எந்த சூழ்நிலையிலும் இணைக்கக்கூடாது..ஓபிஎஸ் உடன் போனவர்கள் போகட்டும்..திண்டுக்கல் சீனிவாசன்
சென்னை: ஓ.பன்னீர் செல்வத்தை மட்டுமல்ல அவரது அணிக்கு போனவர்களை மீண்டும் இணைக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும் என்றும், பழையன கழிந்தால்தான் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் என்றும் கூறினார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாகவும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் தனி அணியாகவும் அதிமுக செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று தொடர்ந்து கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வருகிறதா? இல்லையா? என்பதை பொறுத்து அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
அதன்படி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.50 மணியளவில் தொடங்கியது. கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை வழிநெடுக அதிமுக தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் போலி ஓ.பன்னீர்செல்வம் என்றும் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் காரசாரமாக கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தை மட்டுமல்ல அவரது அணிக்கு போனவர்களை மீண்டும் இணைக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சீனிவாசன், போனவர்கள் போனவர்களாகவே இருக்கட்டும் என்றும், பழையன கழிந்தால்தான் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் என்றும் கூறினார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அனைவருமே ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க அனைவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தத்தில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதை போலவே இருந்தது.












Click it and Unblock the Notifications