பாஜக+பாமக=மெகா கூட்டணி! வடக்கு மேற்கில் எடப்பாடியின் புதுக்கணக்கு! ’சவுத்’தில் காத்திருக்கும் சவால்?
சென்னை : நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இடைவெளி இருக்கும் நிலையில், பொதுவெளியில் அதனைப் பற்றிப் பேசியதோடு, 'மெகா கூட்டணி; அமைக்கப்படுமென எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் பலமான எதிர்க் கட்சி தாங்கள் தான் என்பதை நிரூபிக்க எடப்பாடிக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒற்றைத் தலைமைக்கான மோதலில் கிட்டத்தட்ட 4 அணிகளாக இருக்கிறது அதிமுக. டிடிவி தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்து களம் இறங்கி இருக்கும் நிலையில், பொதுச்செயலாலர் என சசிகலாவும், இடைக்கால பொதுச் செயலாலர் என எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ்ஸும் அரசியல் செய்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால் அதனைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தனக்கே இருப்பதால் மிக தெம்பாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். 51வது ஆண்டு அதிமுக தொடக்க விழா என தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கும் அவர் அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மா.செ.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில் முந்திக் கொண்டவர் முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மா.செ.வுமான தங்கமணி.

நாடாளுமன்ற தேர்தல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக 51 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். பொதுக்கூட்டம் போல் அல்லாது மாநாடு போலவே பிரம்மாண்டம் காட்டி இருந்தார் தங்கமணி. நாமக்கல் மட்டுமல்லாது ஈரோடு கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். கூட்டத்தை பார்த்து மகிழ்ந்து போன எடப்பாடி பழனிச்சாமி கொங்கில் தனது செல்வாக்கு இன்னும் சரியவில்லை என மகிழ்ச்சி அடைந்ததோடு அந்த குஷியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.

பாஜக
அதாவது அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதற்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என உறுதியாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார். இதனால் பாஜக தலைமை அதிருப்தி அடைந்தாலும் வேறு வழியில்லாததால் அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்ளும் என அண்ணாமலை கூறினார். எடப்பாடி குறிப்பிட்ட மெகா கூட்டணி ஏற்கனவே இருந்த கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது.

பாமக அன்புமணி
வடக்கில் பலமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். குறிப்பாக அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அரியலூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனால் அவரது தனிப்பட்ட செல்வாக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கும் அதிகரித்து இருக்கிறது. அதனை பயன்படுத்தி வாக்குகளாக அறுவடை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தனது தலைமையிலான அணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைய வேண்டும் என விரும்புகிறார். இதற்காக கட்சி தலைவர்களுடன் மறைமுக பேச்சுவார்த்தை துவங்கி இருக்கிறது. அப்படி கூட்டணி மீண்டும் அமைந்தால் வடக்கில் அதிமுகவோடு பாமக கைகோர்க்கும் போது கணிசமான தொகுதிகளை பெற வாய்ப்பு இருக்கிறது.

கொங்கு கோட்டை
கரூர் ஈரோடு சேலம் நாமக்கல் திருப்பூர் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் ஏற்கனவே அதிமுக பலம் வாய்ந்த கட்சியாகவே இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இது எதிரொலித்தது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதற்கு காரணம் செந்தில் பாலாஜி கோவையில் பொறுப்பாளராக களம் இறங்கி இருப்பது. அதனை உணர்ந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள தனியரசு உள்ளிட்ட சிறிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆதரவையும் சேர்க்கும்போது வெற்றி கிடைக்கும் என நம்புகிறது. இதன் காரணமாக இழந்த செல்வாக்கை மீண்டும் கொங்கு கோட்டையில் பெற தீவிரம் காட்டி வருகிறார். இதனால் வடக்கு மேற்கில் அதிமுக மீண்டும் பலம் பெறும் எனவே கூறுகின்றனர் அதிமுகவினர்.

சவுத்தில் ஓபிஎஸ்
அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் அதிமுக ஓபிஎஸ் வருகை தந்தால் மட்டுமே ஓரளவு வெற்றி பெற முடியும் என்ற நிலைமையில் இருக்கிறது. தற்போதைய சூழலில் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சற்று ஆதரவு அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தினர் இடையே ஓபிஎஸ் செல்வாக்கு அதிகரித்து இருப்பதால் அங்கு எடப்பாடி கூட்டணி அமைத்தாலும் சமுதாய வாக்குகளை பெற முயல்வது கடினம். எனவே முக்குலத்து நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் வகையில் ஓபிஎஸ் கட்சிக்குள் வந்தால் ஆதரவு கிடைப்பது நிச்சயம்.

சிறிய கட்சிகள் ஆதரவு
அதே போல ஜான்பாண்டியன், கருணாஸ், ஜி கே வாசன், ஏசி சண்முகம் உள்ளிட்ட கட்சிகள் அமைப்புகளின் ஆதரவை பெறுவதைப் பொறுத்து தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரிக்கும் தற்போது மேற்கிலும் வடக்கிலும் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் அதிமுக, தென் மாவட்டங்களில் அதனை விரிவு படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை அளிக்க எடப்பாடி பழனிச்சாமி மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications