“சாதி மதமற்றவர் என்று சான்றிதழ் கேட்க.. பெரிய மனுசு வேணும்!” - பார்த்திபனை பாராட்டிய நீதிபதி
சென்னை: நடிகரும் பிரபல இயக்குநருமான பார்த்திபன், தனக்கு சாதி-மதமற்றவர் என்கிற சான்றிதழை வழங்க வேண்டும் என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த சான்றிதழை கேட்க மனசு வேண்டும் என்று பார்த்திபனை நீதிபதி பாராட்டியுள்ளார்.
பார்த்திபன் தனது மனுவில், "கடந்த 1958ம் ஆண்டு பிறந்த எனக்கு, பிறப்பு சான்றிதழ் இல்லை. எஸ்.எஸ்.எல்.சி முடித்த பிறகு, அதற்கான கல்வி சான்றிதழை நான் பெறவில்லை. எனவே என்னுடைய சாதி அல்லது மதத்தை உறுதி செய்யும் விதமாக என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சாதியும் மதமும் மொழி ரீதியிலான பிளவுகளும், நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில், இந்த சான்றிதழை கோருவதாக தெரிவித்திருந்தார்.
வழக்கு விசாரணை
முதலில், வேளச்சேரி வட்டாட்சியரிடம்தான் பார்த்திபன் விண்ணப்பித்திருந்தார். பின்னர், எல்லைப்பிரிவு அடிப்படையில் சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு அந்த மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இது தேர்தல் காலம் என்பதால், வருவாய்த்துறை அதிகாரிகள் பணியில் தீவிரமாக இருக்கின்றனர். எனவே மனுவை பரிசீலிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டதாக கூறிய பார்த்திபன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மனுவை ஆய்வு செய்து, தனக்கு சாதி-மதமற்றவர் என்கிற சான்றிதழை வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்ற மனுவில் கோரியிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு
இந்தத் தனித்துவமான மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி-மதமற்றவர்' என்கிற சான்றிதழை வழங்க வேண்டும் என்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். மேலும், இதுபோன்ற சான்றிதழை கேட்பதற்கு பெரிய மனது வேண்டும் என்றும் பாராட்டியுள்ளார். சான்றிதழ் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு வழக்கு விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
பின்னணி என்ன?
கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில், 'உஸ்தாத் பகத் சிங்' என்கிற திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பேசியிருந்த பார்த்திபன், "என்னுடைய முழு பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். நான் ஒரு நாயுடு பையன். சென்னையில் வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு தெரியாது. ஆனால், இந்த படத்தின் வெற்றி விழாவுக்கு வந்து உங்களை சந்திப்பேன்" என்று பேசியிருந்தார். அவர் தனது சுயசாதி குறித்து பெருமையாக பேசியிருந்தது, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து அவர் விளக்கமளித்திருந்தார்.
பார்த்திபனின் விளக்கம்
தனது பேச்சு சர்ச்சையானதையடுத்து, பார்த்திபன் விளக்கம் கொடுத்திருந்தார். அதில், "சத்தியமாக சொல்றேன். எந்த உள்நோக்கமும் இல்லாமல், எந்த லாப நோக்கமும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ, வசதிக்காகவோ, நான் அந்த இரண்டு வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. ஏதோ வாய் தவறி.. நான் முதல் முறையாக இத்தனை ஆண்டுகளில் சாதி பெயரை குறிப்பிட்டுவிட்டேன். பல திரைப்படங்களில் நானே விமர்சித்திருக்கிறேன். நானே அதை செய்வேனா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications