அரசியல் களத்தில் 80 ஆண்டுகள்! - காந்தி முதல் ஜெ வரை.. கருணாநிதியின் அரசியல் பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இறக்கும்போது அவரது வயது 94. சரியாக 14 வயதில் அவர் பள்ளி மாணவனாகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்படி பார்த்தால் அவரது பொது வாழ்க்கைக்கு 80 வயது.

1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அவர் 23 வயது இளைஞர். ஆனால், அதற்கு முன்னரே, அவர் 1942இல் தனது 'முரசொலி' பத்திரிகைக்கு ஆசிரியராக அமர்ந்துவிட்டார்.

இரட்டை குதிரையில் சவாரி: இதே ஆண்டில்தான் அவர் தமிழ்நாட்டின் ஆகப் பெரிய தலைவரான அண்ணாதுரையைச் சந்தித்தார். அப்படிப் பார்த்தால், அண்ணாதுரைக்கு முன்பாகவே திரைத்துறையில் கால் பதித்த திராவிட இயக்கத் தலைவர் மு.கருணாநிதி.

80 years in the political field!- From Gandhi to Jayalalitha, Karunanidhis political journey

'ராஜகுமாரி' படத்தின் மூலம் 1947இல் முறையாக கதை வசனம் எழுதி திரையுலகில் அறிமுகமானார் கருணாநிதி. அந்தப் படமே அவருக்கு அமோக புகழைச் சம்பாதித்துக் கொடுத்தது.

ஒரு பக்கம் திரைத் துறை, இன்னொரு பக்கம் அரசியல் துறை என 23 வயதிலேயே அவரால் இரட்டை குதிரைகளில் சவாரிசெய்ய முடிந்திருக்கிறது.

இந்த 23 வயதிற்குள் அண்ணாவின் அறிமுகம், பெரியாரின் நட்பு என அவர் தமிழக அரசியலில் பரவலான இடத்தைப் பிடித்துவிட்டார்.

பெரியார், மணியம்மையாரைத் திருமணம்செய்ய முடிவுசெய்தார். அதை பலரும் கடுமையாக எதிர்த்தனர். அதில், அண்ணா பிரதான பங்கு வகித்தார். அவருடன் பக்கபலமாக நின்றார் திராவிட இயக்கத்தின் தளபதி என அடையாளம் காணப்பட்ட மு.கருணாநிதி.

இந்தக் கருத்துவேறுபாட்டால், பெரியாரிடமிருந்து விலகி 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார் அண்ணாதுரை. அண்ணாவின் தம்பிகள் இயற்கையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.

5 மாதம் கடுங்காவல் தண்டனை: பெரியாரிடம் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு, பரம்பரை எதிரியாக மாறினார் ராஜாஜி. அவர் கட்டாய இந்தியைப் பள்ளிகளில் கொண்டுவந்தார். அதன் விளைவாக தமிழ்நாட்டில் பூகம்பம் வெடித்தது.

இந்தியை எதிர்த்து மாபெரும் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. அதில் தமிழ்நாடு முழுவதும் 6 பேர் பலி; 72 பேர் காயமடைந்தனர். டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என மாற்றக் கோரி ரயில் தண்டவாளத்தில் தலைவைக்கத் துணிந்தார் மு.கருணாநிதி.

இந்தப் போராட்டம் இந்தி எதிர்ப்பை மையமாகக் கொண்டு வெடித்ததுதான். தமிழ்நாடு முழுவதும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. 1953 ஜூலை 17 அன்று நீதிமன்றம் கருணாநிதிக்கு 5 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்தது. அண்ணாதுரையும் சிறைக்குச் சென்றார்.

இதே வருடம் கருணாநிதி பயணம் செய்த கார் திருப்பத்தூர் அருகே விபத்தில் சிக்கியது. அவரது இடது கண் கடுமையாகக் காயமடைந்தது. உடனே அறுவைச் சிகிச்சை நடந்தது. அன்று முதல் கறுப்புக் கண்ணாடியை அணியும் பழக்கத்தை மேற்கொண்டார் கருணாநிதி.

இதுவரை சமூக சீர்திருத்த இயக்கமாகச் செயல்பட்டு வந்த திமுக 1957இல் நடைபெற இருந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசை எதிர்த்து தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தார் அண்ணா.

ஆகவே, அந்தத் தேர்தலில் குளித்தலையில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தை எதிர்த்துப் போட்டியிட்டார் மு.கருணாநிதி. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.

13 முறை இடைவிடாமல் வெற்றி: வென்ற அவர், "இதுவரை அரசியல் விழிப்புணர்வைப் பரப்பிய தொண்டனாக என்னை நான் கருதினேன் என்றால், சட்டசபை உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது என்னை அரசியல்வாதியாக மாற்றியது" என்றார்.

அதன்பின் 13 முறை சட்டசபைக்கு பல்வேறு தொகுதிகளிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்முறை குளித்தலையில் வென்ற அவர் 2 முறை தனது பூர்வீக பூமியான திருவாரூரில் நின்று வென்றார். இறுதிவரை ஒரு முறைகூட தோல்வி அவரது வாசலைத் தொட்டதே இல்லை.

1960 செப்டம்பர் 25 ஆம் தேதி நடந்த திமுக அமைப்புத் தேர்தலில் கட்சியின் பொதுச்செயலாளராக ஆனார் சி.என். அண்ணாதுரை. பொருளாளர் பதவி மு.கருணாநிதிக்கு கிடைத்தது.

அதன்பின்னர் மிகக் கடுமையான போராட்டங்கள் அவரது கட்சிக்குக் காத்திருந்தன. இந்தி மொழித் திணிப்பு தலைதூக்கியது. 1965 ஜனவரி 26 குடியரசு தினத்தைத் துக்க நாளாக அறிவித்தது திமுக. இந்திக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பும் விடுத்தது.

தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வீதிக்கு வந்தனர். போராட்டம் வெடித்தது. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டிகள் தீக்கு இரையாகின. வன்முறை வெடித்தது. கூடவே காவல்துறையின் துப்பாக்கியும் வெடித்தது. இந்திக்கு எதிர்ப்பு காட்டி பல மாணவர்கள் தீக்குளித்தனர். போராட்டத்திற்கு தலைமை ஏற்ற கருணாநிதி, பிப்ரவரி 16 அன்று தேசியப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 30(1) இன் கீழ் கைதானார். வன்முறை வெடிக்க இவரைக் காரணம் காட்டியது காவல்துறை. 6 மாதம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

11 லட்சம் நிதி திரட்டல்: இதை, "1965, பிப்ரவரி 16. என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனைகளில் ஒன்று" என்று குறிப்பிட்டார் கருணாநிதி.

இப்படி போராட்டக் குணத்தால் மட்டும் கருணாநிதி தனித்துத் தெரியவில்லை. நிர்வாகத் திறமையிலும் அவர் தனித்துத் தெரிந்தார். குறிப்பாக 1967 சட்டசபைத் தேர்தலுக்காக நிதிதிரட்ட கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். பம்பரமாகச் சுழன்ற கட்சிப் பொருளாளர் கருணாநிதி, 11 இலட்சம் ரூபாயைத் திரட்டினார்.

இன்ப அதிர்ச்சிக்குள் ஆழ்ந்துபோனார் அண்ணாதுரை.

பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

கட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா பொதுக்கூட்டம் நடந்தது. அனைத்து தொகுதி வேட்பாளர் பெயர்களையும் வரிசையாக அறிவித்தவர், சைதாப்பேட்டை எனச் சொல்லிவிட்டு ஒருநொடி அமைதியானார்.

கூட்டத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பு. யார்? யார்? என எதிர்பார்ப்பு எகிறியது. அண்ணாதுரை தன் வழக்கமான பாணியில், "பதினோரு லட்சம்" என்றார். கர ஒலி காதைக் கிழித்தது.

1967 தேர்தலில் காமராஜர் தோற்றார். பக்தவத்சலமும் தோற்றார். காங்கிரசே கவிழ்ந்தது. ஆறு கட்சிகள் கூட்டணியில் திமுக வென்றது. அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார். அவர் அமைச்சரவையில் கருணாநிதிதான் பொதுப்பணித் துறை அமைச்சர்.

'உடன்பிறப்பே' உருவானது: அதன்பின் இரண்டு ஆண்டுகள்தான் அண்ணாவின் இதயம் இயங்கியது. 1969 பிப்ரவரி 9 அன்று அண்ணாதுரை மறைந்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்புக்கு வந்தார் மு.கருணாநிதி.

அதன் பின்னர்தான், 'முரசொலி'யில் 'உடன்பிறப்பே' எனக் கூறி, தன் கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தார் கருணாநிதி. இவர் முதலமைச்சராகப் பதவியேற்றாலும், அந்தக் காலகட்டம் முழுவதும் அவர் முள் படுக்கை மீதுதான் படுத்திருக்க நேர்ந்தது.

கருணாநிதிக்கும் அவரின் நெருங்கிய நண்பராக அதுவரை இருந்துவந்த எம்.ஜி. ராமச்சந்திரனுக்கும் மோதல் தொடங்கியது. இறுதியாக எம்.ஜி.ஆர் கட்சியின் பொருளாளர் உள்பட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

அவரைச் சமாளிப்பது எளிதான காரியம் என நம்பிய மு.கருணாநிதிக்கு, அது எளிமையான காரியம் இல்லை என்று பிற்கால அனுபவங்கள் உணர்த்தின.

எம்.ஜி.ஆர். 1972 அக்.7ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். அவருடன் சி.பி.ஐ. கட்சியின் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் கூட்டணி அமைத்தார்.

அந்த நேரம் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. திமுக சார்பில் பொன்.முத்துராமலிங்கம் நின்றார். அதிமுக சார்பில் மாயத்தேவர் நின்றார். அதிமுக முதல் முறையாக தேர்தலில் அங்கு வென்றது.

திமுக ஆட்சிக் கலைப்பு: அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட எம்.ஜி.ஆர்., திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளிவிட ஆரம்பித்தார். காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இருந்த கூட்டணியில் கசப்பு கூடியது. இந்திரா காந்தி திமுகவைக் கைகழுவ முடிவுசெய்தார்.

பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 25 ஆம் நாள் அவசரநிலையை நாடு முழுவதும் பிரகடனப்படுத்தினார். அவருக்கு எதிரான தலைவர்கள் வேட்டையாடப்பட்டனர். திமுக தலைவர்கள் குறிவைக்கப்பட்டனர். சமயம் பார்த்து ஊழல் குற்றச்சாட்டைக் கூறி, 356 பிரிவைப் பயன்படுத்தி ஆளுநர் கே.கே.ஷாவை வைத்து திமுக அரசைக் கவிழ்த்தார் இந்திரா.

அதற்கு முந்தைய நாளன்றுதான், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.கருணாநிதி ராமராஜ்ஜியத்தை நடத்துகிறார்" என ஆளுநர் ஷா புகழ்மாலை அணிவித்திருந்தார். அப்போது அவர்கூட அறிந்திருக்க மாட்டார், அடுத்த நாள் ஆட்சியைக் கவிழ்க்கத் தாமே துணை இருப்போம் என்று! அதன் தொடர்ச்சியாக ஊழலை விசாரிக்க சர்க்காரியா கமிஷனை அமைத்தார் இந்திரா காந்தி.

இந்தக் காலகட்டத்தில் எம்.ஜி,ஆரின் கை ஓங்கியது. அவர் இந்திரா பக்கம் சாய்ந்தார். மு.கருணாநிதியின் இயக்கத்தை முற்றிலும் முடக்குவதற்கான வேலைகள் நடந்தன. 'முரசொலி' அவசரநிலைக் காலம் என்பதால் தணிக்கைக்கு உள்ளானது.

இம் என்றால் சிறைவாசம்: மு.க.ஸ்டாலின், சிட்டிபாபு, 'முரசொலி' மாறன் என திமுகவினர் பலரும் சிறையில் தள்ளப்பட்டு, கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனர். "இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்" என பாரதி வரிகளைக் காட்டி வர்ணித்தார் திமுக தலைவர் கருணாநிதி.

ஆனால், எதிர்பார்த்த மாதிரி எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி கூட்டணி நீடிக்கவில்லை. அதே காலகட்டத்தில் இந்திராவின் அடக்குமுறைகளால் ஆடிப்போன தேசிய கட்சிகள் ஓரணியில் திரண்டன. இந்திரா காந்தியை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தன.

1977இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி ஜனதா கட்சியிடம் தோற்றது.
மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

அந்தக் கூட்டணியிலிருந்த திமுக தமிழ்நாட்டில் பெரியதாக வெற்றி பெறவில்லை. ஆகவே கட்சிக்குள் பூகம்பம் வெடித்தது. கருணாநிதியை ராஜிநாமா செய்ய நெடுஞ்செழியன் உள்பட்ட தலைவர்கள் நெருக்கடி தந்தனர்.

இதே 1977இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்றது. எம்.ஜி.ஆர் முதல்வராக ஆனார். சென்னை, அண்ணாநகரில் வென்ற மு. கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவராக ஆனார்.

தமிழக அரசியலில் நடந்த தலைகீழ் மாற்றமாக இதை அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.

மத்தியில் ஆண்டுவந்த மொரார்ஜி தேசாய் அரசும் சரண் சிங் அரசும் அடுத்தது வீழ்ந்தன.

1980 இல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

கசப்பான நினைவுகள் நீங்கி, இந்திரா காந்தியுடன் திமுக கூட்டணி வைத்து. 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக' என்றார் கருணாநிதி. அவர் நினைத்ததை போல் இந்திராவின் கூட்டணி வென்றது. 39 இடங்களில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றது.

மாநிலத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தார். அப்போதுதான் முன்னேறிய சாதியினருக்கான இடஒதுக்கீட்டை கொண்டுவர எம்.ஜி.ஆர் முயன்றார். அதுவே அவரது ஆட்சிக்கு வினையானது. இந்திரா, எம்.ஜி.ஆரின் ஆட்சியையும் கவிழ்த்தார்.

நீதி கேட்டு நெடும்பயணம்: அதனால் மாநிலத்தில் மீண்டும் தேர்தல் வந்தது. மு. கருணாநிதி வெற்றி வாய்ப்பு தங்கள் கட்சிக்கே என நம்பினார். ஆனால், அதிமுக வென்றது. எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக ஆனார். அன்றுமுதல் எம்.ஜி.ஆர் உயிரோடு உள்ளவரை கருணாநிதியால் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர முடிந்தது.

ஆனாலும் எம்.ஜி.ஆர் எளிதாக ஆட்சியைச் செய்யமுடியவில்லை. மிகச் சவாலான சக்தியாக வலம்வந்தார் மு.கருணாநிதி. அவர் நடத்திய 'நீதி கேட்டு நெடும்பயணம்' அதிமுக அரசை ஆட வைத்தது.

திருச்செந்தூர் முருகன் கோயிலின் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளையின் கொலைக்கு நீதிகேட்டு அவர் நடந்தார். இதே எம்.ஜி.ஆர். ஆட்சியில் வருமானவரி ஏய்ப்பு, சாராயத்திற்கு எதிரான போராட்டம் என திறமைமிக்க எதிர்க்கட்சியாக திமுக வலம் வந்தது.

ஆட்சியில் இல்லை என்றாலும் தனது தொண்டர்களைத் தக்கவைப்பதில் வல்லவராக வந்தார் மு.கருணாநிதி. அதற்கு அவரது பேச்சும் எழுத்தும் பெரிய பலமாக இருந்தன.

இந்திரா காந்தி படுகொலை: 1984 அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். 1987 டிசம்பர் 24 அன்று மறைந்தார். எம்.ஜி.ஆர். பிறகு ஜானகி முதல்வராக ஆனார். கட்சி பிளவு பட்டது. ஜெ அணி, ஜானகி அணி என இரண்டானது. ஜெவுக்கு சேவல் சின்னம், ஜானகிக்கு இரட்டைப் புறா மூலம் தேர்தல் நடந்தது. சேவல் வெல்லவே கட்சியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா.

நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் என பல மூத்த அரசியல் தலைவர்களோடு அரசியல் செய்துவந்த முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதி, தன்னைவிட இளையவரான ஜெயலலிதாவுடன் அரசியல் செய்ய வேண்டிய நிலை உருவானது.

அதிலும் அவர் அசராமல் நின்றார். ஒரு காலத்தில் பொய்யான ஊழல் புகாரால் ஆட்சியை இழந்த அவரது கட்சிதான், முன்னாள் முதலமைச்சரின் ஊழல் புகாரை நிரூபித்து சிறைக்கு அனுப்பியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+