சுயக்கட்டுப்பாடு, பிறர் மீதான பரிவு, ஈகையை சிந்திக்கும் காலம்... ரம்ஜான் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்
சென்னை: ‛‛சுயக்கட்டுப்பாடு, பிறர் மேல் பரிவு, ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளை சிந்திக்க வைக்கும் காலத்தில் ரம்ஜான் கொண்டாடும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்'' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இஸ்லாமியர்களின் பெரு விழாவான ஈகை திரநாள் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக ரம்ஜான் கொண்டாட்டம் வீடுகளில் மட்டுமே நடந்தது.

இந்தாண்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்க துவங்கினர். சூரிய உதயம் முதல் மறைவு வரை உண்ணாமல், பருகாமல், தவறான வார்த்தைகளை பேசாமல், பாவ காரியங்களில் ஈடுபடாமல் நோன்பை கடைப்பிடித்தனர்.
பிறை தெரிந்ததையடுத்து இன்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்தது. மசூதிகள் மற்றும் பொது இடங்களில் முஸ்லிம் மக்கள் திரண்டு புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து கூறிக்கொண்டனர்.
ரம்ஜானையொட்டி அரசியல் கட்சி தலைலவர்கள், முஸ்லிம்கள் அல்லாத பிற மத தலைவர்கள், நண்பர்கள் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய , மாநில அமைச்சர்கள் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டர் மூலம் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛பிறை பார்த்தலில் தொடங்கி பிறை பார்த்தலில் நிறைவுறும் நோன்புக் காலம் ரமதான். சுய கட்டுப்பாடு, பிறர் மேல் பரிவு, ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளை சிந்திக்க வைக்கும் காலத்தில், இந்நன்னாளை கொண்டாடும் சகோதரர்களுக்கு என் வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications