3 அலை பரவ நாமே காரணமாகி விடக்கூடாது...கொரோனா தடுப்பூசி செலுத்த முன் வாருங்கள் -டாக்டர் ராதாகிருஷ்ணன்
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை: தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தாக்கும் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது அலை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றாவது அறை இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு இருக்கிறது என்பதால் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் மத்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதுவரை 100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி என்ற நிலையில் 100 கோடி தடுப்பூசி என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தியதில் முதல் 5 இடங்களில் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் அதிகளவு தடுப்பூசி செலுத்தி உத்தரகண்ட் சாதனை சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

53.84 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பு
தமிழ்நாட்டிலும் பல கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தற்போது 53.84 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 5.4 கோடி
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராதகிருஷ்ணன், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டிய சாதனை நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் 5.4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

மக்கள் முன்வர வேண்டும்
இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

ஒரே ஆயுதம் தடுப்பூசி
கொரோனாவை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதால் மக்கள் அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்தாண்டின் இறுதியில் 3வது அலை பரவக்கூடும் என்பதால் அதற்குள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மூன்றாவது அலை வருவதற்கு நாமே காரணமாக இருக்கக் கூடாது என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications