ஓரணியில் நடிகர்கள்.. விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் ரஞ்சனா நாச்சியார்! பாஜகவிலிருந்து விலகியவர்
சென்னை: "விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறேன்" என நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார். பாஜகவிலிருந்து நேற்று விலகிய ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைவதற்காக தவெக ஆண்டு விழா நடக்கும் அரங்கிற்கு வருகை தந்துள்ளார்.
நடிகை, வழக்கறிஞர், அரசியல்வாதி என்ற பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் ரஞ்சனா நாச்சியார். மும்மொழிக் கொள்கைத் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜகவில் இருந்து ரஞ்சனி நாச்சியார் விலகிய நிலையில், தற்போது தவெகவில் இணைய அக்கட்சியின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு வருகை தந்துள்ளார்.

தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். அவர் தவெகவில் இணையப் போவதாக தகவல்கள் பரபரத்தன. இந்நிலையில், அது உறுதியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதைக் கொண்டாடும் விதமாக ஆண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்விற்கு ரஞ்சனா நாச்சியார் வருகை தந்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சனா நாச்சியார், "விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைகிறேன். தமிழக வெற்றிக் கழகம் இனி தமிழகத்தின் வெற்றிக் களமாக மாறப்போகிறது. அதில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என முடிவெடுத்து இன்று தவெகவில் இணைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாஜகவில் இருந்து விலகியது தொடர்பாக ரஞ்சனா நாச்சியார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் இணைந்தேன். ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்போக்கு என்னை இன்னமும் பாஜகவில் இருக்க வேண்டுமா என கேள்வியெழுப்பியது. தேசியமும், தெய்வீகமும் குறுகிய வட்டத்தில் சுருங்கிப் போவதில் உடன்பாடு இல்லை.
என்னைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு இயங்க முடியவில்லை. என்னை சிறப்பாக இயக்க பாஜக தவறிவிட்டது. பெண்களுக்கு முன்னேற்றம் தரும் தலைமை என்ற பயணத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டேன்" என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications