யார் எல்லாம் சமூக விரோதி? ரஜினி கருத்தில் தவறு இல்லை.. அருணா ஜெகதீசன் அறிக்கை பற்றி அண்ணாமலை!
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் தொடர்பாக குறிப்பிடும்போது, உறுதி செய்யப்படாத செய்திகளை பிடிவாதமாக நம்பும் தனிநபர்கள் பொதுவெளியை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் நுழைந்து காவலர்களைத் தாக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சேதப்படுத்தியதோடு ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புக்கும் தீ வைத்துள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.

ரஜினிக்கு அறிவுரை
இந்த கருத்துகளை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டு ரஜினிகாந்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதுகுறித்து அருணா ஜெகதீசன் ஆணையம் தரப்பில் இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு முன்பு ஏதேனும் சிசிடிவி காட்சிகளை பார்த்தீர்களா என்று கேட்டபோது, அப்படி ஒரு கருத்துக்கான அடிப்படையை உருவாக்கக் கூட ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ரஜினி பதிலளித்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் சமூகவிரோதி?
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சாதாரண மனிதர் சாலையில் போராட்டத்தில் ஈடுபடும் போது, கையில் ஒரு கல்லை எடுத்து எறிந்தால், அவர் என் அகராதியில் சமூக விரோதி தான். அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்த ஒரு மனிதன் சென்றால், அவரும் சமூக விரோதிதான். பொது சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினாலும் சமூக விரோதிதான்.

ரஜினி கருத்து பற்றி அண்ணாமலை
சமூக விரோதி என்று ரஜினிகாந்த் கூறிய கருத்துக்களில் எந்த தவறும் இல்லை. அதற்கு அவரிடம் ஆதாரம் கேட்பதற்கு, அவர் என்ன டிஜிபியா? அவர் தொலைக்காட்சியில் ஒரு விவகாரத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். காவல்துறை, உளவுத்துறை ஆதாரங்களை கொடுத்துவிட்டு ரஜினியிடம் கேட்டால், அவரால் கருத்து சொல்ல முடியும். ஆனால் அவர் ஒரு சாதாரண மனிதர். திருமாவளவன், சீமான், கனிமொழி, ஸ்டாலின் என பலரும் கருத்து கூறுகின்றனர்.

பாஜக கண்டனம்
அதனால் நடிகர் ரஜினிகாந்த் பற்றி அருணா ஜெகதீசன் ஆணையம் கூறிய கருத்துக்கு பாஜக வன்மையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறது. அந்த ஆணையத்திற்கு ரஜினி பற்றி கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை. பொதுவெளியில் இருப்பவர்கள் பார்த்து பேச வேண்டும் என்றால், தமிழ் சினிமா நடிகர்கள் பல கருத்துக்களை பேசுகின்றனர். பிரபலங்கள் கருத்து சொல்வதில் தவறு இல்லை. அதனால் ரஜினிகாந்த் பற்றி ஆணையத்தின் கருத்து தவறான முன்னுதாரணம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications