சமாதானமா போக முடியாதுங்க.. என்கிட்ட சினேகன் மன்னிப்பு கேட்கணும்.. பாஜக ஜெயலட்சுமி கொந்தளிப்பு
சென்னை: கவிஞர் சினேகன் என்னை அவமானப்படுத்துவிட்டார், என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும் பாடலாசிரியருமான கவிஞர் சினேகன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பு புகாரை தெரிவித்தார்.
அதில், தான் வைத்துள்ள சினேகம் தொண்டு நிறுவனத்தின் பெயரை நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மோசடியாக பணம் பெற்றதாக புகார் கொடுத்துள்ளார்.
மாணவர்கள் இடையே சாதி மோதல்.. 'அரசுப் பள்ளிகளில் தான் பிரச்சனை’ - 'அழுத்தம்’ கொடுக்கும் பாஜக!

சினேகம் அறக்கட்டளை
இந்த சினேகம் அறக்கட்டளையை தான் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருவதாகவும் சினேகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பணமோசடி செய்ததால் வருமான வரித் துறையினர் எனக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர் என கூறியிருந்தார். அது போல் தான் இணையதளத்தில் உள்ள ஜெயலட்சுமி தனக்கு சொந்தமானதாக கூறப்படும் அறக்கட்டளையின் முகவரிக்கு விளக்கம் கேட்டு இரு முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் வரவில்லை.

முகவரி
அந்த இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள போன் நம்பருக்கு போன் செய்த போது ஒரு முகவரியை கொடுத்தார்கள். அந்த முகவரிக்கு போய் பார்த்தால் அங்கு அப்படி ஒரு அறக்கட்டளையே இல்லை என சினேகன் தனது புகாரில் கூறியிருந்தார். இதை நடிகை ஜெயலட்சுமி மறுத்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கீகாரம்
ஒரே பெயரில் இருவருக்கு எப்படி அங்கீகாரம் கொடுப்பார்கள்? வருமான வரித் துறையினர் சினேகனுக்கு போன் செய்ததாக கூறுவதும் பொய். நானும் அரசியலில் இருக்கிறேன், அவரும் அரசியலில் இருக்கிறார். இதனால் வேண்டுமென்றே என் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார். நான் தனிமையில் அமர்ந்து ஆண்களிடம் பேசி நன்கொடை வசூலிப்பதாக கூறும் சினேகன், அவரது வீட்டு பெண்களை தனிமையில் அமர வைத்து பேசிதான் வசூலிக்கிறாரா என விமர்சித்து இருந்தார்.

மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்
இப்படியாக மாறி மாறி புகார் கூறிய நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சட்டரீதியான கருத்துகளை பெற்று இருவரும் சமாதானமாக செல்லும்படி அறிவுறுத்தியதாக நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். தன்னை அவமானப்படுத்தியதற்கு சினேகன் மன்னிப்பு கேட்டாக வேண்டும். இல்லையென்றால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.