறது என்பது அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் விவகாரத்தில் திமுகவும், சபாநாயகரும் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளதன் அடிப்படையில் பார்த்தால், 5 ஆப்ஷன்களில் ஒன்றைத்தான் அவர் முடிவு செய்திருக்கலாம் எனத் தகவல்கள் வருகின்றன. சபாநாயகரின் இந்த முடிவால் இரு தரப்பும் திருப்தி அடைவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திமுக முடிவு என்ன?
அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் இன்னும் உறுதியாகாத நிலையில், முக்கியமான முடிவை எடுக்கவேண்டிய பொறுப்பு, தமிழகத்தை ஆளும் திமுகவின் கைக்குச் சென்றுள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்த நிலையில், அவரை கட்சியை விட்டு தூக்கிவிட்டு ஆர்பி உதயகுமாரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால், வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக யாரை சபாநாயகர் அப்பாவு அங்கீகரிக்கப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்
ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். அதேநேரம், தன்னை மாற்றக்கூடாது என ஓ.பன்னீர்செல்வமும் அப்பாவுவிடம் கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில், அக்டோபர் 17-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டப்படும் என அறிவித்த சபாநாயகர் அப்பாவு இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் குழப்பம் குறித்துப் பேசும்போது, அதிமுகவினர் சட்டப்பேரவை மரபுப்படியே அமரவைக்கப்படுவார்கள் என்றும், முன்னாள் முதலமைச்சர்களான ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் உண்டான மரியாதை முறையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

என்ன முடிவு?
சட்டமன்றத்தில் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மூலம் சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் அனுப்பினார். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய எம்.எல்.ஏக்களை ஈபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களோடு அமர வைக்காமல், வேறு பக்கம் இருக்கை ஒதுக்குமாறு கோரினார். இந்நிலையில், அதிமுக விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவை எடுத்திருக்கிறார்? அதிமுகவில் யாருடைய கோரிக்கையை ஏற்றிருக்கிறார்? ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு எப்படி சீட் ஒதுக்கப்பட இருக்கிறது? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக 3 ஆப்ஷன்கள் இருக்கின்றன.

ஆப்ஷன் 1
அதாவது ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், சட்டமன்ற இருக்கை விவகாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. சபாநாயகர் அப்பாவு சமீபத்திய பேட்டியின்போது ஒரு க்ளூவையும் கொடுத்திருக்கிறார். எங்களுக்குள்ள சண்டை, பக்கத்துல உட்கார மாட்டோம் என்றெல்லாம் கூறுவதை ஏற்க முடியாது, சட்டசபை மரபுப்படியே அவர்கள் நடத்தப்படுவார்கள் என அப்பாவு கூறியுள்ளார். இதன் மூலம், எடப்பாடி தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சீட்டுகள் மாற்றப்படாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆப்ஷன் 2
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக உள்ள 62 எம்.எல்.ஏக்களும் கையெழுத்திட்டு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், சட்டப்படி அவரே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தகுதி பெற்றவர் ஆகிறார். இதனால், ஈபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கூடும். அப்படி அறிவிக்கப்பட்டால், எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகே ஆர்பி உதயகுமாருக்கு சீட் ஒதுக்கப்படும்.

ஆப்ஷன் 3
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டாலும், அவரை பின் வரிசைகளில் அமர வைக்காமல், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் அமரும் முன் வரிசையிலேயே அமர வைக்கலாம். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, பாமகவின் ஜி.கே.மணி, பாஜகவின் நயினார் நாகேந்திரன் அமர்ந்திருக்கும் வரிசையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்படலாம்.

அப்பாவு சொன்னதை கவனிச்சீங்களா
அவை மரபுப்படி, சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கான வரிசை என்றாலும் கூட முன்னாள் முதலமைச்சர், அவை முன்னவர் பதவிகளை வகித்த ஓ.பன்னீர்செல்வம், பிரதான எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவருக்கு அங்கு சீட் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு சொன்னதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சீட்
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோருக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு நடுநடுவே பழையபடியே சீட் வழங்கப்படுமா என்பது ஒரு கேள்வி. எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர்கள் மூவருக்கும் அருகருகே ஓர் பக்கத்தில் சீட் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. ஓபிஎஸ் உள்ளிட்ட நால்வரும் அதிமுகவின் அதிருப்தி அணி என கருதப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆப்ஷன் 4 - ஆப்ஷன் 5
அதேநேரம், ஆப்ஷன் 4ம் இருக்கிறது. அதன்படி, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமிக்கும் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டாலும், ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்களின் சீட்கள் மாற்றப்படாமல் போகக்கூடும். பழையபடி அவர்கள் அதிமுக எம்.எல்.ஏக்களாக கலந்தே அமர வைக்கப்படலாம். அல்லது ஆப்ஷன் 5-ஐ கையில் எடுத்து உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் முடிவு வரும் வரை எந்த மாற்றமும் இன்றி பழைய படியே தொடர உத்தரவிடப்படலாம்.

அந்த நிலை வராது
2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றபிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். எனினும் மெஜாரிட்டி இருந்ததால் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இந்த காலகட்டத்தில் அதிமுக இரு அணிகளாகச் செயல்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவையில் இருக்கைகள் மாற்றப்பட்டன. 4வது வரிசையில் தான் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த முறை ஓபிஎஸ்ஸுக்கு அதுபோன்ற நிலை வராது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications