‘தூள்’ பட பரவை முனியம்மா ஸ்டைலில் பவர் லிஃப்டிங் செய்யும் பாட்டி! 82 வயதில் இப்படி ஒரு சேலஞ்ச்!
சென்னை: 82 வயது பாட்டி பவர் லிஃப்டிங் செய்து வருவது தமிழ்நாட்டில் தலைப்புச் செய்தியாக மாறி உள்ளது. பலருக்கும் இந்தப் பாட்டி ஒரு ரோல் மாடலாக மாறி இருக்கிறார்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் கிட்டம்மா பாட்டிதான் வைரல். அவர் தனது 82 வயது அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கருக்கு சவால் விடும் அளவுக்கு பவர் லிஃப்டிங் செய்து மாநில அளவில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

என்னது? பல்லு போன காலத்தில் பவர் லிஃப்டிங்கா? என யாரும் கவுண்ட மணி ரேஞ்சுக்கு டயலாக் எல்லாம் பேசி காமெடி பண்ண ட்ரை பண்ண வேண்டாம். இந்த வயதில் அவர் தனது வயதை மறந்து சாதிக்க நினைத்ததே பெரிய விசயம்.
அதுவும் பாட்டி ஏதோ கோலப்போட்டியில் கலந்து கொண்டு 'கப்' வாங்கவில்லை. இளைஞர்களே கடப்பாரை நீச்சல் அடிக்கும் பவர் லிஃப்டிங் போட்டியில் கலந்து கொண்டு 47 கிலோ எடையைத் தூக்கிச் சாதித்துக் காட்டி இருக்கிறார்.
இதே இவரது வயதில் இந்தச் சாதனையை வெளிநாட்டில் யாராவது செய்துவிட்டு, அரைகுறையான உடையை அணிந்து கொண்டு போய் கொடுத்திருந்தால் அரசாங்கமே அவரைப் பாராட்டி பட்டம் கொடுத்திருக்கும்.
ஆனால், நம்ம பொள்ளாச்சி ஆச்சி புடவையைக் கட்டிக் கொண்டு சாதாரணமாக இந்தச் சாதனையைச் செய்து காட்டி உள்ளார்.
'தூள்' படத்தில் பரவமை முனியம்மா பாட்டி, தரையில் கிடக்கும் வெயிட் லிஃப்டிங் கம்பியைத் தூக்கி இடது கையால் வீசுவதைப் போல இந்தக் கிட்டம்மா பாட்டி 47 கிலோவைச் சுண்டு விரலால் ஊதித்தள்ளி உள்ளார்.

எப்படி இந்த அளவுக்குப் பாட்டிக்குத் திறமை வந்தது? அது பற்றி அவரது பேரன் ரித்க், "நான் ஜிம்முக்குப் போய் பவர் லிஃப்டிங் செய்து வருகிறேன். ஆனால் என் தம்பி வீட்டிலேயே சில உபகரணங்களை வாங்கி வைத்து தினம் பயிற்சி எடுத்து வந்தான்.
பாட்டி இருப்பது பொள்ளாச்சியில். ஆனால், அடிக்கடி எங்க பல்லட்டம் வீட்டுக்கு வருவாங்க. அப்போதுதான் இந்த ஆசை அவருக்கு வந்தது. வீட்டில் தினமும் பாட்டி சும்மா இருக்க மாட்டார். தினம் 10 குடம் தண்ணீர் தூக்குவார். 25 கிலோ மூட்டை எடுத்து பயிற்சி எடுப்பார்.
அதைப் பார்த்த பிறகுதான் என் தம்பி முறையான பயிற்சியாளரிடம் சேர்த்து விட்டான்" என்று பாட்டியின் பராக்கிரமங்களைப் பக்கம் பக்கமாகப் படிக்கிறார்.
பொள்ளாச்சி முத்துக்கவுண்டர் அவென்யூவில்தான் பாட்டி வசித்து வருகிறார் இவரது மகள் தேவி பல்லடத்தில் வசித்து வருகிறார். இவருக்கு ரோஹித், ரிதிக் என இரண்டு பேரன்கள் உள்ளனர்.
பாட்டியின் திறமைக்குப் பின்னர் உறுதுணையாக இருப்பவர் அவரது கணவர் வெங்கட்ராமன் அவர் பேசுகையில், "அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டேன். குடும்பத்தோடு பொள்ளாச்சியில்தான் இருக்கிறோம். வாரம் ஒரு முறை என் மகள் வீட்டுக்குப் போவோம்.
எனது பேரன்கள் தினம் உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்வார்கள். அப்படிப் போகும் போது வாரம் ஒரு முறை என் மனைவியை ஜிம்முக்கு அழைத்துப் போவார்கள். அப்படியே போக ஆரம்பித்தார்.

அங்கே அதிகமான பளுதூக்குவதைப் பார்த்துவிட்டு, பயிற்சியாளர் ஒருநாள் 'பாட்டி நீங்கள் கோயம்புத்தூரில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். அங்கே பங்கேற்றால், நல்ல பேரும் புகழும் கிடைக்கும்' என்றுதான் அழைத்துப் போனார்கள்.
அவர்கள் சொன்ன மாதிரியே போட்டியில் பங்கேற்கப் போனார். போட்டியில் 5வது இடம் கிடைத்தது.
வீட்டிலேயே சில உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளன. அதையும் அவர் தினம் பயன்படுத்திவந்தார். ஊட்டச்சத்துப் பொருள்கள் என்ன தேவையோ அதையும் நான் வாங்கிக் கொடுத்து வருகிறேன். அவரை உற்சாகப்படுத்தத் தேவையாக அனைத்து விசயங்களிலும் நான் உறுதுணையாக இருக்கிறேன்" என்கிறார்
கிட்டம்மா பாட்டியின் பயிற்சியாளர் சதீஷ்குமார். இவர் பல்லடத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். அவர் என்ன சொல்கிறார்?
"பாட்டி ஒருநாள் நானும் பளு தூக்கலாமா? என்று என்னிடம் கேட்டார். நான் அவரது உணவு முறைகள் பற்றி விசாரித்தேன். அவரது உணவு முறை முழுக்க பழங்காலத்து உணவுகள் நிறைந்ததாக இருந்தது. ராகி கூழ், கம்பங்கூழ், நாட்டுக் கோழி முட்டை எனத் தினம் சாப்பிட்டு வருகிறார் என அறிந்தேன்.
அதனால் தைரியமாக முதலில் 2 நாள்கள் பயிற்சி கொடுத்துப் பார்த்தோம். அவர் உற்சாகமாகச் செய்தார். அவர் 47 கிலோ எடையைத் தூக்கினார்.

அப்போதுதான் கோவையில் ஒரு போட்டி உள்ளது. அதில் கலந்துகொள்ளலாமா எனக் கேட்டேன். அவர் உடனே சம்மதித்தார். மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காகக் கோவை அழைத்துச் சென்றோம். அதில் பங்கேற்று 5வது இடத்தை பிடித்துள்ளார்" என்கிறார்
இவர் சொல்வதைப் போலப் பாட்டி கம்பங்கூழைத் தாண்டி முருங்கை இலை சூப், பேரீச்சம் பழம், முருங்கைகாய் கூட்டு எனப் பல வகைகளில் சத்தான உணவுகளை இயற்கையாக உட்கொண்டு வருவதைத் தனது பழக்கமாக வைத்துள்ளார்.
தனது சாதனைப் பற்றி பாட்டி கிட்டம்மா, "என் பேரன்கள் வீட்டில் தினமும் வெயிட் தூக்குவார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கும் ஆர்வம் வந்தது.

ஆகவே, நானும் ஒரு 25 கிலோ அரிசி மூட்டையைத் தூக்கிப் பழகினேன். அப்படித்தான் ஆர்வம் அதிகமானது. சரி, முறையாக ஜிம்முக்குப் போய் வெயிட் தூக்கிப் பழகலாம் என முடிவு செய்தேன்.
நாம் வயசைப் பார்க்கக் கூடாது. கம்பீரமாக மனத்திடத்துடன் இருக்க வேண்டும். அதனால்தான் என்னால் இதைச் செய்ய முடிந்தது. என்னைப் பார்த்து பெண்கள் பலரும் இதைச் செய்ய முன்வருவார்கள் என நினைக்கிறேன். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். எதற்கும் தலைவணங்கிப் போகக் கூடாது.என்னை மாதிரி துணிந்து நிற்கவேண்டும்" என்கிறார்.













Click it and Unblock the Notifications